‘யுவராஜ், சிக்ஸர் அடிக்காதே!’

ஆல் இந்தியா ரேடியோ…

பாட்டியாலாவின் மோதிபாக் அரண்மனைப் படுக்கையறையில் வானொலி ஒலித்தது. படுத்தபடியே கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் மகாராஜா பூபிந்தர் சிங். சுற்றிலும் மருத்துவர்கள், நர்ஸ்கள், கூடவே சில முக்கிய அமைச்சர்களும். பம்பாய் பார்போர்ன் மைதானத்தில் அன்று முதல்தர கிரிக்கெட் மேட்ச், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும். நமது அணியில் இளவரசர் யத்விந்த்ர சிங்கும் இருந்தார்.

‘இந்தப் பாழாய்ப்போன இந்திய கிரிக்கெட்டுக்கு எவ்வளவோ செய்தும் எனக்குப் பலன் கிடைக்கவில்லை. சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை. போகட்டும். என் மகனுக்காவது அந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இளவரசர் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்துவிளையாட வேண்டும், அதுவும் கேப்டனாக. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ – இதுதான் பூபிந்தர் சிங்கின் ஆசையாக இருந்தது.

வானொலியில் வர்ணனை தொடர்ந்தது.

‘பாட்டியாலாவின் யுவராஜ் (இளவரசர்) இதோ மட்டை பிடிக்க வருகிறார்’ என்று வானொலி வர்ணனையாளர் சொன்னதுமே சட்டென எழுந்து உட்கார்ந்தார் பூபிந்தர். ‘மகாராஜா பதட்டமடைய வேண்டாம். எல்லாம் நம் ஏற்பாட்டின்படியே சரியாக நடக்கும்’ – ஊக்கமளித்தார் மருத்துவர் நரன்ஜின் சிங்.

‘பந்து வீச்சாளர் ஓடி வருகிறார். தாழ்வாக வீசப்பட்ட பந்து, அருமையாகத் தூக்கியடித்தார் யுவராஜ்… சிக்ஸர்!’

படுக்கையிலேயே துள்ளினார் மகாராஜா. சுற்றியிருப்பவர்கள் கைதட்டினார்கள். அரங்கில் பார்வையாளர்களின் ஆரவாரம் வானொலி வழியே இரைந்தது. ‘இதோ அடுத்த பந்தை வீச ஓடி வருகிறார். அளவு குறைந்து வந்த பந்து. மிட்-ஆன் திசையில் அழகாகத் தூக்கியடித்தார் யுவராஜ். இன்னுமொரு சிக்ஸர்!’

பூபிந்தரின் துள்ளல், மைதானத்தில் ஆரவாரம். அடுத்த பந்திலும் ‘…இறங்கி வந்து லாகவமாக அடித்தார் யுவராஜ். மீண்டும் ஆறு ரன்கள்!’ – இந்தமுறை மைதானத்தில் ஆரவாரம் குறைந்திருந்தது. பூபிந்தர் சிங்கின் முகத்திலும் உற்சாகம் மறைந்து கொஞ்சம் டென்ஷன் ஏறியிருந்தது. அடுத்து வீசப்பட்ட பந்திலும் யுவராஜ் சளைக்காமல் சிக்ஸர் அடிக்க, வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்தார் மகாராஜா. ‘யுவி, இதுக்கு மேலே சிக்ஸர் அடிக்காதே!’

மைதானத்திலிருந்த ரசிகர்கள் அதற்குமேல் யுவராஜைக் கேலிசெய்து கூச்சல்போட ஆரம்பித்தார்கள். எல்லாம் நாடகம் என்று புரிந்துபோனது எல்லோருக்கும். பந்தை நன்றாகப் போட்டுக் கொடுங்கள். யுவராஜ் முடிந்த மட்டும் அடித்துவிட்டுப் போகட்டும்! அப்போதுதான் அடுத்து இங்கிலாந்துக்கு வரவிருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக யத்விந்த்ர சிங் தேர்வாக முடியும். தனது செல்வாக்கைக் கொண்டு இங்கிலாந்து அணியோடு ரகசிய உடன்படிக்கை போட்டிருந்தார் மகாராஜா. ஆனால் மைதானத்தில் யுவராஜ் அதீத ஆர்வக்கோளாறோடு இறங்கி விளாச, திட்டம் பல்லிளித்தது.

பூபிந்தர் சிங்குக்கு ரத்த அழுத்தம் அதிகமாவதை அறிந்த மருத்துவர்கள், அவரைப் படாதபாடுபட்டு படுக்க வைத்தார்கள். யுவராஜ், 60 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மதிய நேரத்துக்குப் பிறகு யுவராஜின் முகம் மைதானத்தில் தென்பட்டபோது ரசிகர்களில் கேலி, கிண்டல், நக்கல் ஒலிகள், பேச்சுகள். யுவராஜால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அந்த நேரத்தில் யுவராஜின் காதுகளுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. ‘மகாராஜா உங்களை மைதானத்தில் இருக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.’

யுவராஜ், தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறினார். அத்தோடு கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்தும். எது எதையோ சாதித்த பூபிந்தர் சிங்காலும் தனது மகன் விஷயத்தில் சாதித்துக்காட்ட முடியவில்லை.

இந்த இடத்தில் ஒரு புள்ளிவிவரம். யத்விந்தர சிங், 52 முதல் தர போட்டிகளில் 83 இன்னிங்ஸ் விளையாடி எடுத்த மொத்த ரன்கள் 1629. அதில் ஏழு அரைசதங்கள், இரண்டு சதங்கள். பவுலிங்கில் எடுத்த விக்கெட்டுகள் 50. விளையாடிய ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் மட்டை பிடித்து எடுத்த ரன்கள் 84.