ஆஹா – முகலாயர்கள்!

முகலாயர்கள். இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் என்னுடைய புத்தகங்களில் ஒன்று.

முகலாயர்களுக்கு முந்தைய டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலிருந்து இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனில் இறந்துபோனது வரை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். மொத்தம் 330 ஆண்டு வரலாறு. வரும் வாரத்தில் புத்தகம் வெளிவந்துவிடும் என்று நினைக்கிறேன். 500 பக்கங்கள் கொண்ட புத்தகம் – விலை ரூ. 250.

முகலாயர்கள் குறித்த நான் பேசிய நிகழ்ச்சி, நாளை ஆஹா 91.9 பண்பலையில் பகல் 12.00 முதல் 1.00 வரை ஒலிபரப்பாகவிருக்கிறது. கேட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

எம்.ஆர். ராதா & தேவர் பாட்காஸ்ட்

எம்.ஆர். ராதா & தேவர் கிழக்கு பாட்காஸ்ட் – ஒலிவடிவம்.

கேட்க & டௌன்லோட் செய்ய…

மனமாற்றம்!

எல்லா டீவிக்களுக்கும் ரிமோட் உண்டு. எல்லா வானொலிகளுக்கும் கிடையாது. இருந்தாலும் ஆல் டைம் பாடல்களை வழங்கும் ஒரு எஃப்.எம். சேனலில் அளவுக்கு அதிகமாக விளம்பரம் வந்தால்கூட சட்டென .1லிருந்து .9க்குத் தாவி விடுவோம்.

ஆனால் பாடல்களே இல்லாமல் எஃப். எம்மில் ஒரு மணி நேரத்துக்கு நிகழ்ச்சி செய்ய முடியுமா? ஏதாவது ஒரு துறை குறித்தோ, பிரச்னை குறித்தோ இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஒரு மணி நேரம் கலந்துரையாடுவார்கள். கிழக்கு பாட்காஸ்ட்டின் இந்த கான்செப்டுடன் சில எஃப்.எம். சேனல்களை அணுகியபோது, ‘ரிஸ்க்கு மாமூ’ என்று அவர்கள் முகம் திருப்பிக் கொண்டார்களாம். ‘செஞ்சு பார்க்கலாம்’ என்று வாசலைத் திறந்துவிட்டது குமுதம் ஆஹா 91.9 எஃப்.எம்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வது முதல் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்வது, பின்பு அதை எடிட் செய்து ஒலிபரப்புக்காக தயார் செய்வது வரையிலான பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. ஆரம்பத் தடுமாற்றங்கள் நிறையவே இருந்தன. பேச எடுத்துக் கொள்ளும் பொருள், பேசும் நபரைப் பொருத்து நிகழ்ச்சியின் சுவாரசியம் அமைந்தது. கருத்துகள், விமரிசனங்கள் நிறையவே வந்தன.

‘பலர் ஒரே சமயத்துல பேசுறதுங்கிறது ஆல் இந்தியா ரேடியோவோட பழைய கான்செப்ட். அதை உடைக்கிறதுக்காகத்தான் எஃப்.எம்.லாம் வந்துச்சு. இரண்டு பேர் எப்பவாவது பேசுலாம். ஒருத்தரே கம்மியா பேசனாத்தான் நிகழ்ச்சி எடுபடும். இதான் இப்ப டிரெண்ட். நீங்க திரும்பவும் பழைய கான்செப்டுக்கே போறீங்க. பாடல்களும் இல்லை. சரி, செஞ்சு பாருங்க. எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்’ – ஆஹாவிலேயே ஒரு நண்பர் சொன்ன கருத்து இது.

பலவிதமான விமர்சனங்களைக் கடந்து கிழக்கு பாட்காஸ்ட் கடந்த ஆறு வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பத்ரியின் எண்ணங்கள் வழியாக மறுஒலிபரப்பும் நடக்கிறது. இன்னும் பல வாரங்கள் நிகழ்ச்சியைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்ச்சியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், சுவாரசியப்படுத்தலாம் என்று ஒவ்வொரு வாரமும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

‘ஒன் ஹவர் இப்படி ரெண்டு மூணு பேரு ஏதோ ஒரு டாபிக்ல மொக்கையப் போட்டா எவனும் கேக்க மாட்டான்’ – நிகழ்ச்சியை முழுவதுமாகக் கேட்கப் பொறுமையில்லாத என் நண்பர்களே அடித்த கமெண்ட் இது. ஊக்கப்படுத்தும் கமெண்ட்களும் எனக்கு நேரடியாகக் கிடைத்திருக்கின்றன. என் வீட்டின் அருகில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் சொன்ன கமெண்ட் முக்கியமானது.

‘நான் வித்யா நிகழ்ச்சி கேட்டேன். அவங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் கேக்குறப்போதான் அவங்கள புரிஞ்சுக்க முடிஞ்சது. திருநங்கைன்னு ஒரு வார்த்தை இருக்குதுன்னே உங்க ப்ரோகிராம்ல இருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இவ்ளோ நாளா அவங்கள அலின்னும் அந்த நம்பரைச் சொல்லியும்தான் கூப்டுக்கிட்டிருந்தேன். இனிமே கண்டிப்பா அவங்களை அப்படிக் கூப்பிடமாட்டேன், அந்த நம்பரைச் சொல்லமாட்டேன்.’

சின்னதாக ஒரு மனமாற்றத்தைக் கொண்டு வந்தாலே அது நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றிதானே!

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி இங்கே ஒலிவடிவில்.

மார்கெட்டிங் – 91.9

நாளை (ஆகஸ்ட் 30), கிழக்கு பாட்காஸ்ட், ஆஹா 91.9ல் ஒலிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘மார்கெட்டிங் துறை’ குறித்தது.

கிழக்கில் ‘மார்கெட்டிங் மாயாஜாலம்’ என்ற புத்தகத்தை எழுதிய சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பேசவிருக்கிறார். மார்கெட்டிங் என்றால் என்ன என்பது முதல், மார்கெட்டிங்கின் அவசியம், பல நிறுவனங்களின் மார்கெட்டிங் நுட்பங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. கேட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சதீஷ் குறித்து ஓர் அறிமுகம் : அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ. படித்தவர். மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். கவின் கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணி புரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM – சென்னை, ITM – சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் – கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியப்படும் நீதி யாதெனில், வன் ஒருவனுக்குத் தன்னைத் தானே மார்கெட்டிங் செய்யத் தெரிந்திருக்கிறதோ அவனே வெற்றியாளனாகிறான்.

சக்கர இனிக்குற சக்கர!

சர்க்கரை நோய்னா என்ன? அது யார் யாருக்குல்லாம் வர வாய்ப்பு அதிகம் இருக்குது, யாருக்கெல்லாம் வாய்ப்பு கம்மியா இருக்குது, வந்தா என்ன பண்ணனும், என்ன பண்ணக்கூடாது? அது உயிர்க்கொல்லி நோயா, அல்லது ஐஸ்ட் லைக் தட் கையாள முடியுமா, எய்ட்ஸை பத்தி மக்கள் தெரிஞ்சுகிட்ட அளவுக்கு டயாபடீஸ் பத்தி தெரிஞ்சு வைச்சுருக்காங்களா?

எல்லா கேள்விகளுக்கும் விடை தர்றதுக்காகவே பேசியிருக்கிறார் ஒரு சர்க்கரை நோய் நிபுணர் – டாக்டர் எஸ். முத்துசெல்லக்குமார்.

இது கண்டிப்பா ஒவ்வொருவரும் தவறவிடாம கேட்க வேண்டிய நிகழ்ச்சி, வர்ற ஞாயித்துக்கிழமை (ஆகஸ்ட் 16) – பகல் 12.00 – 1.00 மணி – 91.9 ஆஹா FMல – கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சில.

சென்னைல இல்லாதவங்களோ, அன்னிக்கு நிகழ்ச்சியைக் கேட்க முடியாதவங்களோ கோவிச்சுக்காதீங்க! பத்ரியோட எண்ணங்கள்ல ஒலி வடிவம் வெளிவரும்.

சக்கர இனிக்குற சக்கர… 😉