இன்னிக்கு தீபாவளியா? பொங்கலா?

…என்று நினைக்குமளவுக்கு அத்தனை படங்கள் ரீலிஸ் ஆகின்றன. எனக்கு தெரிந்து ஐந்து. தமிழ்ப் படம், கோவா, ஜக்குபாய் (தியேட்டர் ரிலீஸ்), கதை, தைரியம். பொங்கல் படங்கள் வந்து இரண்டே வாரங்களே ஆன நிலையில், புது படங்களுக்குப் போதுமான தியேட்டர் இல்லாத நிலை. படங்களை இரண்டாவது ரவுண்ட் ரிலீஸ் செய்யும் சைதை ஸ்ரீநிவாசா தியேட்டரில்  இன்று ‘தைரியம்’ ரிலீஸ் ஆகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் படம் ஆக விளம்பரம் செய்யப்பட்டு, ஐந்து நாள்களுக்கு முன்பு தமிழ்ப் படம் ஆக மாறிய லொள்ளு சினிமாவைத்தான் முதலில் பார்க்க வேண்டும் நினைத்திருந்தேன். இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு எங்கும் டிக்கெட் இல்லை. டிக்கெட் கிடைக்கும் என்பதற்காக அம்பத்தூர் மினிராக்கிக்கோ, ஈசிஆர் மாயாஜாலுக்கோ போக முடியாதே.

ஆன்லைனில் கோவா டிக்கெட்டுகளும் காலி. ஜக்குபாய் தியேட்டர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. இன்றைக்குள் தெரிந்துவிடும், எவையெல்லாம் பிழைக்கும் என்று.

சரக்கு இல்லாத படங்கள், தியேட்டரை விட்டு துரத்தப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அடுத்தடுத்த வாரங்களில் ஏராளமான புதிய, பெரிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக நிற்கின்றன (அசல், பையா, விண்ணைத் தாண்டி வருவாயா). ‘வேட்டை ஆரம்பாயிருச்சு டோய்’ என்று தொடை தட்டிக்கொண்டு நீண்ட நாள்கள் மொக்கை போட முடியாது. வேட்டையாடிய வரைக்கும் போதும் என்று கிளம்ப வேண்டியதுதான். பார்க்கலாம், எத்தனை தேறும் என்று.

‘நெகட்டிவ் மார்கெட்டிங்’ – கடந்த இரண்டு படங்களைப் போல, தனது மூன்றாவது படத்துக்கும் வெங்கட் பிரபு அதே உத்தியைத்தான் பயன்படுத்துகிறார். அதாவது படத்தை, படத்தோடு தொடர்புடையவர்களை மட்டம் தட்டிப் பேசியே கவனம் ஈர்ப்பது. கோவாவுக்கும் அந்த உத்தி கைகொடுக்கிறதா என்று பார்ப்போம். கோவா, Hangover படத்தின் காப்பியாக இருக்குமோ என்று ட்விட்டரில் வள்ளிதாசன் சந்தேகம் எழுப்பியிருந்தார். எனக்கும் அப்படியொரு சந்தேகம் உண்டு.

தமிழ்ப் படம் குழுவினரும் சேனல்களில் அதே நெகட்டிவ் மார்கெட்டிங் உத்தியைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாவம், ஜக்குபாய் குழுவினர். சன் டீவியில் கே.எஸ். ரவிக்குமார், சரத்குமார், ராதிகா மூவரும் படம் பற்றி பாசிட்டிவாக பேச முயற்சி செய்தார்கள். விரக்தியில் அவர்களையும் மீறி நெகட்டிவ் வார்த்தைகளே அதிகம் தென்பட்டன.

*

பொங்கல் ரிலீஸில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலில் நாணயம். தூத்துக்குடியில் பார்த்தேன். படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாள். காலைக் காட்சி. சூரிய கிரகணத்துக்கு பயந்து தியேட்டரில் சுமார் ஐம்பது பேர் மட்டும். டிக்கெட் விஷயத்தில் தூத்துக்குடி இன்னும் திருந்தவில்லை. என் பள்ளி நாள்களில் கௌண்டரில் பதினைந்து ரூபாய் கொடுத்துவிட்டு, கையில் 65 பைசாவுக்கு டிக்கெட் வாங்கியதாக ஞாபகம். இப்போது ஐம்பது ரூபாய் கொடுத்தேன். 14 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார்கள். வளர்ச்சி இருக்கிறது.

படத்தின் விமரிசனம் எழுதவெல்லாம் தோன்றவில்லை. படம் போரடிக்கவில்லை. அதேசமயம் நினைத்து வியக்குமளவுக்கு காட்சி, ஒன்றுகூட படத்திலில்லை. வழக்கம்போல, பிரசன்னா ஸ்கோர் செய்திருக்கிறார். சிபி ம்ஹூம். ஹீரோ இமேஜையும் கெடுத்துக் கொண்டு, வில்லனாகவும் சோபிக்க முடியாமல்… பாவம். சத்யராஜ் போலவே நடிப்பதற்கு அவர் போதுமே, அவர் வாரிசு தேவையில்லையே.

நான் பார்த்த இன்னொரு படம் ஆயிரத்தில் ஒருவன். சோனியா அகர்வால் சத்தியமாக நான் அதற்கு விமரிசனம் எழுதப்போவதில்லை. ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன் என்றுகூட சொல்ல முடியாது. எழுநூற்று ஐம்பதில் ஒருவன்தான் பார்த்தேன். படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் தாமதமாகத்தான் தியேட்டருக்குச் சென்றேன். படத்தில் 25 நிமிடங்களுக்கு மேல் கத்தரி போட்டுவிட்டார்கள் போல. எனவே எனக்கு படம் மிக சீக்கிரம் முடிந்ததுபோல தோன்றியது.

ரீமா சென், தனது பாண்டிய குல ப்ளாஷ்பேக்கைச் சொல்லும்போது பாண்டிய குல மன்னனாக காட்டப்படும் புகைப்படம் (இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.) ஒரு நொடியே வந்ததினால் எனக்கு சட்டென மனத்தில் பதியவில்லை. ஆனால் அதிர்ச்சியாக இருந்தது.

புகைப்படத்தில் இருப்பவர் யார்? ஆண்ட்ரியா சத்தியமாக, பாண்டிய குல மன்னன் அல்ல. ரேவா (மத்திய பிரதேசம்) சமஸ்தான மகாராஜா. 1854 முதல் 1880 வரை அதை ஆண்டவர். பெயர் ரகுராஜ் சிங். சிப்பாய் கலகத்தில் பிரிட்டிஷாருக்கு உதவியதன் மூலம் சில பிரதேசங்களை வெகுமதியாக பெற்றுக் கொண்டவர். மீன் கொடிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. ராஜபுத்திரர். இவரது முன்னோர்கள் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அவரது புகைப்படத்தோடு காட்டப்பட்ட மற்ற ‘பாண்டிய’ புகைப்படங்களையும் முன்பே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்கவில்லை. அவர்களும் பாண்டியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நல்ல ஓவியரை வைத்து, கற்பனையாக ஓவியங்களை வரைந்து காட்டியிருக்கலாம்.

வாழ்க, செல்வராகவனின் வரலாற்றுத் தொண்டு.

அப்பன் மவனே! அருமை யுவனே!

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில்.

சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.

யுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும்  மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி  ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்!)

மூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம்  படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.

அடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம்  பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால்  மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே! அருமை யுவனே! ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா?

ஓவர் டூ அப்பன்! வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச  காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா  பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான  இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக  ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று  சொல்லலாம்.

இந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு  மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி  ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.

ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே!
லிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,
தத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே!
…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி
– இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.

நாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின்  இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக்  காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும்  சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல  முடியும்போல.

கார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

மோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத்  தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் –  என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு  பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் – சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.

ஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது?

தனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.

பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா? இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.

தாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில்  அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே  வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் –  கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.

அங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ  காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – பாடல்.  கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று  தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச்  சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.

(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?)