ஜெமினி vs சிவாஜி : கணேசன்கள் சண்டைக்கோழிகளா?

சிவாஜி கணேசன் வெற்றியும் புகழும் அடைந்த காலத்தில் நடிப்பில் அவருக்கு இணையாகவும் அவரைக் காட்டிலும் மகத்தான புகழும் வெற்றியும் பெற்று பிரபலமாக திகழ்ந்தவர் ஜெமினி கணேசன் மட்டுமே.

சிவாஜி கணேசன் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக நடிப்புக்காக புகழ் பெற்ற காலத்தில் நடிக மன்னன் என்று ஜெமினியும் கீர்த்தி பெற்றது அபாரமானது. கணவனே கண் கண்ட தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற படங்களின் இந்தி ரீமேக்கிலும் ஜெமினியைப் போல் நடிக்க மும்பையில் ஆள் இல்லாததால்தான் ஜெமினியே நடித்து அகில இந்தியப் புகழ் பெற்றார்.

நிஜத்தில் கால்ஷீட் இல்லாத காரணங்களினாலோ தயாரிப்பாளரின் பணத்தட்டுப்பாடு காரணமாகவோ சிவாஜி கணேசன் நடிக்க இயலாத வேடங்களில் ஜெமினி கணேசனைத் தான் நடிக்க வைத்தார்கள். அப்படி ஜெமினி நடித்தப் படங்கள் அத்தனையும் மிகச் சிறந்த ‘க’ வரிசை வெற்றிப் படங்களாக அமைந்தன. கணவனே கண் கண்ட தெய்வம், கற்பகம், காவியத் தலைவி என்று வெவ்வேறு ஆண்டுகளில் ஒரு வெள்ளிவிழா கால கட்டம் முழுவதும் ஜெமினி கணேசன் சிவாஜி கணேசனின் நடிப்புப் போட்டியாளராக இருந்தார்.

நடிப்பில் சிவாஜிக்கு நேர் எதிர் ஜெமினி. எப்போதும் ஷாட்டுக்கு ஷாட் அரட்டை, லூட்டி செட்டை விட்டு வெளியேறுதல் எல்லாம் உண்டு.

‘சந்தர்ப்ப வசத்தாலே நான் நடிகன் ஆனேன். நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நடிகன் நான் இல்லை’ என்று சிவாஜியை மனத்தில் வைத்து ஸ்கூல் மாஸ்டர் ஷுட்டிங்கில் பந்துலுவிடம் கூறினார் ஜெமினி.

மிக மென்மையான நடிப்புக்கு ஜெமினியை விட்டால் ஆளில்லை. ஆனால் ஜெமினி கணேசனுக்கு நடிப்பு ஹாபியாகவே இருந்தது. அதனால் அவர் தன் படங்களில் ஏ.வி.எம். ராஜன் போன்ற அடுத்த வரிசை கதாநாயகர்களுக்குத் தன்னை விடவும் வலுவுள்ள, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் வாய்ப்பு கிடைத்தபோதுகூட அதை வரவேற்றார்.

அவ்வளவு ஏன், பட டைட்டில், போஸ்டர், சம்பளம், அதிக காட்சிகள், டூயட் பாடல்கள் என்று எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்து நடித்தவர் ஜெமினி கணேசன் மட்டுமே! இது தமிழ் சினிமாவில் இன்றுவரை எந்த நடிகரிடமும் காணப்படாத அரிய குணம்.

சிவாஜி கணேசனும் ஜெமினி கணேசனும் சேர்ந்து பதிமூன்று படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள். அவை பெண்ணின் பெருமை, பதிபக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, பாசமலர், கப்பலோட்டிய தமிழன், பார்த்தால் பசி தீரும், பந்தபாசம், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், உனக்காக நான், நாம் பிறந்த மண்.

இவற்றில் பெரும்பாலானவை தமிழ் சினிமா சரித்திரத்தில் தலையாய இடம் பிடித்தவை. சமூகம், சரித்திரம், புராணம் என்று ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. அந்தப் படங்களில் சிவாஜியை விட முக்கியத்துவம் குறைந்த கதாபாத்திரமாக இருந்தால்கூட அவருக்குக் கொஞ்சம் கூட சளைக்காமல் நடித்திருந்தார் ஜெமினி கணேசன். ஆனால் அதை சிவாஜி ரசிகர்கள் ஏற்கவில்லை.

ஆதலால் ஜெமினியின் ரசிகர்கள் அவர், சிவாஜி உடன் படங்களில் சேர்ந்து நடிப்பதையே விரும்பவில்லை. அதனால் 1962-க்குப் பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டது.

உனக்காக நான் படத்தில் சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்து படத்தை கெடுத்து விட்டதாக ஜெமினி ரசிகர்கள் கருதினார்கள். மேலும் ஆரம்பத்திலிருந்தே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த ஜெமினி, சிவாஜியுடன் இணைந்து நடித்ததை ஜெமினி ரசிகர்கள் அறவே வெறுத்து வந்தார்கள்.

ஆனால் ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனோடு நெருஙகிய நட்பு கொண்டு இருந்தார். சிவாஜி, ஜெமினி கணேசன் – சாவித்ரி ஒன்றாக குடும்பம் நடத்தியபோது அவர்கள் வீட்டுக்குச் சாப்பிட செல்வார். சாவித்ரியிடம் தனக்கு வேண்டியதை செய்து தரச் சொல்லி சாப்பிடுவார். சாவித்ரியும் சிவாஜி கணேசன் கேட்டவற்றை செய்து கொடுப்பார். அவர் சாப்பிடும் போது அருகில் இருந்து பரிமாறுவார். அந்த அளவு ‘பாசமலர்’களாக நிஜத்திலும் விளங்கினார்கள்.

பெண்ணின் பெருமை படம்தான் இரண்டு கணேசன்களும் முதன் முதலாக இணைந்து நடித்த படம். அந்தப் படத்தில்தான் சிவாஜியைவிட நல்ல கதாபாத்திரம் ஜெமினி கணேசனுக்குக் கிடைத்தது.

புத்திசுவாதீனமில்லாத மூத்த சகோதரன் வேடமும், அவனைத் துன்புறுத்தும் இளைய சகோதரன் வேடமும் இருந்தன. ‘உங்களுக்கு எந்த வேடம் வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்று ஜெமினியின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார் சிவாஜி.

ஜெமினி புத்தி சுவாதீனமில்லாத அண்ணனாகவும் அவரைத் திருத்துகிற அண்ணியாக சாவித்ரியும் நடித்தார்கள். படத்தில் ஜெமினி கணேசனின் நடிப்பே அற்புதமாக இருந்தது. ஜெமினி பேசப்பட்ட அளவு சிவாஜி பேசப்படவில்லை.

ஜெமினியின் தேர்வும் நடிப்பும் சிறப்பாக இருந்ததை உணர்ந்தார் சிவாஜி. மீண்டும் ஜெமினியுடன் நடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் அவர். ‘பதிபக்தி முதல் பந்தபாசம் வரையிலான படங்களில் சிவாஜியின் வேடமும் நடிப்புமே பிரதானமாக அமைந்தது.

முதலும் கடைசியுமாக சிவாஜியும் ஜெமினியும் இணைந்து பந்தபாசம் படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தார்கள். பந்தபாசத்துக்குப் பிறகு சிவாஜி – ஜெமினி வெற்றிக் கூட்டணி பிரிந்து விட்டது. ஏ.பி. நாகராஜனின் சில புராணப் படங்களில் ஜெமினி சிவாஜியுடன் இருந்தார் அவ்வளவே.

நன்றி : காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு (பா. தீனதயாளன்)

இன்று (மார்ச் 22) காதல் மன்னனுக்கு நினைவு நாள்

‘கூத்தடிக்க வேண்டாம்’ – எஸ்.எஸ். வாசன்

ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர்கள் சிலருக்கு ஒரு நாடகக் குழு ஆரம்பித்தால் என்ன என்ற ஓர் எண்ணம் தோன்றியது. ஆனந்த விகடன் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் ஒரு  நாடகக் குழுவை ஆரம்பித்தார்கள். முதல் முயற்சியாக தேவன் எழுதிய மிஸ்.மைதிலியை அரங்கேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

நாரதர் ஸ்ரீனிவாச ராவ்தான் நாடகத்தின் கதாநாயகன், எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் மகன் எஸ். வி. ரங்கா, விகடனில் சர்குலேஷன் இலாக்கா மேனேஜராக  பணியாற்றினார். அவருக்கு வில்லன் வேடம். கதை எழுதிய தேவனுக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டது. அவர்தான் கதாநாயகி  மிஸ். மைதிலியின் தந்தை.

விகடன் ஆர்ட் ஸ்டூடியோ இருந்த  பங்களாவின் மாடியில் உதய சங்கரின் கல்பனா படத்தின் நடன ஒத்திகை நடக்கும்  என்று சொன்னேன் அல்லவா? அவர் படப்பிடிப்பு முடிந்து புறப்பட்டுப் போய்விட்டதால்,  அந்த மாடி காலியாகத்தான் இருந்தது. அங்கேதான் எங்களுடைய நாடகத்தின் ஒத்திகை நடக்கும் எல்லோரும் தினமும் அலுவலக வேலை நேரம் முடிந்தவுடன் கரெக்ட்டாக ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். எங்களின்  தவறாத வருகைக்கு எங்களுடைய நடிப்பு ஆர்வம் மட்டுமே காரணமில்லை. தினமும் ரிகர்சலின் போது சுடச்சுட போண்டா சப்ளை ஆகும். அந்த போண்டாவும் சேர்த்துதான் எங்களை ஒத்திகைக்கு இழுத்தது.

நாடக அரங்கேற்ற தேதி நெருங்க நெருங்க எங்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எல்லாரும்  ஈடுபாட்டுடன் நாடக அரங்கேற்றத்துக்காக உழைத்தோம். ஜெமினி, விகடன் அதிபரான வாசனைத்தான் அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்க அழைத்திருந்தோம். குடும்பத்துடன் வந்திருந்து நாடகத்தைப் பார்த்து  ரசித்து, எங்களை ஊக்கு விக்க  வேண்டும் என்று அவரைக்  கேட்டுக் கொண்டோம். சம்மதித்தார். அரங்கேற்ற நாள் வந்தது.

சென்னை மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில்தான் அரங்கேற்றம். குறித்த நேரத்தில் வாசன் தனது குடும்பத்தினருடன்  நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். நாடகக் குழு ஆரம்பிக்க ஆர்வம் காட்டி, முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தவர்  விகடன் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் இருந்த   வைத்யநாதன். நாடகம் ஆரம்பித்தது. நடிகர்கள் அனைவருக்கும் மேடை நடிப்பில் முன் அனுபவம் ஏதுமில்லை என்பதால் சிலர் வசனம் பேசத் தடுமாறினார்கள். சிலர் வசனங்களை ஒப்பிப்பதுபோலப் பேசினார்கள். இன்னும் சிலரது நடிப்பு மிகவும் செயற்கையாக இருந்தது. நாடகத்தைப் பார்த்த வாசன், மேடை ஏறி ஏதோ இரண்டொரு வார்த்தைகள் சம்பிரதாயமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

மறுநாள் அலுவலகத்துக்கு வந்தவுடன் நாடகக் குழுவினர் அனைவரையும் கூப்பிட்டு அனுப்பினார். நேற்று எங்கள் நாடக முயற்சியைப் பற்றி பப்ளிக்காக ரொம்ப பாராட்டாவிட்டாலும், இப்போது நாலு வார்த்தை பாராட்டிச் சொல்லப்போகிறார்  என்ன நினைப்போடு சென்றோம். அனைவரும் வாசன் முன்னால் நின்று கொண்டிருந்தோம்.  பேச ஆரம்பித்தார் வாசன்.

‘ஆனந்த விகடன் மக்களுக்குச் செய்து கொண்டிருக்க நகைச்சுவைத் தொண்டே போதுமானது. நீங்கள் இப்படி எல்லாம் நடித்து, மேடையில் நகைச்சுவை என்று கூத்தடிக்க வேண்டாம். இத்துடன்  நாடகம் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.’

****

விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு.  சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்துதான் என்றுசொல்லலாம்.

ஓவியத்தில் ஆர்வமுள்ள குறும்பான சிறுவன், கும்பகோணம் ஓவியக்கல்லூரியின் மாணவன், மாலியின் சீடர், ஜோக் காட்டூனிஸ்ட், பக்தி ரசம் சொட்டும் ஓவியர், அரசியல் கார்ட்டூனிஸ்ட், வாசனின் மனம் கவர்ந்தவர், அட்வர்டைசிங் ஆர்ட் டைரக்டர், அட்வேவ் நிறுவனர், மென்மையான மனிதர் – கோபுலுவின் வாழ்க்கையை இப்படி தசாவதாரமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அவதாரத்திலும் அவரது அனுபவங்கள் அனைத்தும் மறக்க முடியாத இனிமையான பதிவுகள். வரலாறு என்றுகூட சொல்லலாம்.

ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளை திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்! 2009 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கிழக்கு பதிப்பகம் கொண்டுவரும் மிக முக்கியமான பதிவு – எஸ். சந்திரமௌலி தொகுத்துள்ள ஓவியர் கோபுலுவின் கோடுகளால் ஒரு வாழ்க்கை!

Making of Silk Smitha

சிலுக்கு.

இந்த ஒரு வார்த்தையை முன் வைத்தால் போதும். ஒவ்வொருவருக்கும் நினைவுகள் எங்கெங்கோ அலைமோதித் தள்ளாடும். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவைக் கட்டி ஆண்ட பேரரசி. நிஜ வாழ்வில்?

சிலுக்கின் வாழ்க்கையை புத்தகமாகக் கொண்டுவர முடிவெடுத்தபோது, பாரா அதை எழுதும் பொறுப்பை நண்பர் பா. தீனதயாளனிடம் ஒப்படைத்தார். தீனதயாளன் என்ற நாற்பது வயது இளைஞரைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘கடந்த ஐம்பது கால தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா.’

சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை என்ற புத்தகத்தை உருவாக்கும்போது தனக்குக் கிடைத்த அனுபவங்களை தீனதயாளனே தனது வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.
000
ஒரு பத்திரிகையாளனாக, சிலுக்கை பேட்டி எடுக்கக் கூட முயற்சி செய்திராத  எனக்கு, சிலுக்கின் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதும் பணி வந்து சேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலுக்கின் மரணம் குறித்த காரசாரமான கட்டுரை பிரசுரமாகியிருந்த தினமணிகதிரின் பழைய இதழ் ஒன்று மிக நீண்ட நாள்களாக என்னிடம் இருந்தது. அதுதான் ஆரம்பம். சிலுக்கை அவரது மரணத்திலிருந்துதான் பின்னோக்கிப் பின் தொடர ஆரம்பித்தேன்.

சிலுக்கின் ‘தூக்குக் கயிறு’ விஷயம் கிடைத்து விட்டது. ‘தொப்புள் கொடி’ விஷயத்தை எங்கே தேடுவது? யார், யாரைச் சந்திக்கலாம் என்றொரு பட்டியலைத் தயார் செய்தேன்.

சிலுக்கின் காலத்தில் பிரபல கதாநாயகியாக இருந்த நளினியை முதலில் சந்தித்தேன்.
‘ஹலோ அளவில்தான் எங்கள் பழக்கம்’ என்று முடித்துக் கொண்டார். ஏமாற்றம். நளினியின் மேக்-அப் மேன் சிலுக்கின் மேக்-அப் மேன் பற்றிய தகவலைக் கூறினார். சிலுக்கு கண்ணன் என்றழைக்கப்படும் அவரைத் தேடிப் போனேன்.

சினிமாவும் பத்திரிகைகளும் அறிமுகப்படுத்திய சிலுக்கைவிட, கண்ணன் எனக்கு அறிமுகப்படுத்திய சிலுக்கு, ஒரு தேவதை போல் இருந்தார். ‘நீங்கள் சிலுக்கு பற்றித்தானே சொல்லுகிறீர்கள், சிவாஜி பற்றி இல்லையே?’ என்று பலமுறை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறேன்.

வினு சக்கரவர்த்தி சொன்ன விஷயங்கள் சிலுக்கு என்ற ‘மனுஷி’யைக் கண்முன் நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் என்.கே. விஸ்வநாதன் கூறிய பல தகவல்கள் சிலுக்கின் மறுபக்கத்தை விளங்க வைத்தது.

சிலுக்கு நல்லவரா, கெட்டவரா? தேவதையா, பிசாசா? – என்கிற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான். அவரை மனுஷியாகப் பார்த்த அத்தனை பேருக்கும் அவர் நல்லவராகவே இருந்திருக்கிறார். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம்தான். சந்தேகமே இல்லை. நடித்துக் கொண்டிருந்த காலம் முழுவதும் திரையுலகில் அவர் யாராலும் நெருங்கமுடியாத ஒரு நெருப்புப் பந்தாகத்தான் இருந்திருக்கிறார். அது, அவர் வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்ட இமேஜ் என்பது தெரியவந்தபோதுதான், அப்படியொரு இமேஜை உருவாக்கிக்கொள்ள நேர்ந்த அவசியம் என்ன என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.

அவருடன் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் தேடித்தேடிச் சந்திக்கத் தொடங்கினேன்.

‘என்னிடம் சிவாஜி பற்றிக் கேளுங்கள், கலைஞர் பற்றிக் கேளுங்கள், காமராஜர் பற்றிக் கேளுங்கள். சிலுக்கைப் பற்றிக் கேட்கலாமா?’ என்று தொலைபேசியிலேயே ஒதுங்கிக் கொண்டார் முக்தா சீனிவாசன்.

நாசரைச் சந்தித்தேன். ‘சிவாஜிக்கு அப்புறம் சிலுக்கு பற்றியா எழுதப் போகிறீர்கள்? என்ன வரிசை உங்களுடையது? சிலுக்கு பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்? அவரை உங்கள் புத்தகத்தில் எப்படிக் காட்டப் போகிறீர்கள்? நம் நாட்டில் எந்த சுயசரிதையும் வாழ்க்கை வரலாறும் நிஜமான விஷயங்களை அப்பட்டமாகச் சொல்வதில்லை’ என்று விசனப்பட்டார்.

வில்லனாக இருந்து ஹீரோவாகி, இன்று தன் மகன் காலத்திலும் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வரும் ஒரு நடிகரிடம் பேசினேன். உடனே வரச் சொன்னவர், அடுத்த ஓரிரு நொடிகளில், ‘சிலுக்கு தற்கொலை செய்து கொண்டு இறந்த நடிகை. எனவே பேட்டி வேண்டாம்’ என்று தொலைபேசியை வைத்து விட்டார்.

‘சிலுக்கு ஒரு கவர்ச்சி நடிகை. அவரைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்? வேண்டாமே அந்தப் பாவம்’ என்றார் ஒரு சீனியர் நடிகர்.

பல சினிமா ஆண்கள் இப்படி ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் பல சினிமா பெண்கள் மனம் திறந்து பேசினர்.

‘சிலுக்கு பற்றி என் கருத்துகள் இல்லாமல் இந்தப் புத்தகம் வரக்கூடாது’ என்று கண்ணீருடன் பல விஷயங்களைப் பேசினார் மனோரமா. புலியூர் சரோஜா, வடிவுக்கரசி, சிலுக்கின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினி ஆகியோரும் மறுக்காமல் பல தகவல்களைப் பகிர்ந்து உதவினர்.

இந்தப் புத்தகத்துக்காக தகவல்கள் தந்து உதவிய எஸ்.பி. முத்துராமன், கங்கை அமரன், பாண்டியராஜன், ஒளிப்பதிவாளர் பாபு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் ஆகியோருக்கு என் நன்றி.

சிலுக்கோடு சமகாலத்தில் போட்டி போட்ட நடிகை அனுராதா வீட்டுக்குப் போனேன். நான் அங்கே அனுராதாவைக் காணவில்லை. ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் கணவர் ஜெமினிக்குப் பணிவிடை செய்யும் அஞ்சலி தேவியையைப் போல் தன் கணவருக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு அன்பான மனைவியைக் கண்டேன். பல ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி இன்னும் முழுமையாகக் குணம் அடையாத தன் கணவர் சதீஷுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் அனுராதா. இன்று தெலுங்கு சினிமாக்களில் கவர்ச்சி நடனம் ஆடும் அவர்களது மகள் அபிநயஸ்ரீ, உள்ளிருந்து வந்து தன் அப்பாவின் காலருகே அமர்ந்து கொண்டார். அனுராதா சிலுக்கின் கடைசி நாள்கள் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சமூகத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே பதிவாகியிருக்கும் ஒருவரைப் பற்றிய எண்ணங்கள் பெரும்பாலும் நிஜமானதாக இருப்பதில்லை.

சிலுக்கின் விஷயத்திலும் அப்படித்தான். என்னால் முடிந்தவரை ‘நிஜமான சிலுக்கை’ இந்தப் புத்தகத்தில் வரைந்துகாட்ட முயற்சி செய்திருக்கிறேன். இம்முயற்சிக்கு உதவிய அத்தனை பேருக்கும் என் நன்றி.

பா. தீனதயாளன்
16-02-2007.

000

சிலுக்கு ஒரு பெண்ணின் கதை : புத்தகத்தை வாங்க

செங்கிஸ்கான் எங்க தாத்தா!

The American Journal of Human Genetics என்ற ஆய்வு இதழ், மார்ச் 2003ல்  ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஐரோப்பியா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 2000 பேரிடம் மரபணு சோதனை  நடத்தினார்கள். கிடைத்த முடிவு இது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல ஆண்களுக்கு கிட்டத்தட்ட ஒரே  மாதிரியான மரபணு அம்சங்கள் இருந்தன. சோதனையை விரிவாக்கியதில், பசிபிக் முதல் காஸ்பியன் கடல்வரை பதினாறு மில்லியன் ஆண்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரிய வந்தது.

அதாவது, கிட்டத்தட்ட ஆயிரம் வருடத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரிடமிருந்து தோன்றிய சந்ததி அது. எந்தப் பகுதியில்? யார் அந்த மனிதர்? மங்கோலியா. விடை கிடைத்ததுமே உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.  செங்கிஸ்கான்!

இன்று, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரையைச் சார்ந்தவர்கள்.

0

நெப்போலியன் பற்றி பல இடங்களில் படித்திருக்கிறேன். அலெக்ஸாண்டர் பற்றியும் படித்திருக்கிறேன். அதேவரிசையில் உள்ள மாவீரரான செங்கிஸ்கான் பற்றி தெரிந்துகொள்ளவும் ஆசைப்பட்டேன். சொல்லப்போனால்,  சில பத்திரிகைகளில் வந்த துணுக்குகள், தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள் தவிர – வேறு எதிலுமே (தமிழில்) செங்கிஸ்கான் தட்டுப்படவில்லை.

2008ல் செங்கிஸ்கான் பற்றிய புத்தகம் எழுதவேண்டும் என்று ஒரு திட்டம் வைத்துக் கொண்டேன். ஜனவரி முதலே அதற்கான விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். புத்தகங்கள் வாங்கினேன். டாகுமெண்டரி, திரைப்படங்கள் தேடிப் பிடித்தேன். (அதிலும் பிபிசி வெளியிட்டுள்ள டாகுமெண்டரி ஈடுஇணையற்றது.) மே மாதம் செங்கிஸ்கான் புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன்.

எழுதுவதற்குச் சவாலாகத்தான் இருந்தது. குறிப்பாக மங்கோலிய கலாசாரத்தை சரிவரப் புரிந்துகொண்டால்தான் அடுத்தடுத்த வரிகளை எழுத முடியும் என்ற அளவிலான சவால். அப்புறம் மங்கோலியப் பெயர்கள் – டெமுஜின், ஜமுக்கா, யெசுகெய், சாகெட்டெய், டயாங் கான் – இப்படி ஆள்களின் பெயர்கள். கெரியிட், ஜெர்செட், நய்மன், போர்ஜிகின் – இப்படி இனக்குழுக்களின் பெயர்கள். ஆனான், கெர்லென், புர்கான் கல்டுன் – இப்படி இடங்களின் பெயர்கள். எல்லாமே நாக்கையும் மூக்கையும் சேர்த்துப் பயன்படுத்தி உச்சரிக்க வேண்டிய  வார்த்தைகள். எது இடம், எது இனம், எது பெயர் என்று பாகுபடுத்திப் புரிந்துகொள்வதற்குள் அய்யய்யோ!
தனியாக நோட்பேட் ஒன்றில் இம்மாதிரி வார்த்தைகளை எல்லாம் தனித்தனியாக விளக்கங்களுடன் எழுதிவைத்து சில நாள்களுக்கு மனப்பாடம் செய்தேன்.

எழுதும்போதே எனக்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது இந்தப் பெயர்கள்தான் – ‘வாசகர்கள் மனத்தில் பெய ர்கள் நிற்குமா? குழப்பத்தைக் கொடுக்குமா? வாசிப்பு வேகத்தைக் கெடுக்குமா?’ அதற்காக டயாங் கானை  ஷாருக் கான் என்று பெயர் மாற்றி எழுத முடியாதே. மங்கோலியக் கடவுளான தெங்ரி மீது பாரத்தைப் போட்டு  விட்டு தொடர்ந்து எழுதினேன்.

டெமுஜின் என்றழைக்கப்படும் செங்கிஸ்கானின் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் சுவாரசியத்துக்கோ,  விறுவிறுப்புக்கோ பஞ்சமில்லை. ஆனால் செங்கிஸ்கானின் நிஜப்பெயர் டெமுஜின்தான். செங்கிஸ்கான் என்பது மங்கோலியா என்ற ஒரு தேசத்தை அவர் உருவாக்கும்போது கொடுக்கப்படும் பட்டம். அதன் அர்த்தம்  மங்கோலியர்கள் மிகவும் மதிக்கும் ஓநாய்களின் தலைவன்.

அதற்காக ஹாஃப் வே ஓப்பனிங் எல்லாம் கொடுத்து, ‘அவர்தான் செங்கிஸ்கான்’ என்று ஓப்பனிங் சாங் வை த்து, ப்ளாஷ்பேக்குக்குச் சென்று… எழுதும் சரித்திரப் புத்தகத்தின் அழகை நான் பாழாக்க விரும்பவில்லை.

ரிஸ்க்தான் எடுத்தேன். புத்தகத்தில் கிட்டத்தட்ட பாதியில்தான் டெமுஜின், செங்கிஸ்கான் ஆகிறார். ‘என்னய்யா  இது, ஏமாத்தறான். பக்கம் பக்கமா போய்க்கிட்டே இருக்குது, இன்னும் கதாநாயகனே வரலை’ என்று  வாசகன் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டால்? ஆகவே புத்தக்கத்தின் முதல் சேப்டரிலேயே டெமுஜின் = செங்கிஸ்கான் என்று பொடி எழுத்தில் அடிக்குறிப்பு கொடுத்து நிம்மதி அடைந்தேன்.

புத்தகத்தை எழுதி முடிக்க இரு மாதங்கள் பிடித்தன.

0

புத்தகம் வெளியாகி நான்கு மாதங்கள் ஆகின்றன. நெப்போலியனை, அலெக்ஸாண்டரை விரும்பும் அளவுக்கு செங்கிஸ்கானையும் தெரிந்துகொள்ள வெகுஜன வாசகர்கள் விரும்புவார்களா என்று எனக்குள் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்தது. என் சந்தேகம் நிஷா புயலுக்கு முன்பாகவே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. கிழக்கின்  மார்க்கெட்டிங் துறை நண்பர்கள் கொடுக்கும் ரிப்போர்ட், கருத்துகள் எல்லாம் என்னை ஆச்சரியப்படத்தான்  வைக்கின்றன. செங்கிஸ்கானை அமோகமாக விரும்பும் தமிழ் வாசகர்களுக்கு என் நன்றி.

0

வெள்ளிக்கிழமை (26 டிசம்பர்) மாலை ஆறு மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் புத்தகத்தை விமர்சிக்க இருக்கிறார் நண்பர் ஐகாரஸ் பிரகாஷ். அன்றைய அறிமுகத்திற்கான இன்னொரு பு த்தகம் நண்பர் குணசேகரன் எழுதிய இருளர்கள் – ஓர் அறிமுகம். அதை விமர்சிக்க இருப்பவர் நண்பர் பிரவாஹன். இரண்டு புத்தகங்களுமே இரு இனங்கள் குறித்தவை. இன மோதல்கள் வராது என்று நம்புவோம்.

வெள்ளிக்கிழமை விழாவுக்கு மங்கோலியர்களின் ஆஸ்தான வாகனமான குதிரையில் அலுவலகத்துக்குச் செல்லலாம் என்றொரு ஆசை. என்னைப்போலவே ஆசைப்பட்டு குணசேகரனும் இருளர்களின் செல்லப்பிராணியோடு வந்துவிட்டால்?

திடுக் திடுக் – ஞாநி – கிழக்கு மொட்டைமாடி

கிழக்கு மொட்டைமாடியில் இன்று இரண்டாவது கூட்டம். சிறப்பு அழைப்பாளர் ஞாநி. பொருள் :  மும்பை பயங்கரவாதத் தாக்குதல். என்ன பேசினார்கள், எந்த மாதிரியான விவாதம், தப்பு, சரி போன்ற பல விஷயங்களை கண்டிப்பாக மற்ற பல இணைய நண்பர்கள் கண்டிப்பாக எழுதுவார்கள்  (எழுத ஆரம்பித்திருப்பார்கள்). என்னுடைய தனிப்பட்ட பார்வையில் சில ‘பொது’ விஷயங்கள்.

* ஆரம்பத்தில் வெகு சாதாரணமான வார்த்தைகளோடு கூட்டம் ஆரம்பித்தது. கடைசி வரிசையில்  உட்கார்ந்திருந்த எனக்கு கொட்டாவி வந்தது. காபி எப்போது கிடைக்கும் என்று காத்திருந்தேன்.

* ஞாநியின் முதற்கட்ட பேச்சு முடிந்தபிறகு, விவாதம் ஆரம்பித்தது. விவகாரங்களும். இருக்கையை உதறி எழுந்த நபர்களிடமிருந்து உத்வேகக் கேள்விகள். நிமிடத்துக்கு நிமிடம் சூடு கூடியது. மொட்டைமாடியில் நிறைய வேண்டாத கட்டைகள், கிரில் கம்பிகள் வேறு கிடந்தன. எனக்கு  சட்டக்கல்லூரி காட்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன.

* கிட்டத்தட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு போல சூழல் மாறியிருந்தது. கேள்வி கேட்ட சிலர்  காலில் ஷூ அணிந்திருந்ததும் என் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.

* கேள்வி கேட்டுவிட்டு சட்டென அங்கிருந்து நகர்ந்து ஓரம்போன ஒருவர், செல்பேசியில் கொஞ்ச  நேரம் பேசிவிட்டுத் திரும்பினார். சிறிதுநேரம் கழித்து மொட்டை மாடியிலிருந்து கீழே எட்டிப்  பார்த்தேன். ஆட்டோ(க்கள்) தென்படவில்லை.

* நான்கைந்து விமானங்கள் மொட்டைமாடியைக் கடந்தன. கொஞ்சம் திகிலோடுதான் மேலே  பார்த்தேன். எதுவும் தாழ்வாகப் பறக்கவில்லை.

* மும்பையை விட்டு பேச்சு எங்கெங்கோ திசைமாறிப்போனது. மதக்கலவரம், சாதிக்கலவரம் உருவாகிவிடுமோ என்றொரு பயம் வந்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதிலும் சிலர்  அடிக்கடி பின்னங்கழுத்துக்கு அருகே கையைக் கொண்டு சென்றபோது அடிவயிற்றில் பக்.

* குமுதம், ஆனந்தவிகடன், தீம்தரிகிட, ஒற்றை ரீல் – ஞாநிக்கான பிரத்யேக கேள்விகள் தொடுக்கப்பட்டு அதற்கான விளக்கங்கள் சென்றுகொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் இருவருக்கிடையே வேறொரு விவாதம். ‘ஞா’வும் ’நி’யும் தனித்தனியே தமிழெழுத்துகள்தான். ஆனால்  ‘ஞாநி’ தமிழ் வார்த்தை இல்லை. இதுக்கு என்ன சொல்லுறீங்க?. ‘யாரெல்லாம் உண்மையான  தமிழன்’ என்ற பிரச்னை கிளம்புவதற்குரிய அறிகுறிகள் முளைத்தன.

இந்த மொட்டை மாடிக் கூட்டத்தின் முடிவில் நான் எடுத்த முடிவு : இதுவரை நான் டூவிலர் காப்பீடு  தவிர வேறெதுவும் எடுக்கவில்லை. அடுத்த கூட்டத்துக்குள் தனிநபர் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்.