சென்னை புத்தகக் கண்காட்சி 16.01.2014

விற்க அதற்குத் தக!

பொதுவாக காணும் பொங்கல் அன்று சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டும். மாலை ஆறு மணிக்கு மேல் உள்ளே நுழையும்போதே மூச்சு முட்டும். ஆனால், இன்று?

புத்தகக் கண்காட்சி அரங்கினுள்ளே ஒரு புட்ஃபால் கோல் போஸ்ட்டையும் உள்ளடக்கி கடைக்கள் அமைத்துள்ளார்கள். அந்த கோல் போஸ்ட்டைக் குறிவைத்து சில கடைக்காரர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். (வயிற்றெரிச்சலை வேறு எப்படிச் சொல்ல?)

‘வருடந்தோறும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது’ என்பது பொதுவாகச் சொல்லப்படும் ஸ்டேட்மெண்ட். ‘அது பொய்’ என்று சொல்கிறது நிகழ்காலம்.

‘சுத்தமா விளம்பரமே இல்லை. வழக்கத்தைவிட விளம்பரம் ரொம்பக் குறைவு. மக்களுக்கு புக்ஃபேர் நடக்குறதே தெரியலை’ என்பது ஒரு பதிப்பகத்தாரின் கருத்து. ‘பொருளாதார மந்தம். புக் விலையெல்லாம் அதிகமாயிட்டே போகுது. அதான் மக்கள் வாங்குறதைக் குறைச்சுக்கிட்டாங்க’ என்பது ஒரு கடைக்காரரின் ஸ்டேட்மெண்ட். ‘பொங்கலுக்கு வெளியூருக்குச் சென்றிருக்கும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட சென்னைவாசிகளெல்லாம் நாளைக்குள் ஊர் திரும்பிவிடுவார்கள். சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் சந்தோஷப்பட வைக்கும்’ என்பது என் எண்ணம்.

இன்று, இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கினேன். எம்.ஜி.ஆர். பேட்டிகள் தொகுப்பு. கிருபாகரன் என்பவர் தொகுத்துள்ள இந்தப் புத்தகத்துக்காக பல பேட்டிகளைக் கொடுத்து உதவியவர், எனது நீண்ட நாளைய நண்பரான ஜெயபாபு. இவர் பழைய பத்திரிகைகள், புகைப்படங்கள் சேகரிப்பாளர். புத்தகம் பல இடங்களில் கிடைக்கிறது.

வாங்கிய இரண்டாவது புத்தகம், அடைபட்ட கதவுகளின் முன்னால். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் அனுபவங்களைச் சொல்லும் புத்தகம். அந்தத் தாயார் ஸ்டாலில் இருந்தார்கள். பில் போட்டுக் கொடுத்தார்கள். (திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றிய பதிப்பகம் ஸ்டால் எண் 273 – 94430 58565.)

டிஸ்கவரி புக் பேலஸில் சட்டென ஒரு புத்தகத்தின் தலைப்பு கவர்ந்திழுத்தது. ‘விற்க அதற்குத் தக!’ – விற்பனையாளர்களுக்கான கையேடு. ஆனால், அட்டை வடிவமைப்பும், புத்தக வடிவமைப்பும் ஆக மோசம். விற்பனை குறித்த அந்தப் புத்தகம் தன்னைத் தானே விற்றுக்கொள்ளும் தரத்தில் இல்லாதது சோகமே.

டிஸ்கவரி புக் பேலஸில் கண்ட இன்னொரு விஷயம், பொன்னியின் செல்வன் ஆடியோ சிடி. எம்பி3 வடிவில். ஆறு சிடிக்கள் என்று நினைக்கிறேன். சுமார் 78 மணி நேரம் ஓடக்கூடியது. நல்ல முயற்சி. (ஸ்டால் எண் 700)

என்னுடைய புத்தகங்களில் சென்ற வருட வெளியீடான வெளிச்சத்தின் நிறம் கருப்பு – இந்த வருடமும் நல்ல வேகத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதை வாங்கிய ஒரு தம்பதி என்னிடம் பேசினார்கள். ‘உங்க புக்ல கிளியோபாட்ராதான் முதல்ல படிச்சோம். கீழ வைக்கவே முடியாம படிச்சு முடிச்சுட்டுதான் எழுந்தோம். வரலாறை இவ்வளவு சுவாரசியமா சொல்றது ஆச்சரியமான விஷயம்’ என்று தங்கள் கருத்தைச் சொன்னார்கள். இது போன்ற வாசகர்கள்தான் அடுத்த ஒரு வருடத்துக்கு இயங்கத் தேவையான சக்தியை, உற்சாகத்தைக் கொடுக்கிறார்கள். எதற்கு உழைக்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் என்பதற்கு ஓர் அர்த்தம் வேண்டுமே.

 

 

சென்னை புத்தகக் கண்காட்சி 11.1.14

கோபிநாத் எழுதிய கிமு-கிபி!

இன்று மதியத்துக்கு மேல் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தேன். பார்க்கிங்கில் வரிசை கட்டிய பைக்குகளே ‘நல்ல கூட்டம்’ என்று சொன்னது. கடைகளுக்குள் நெரிசல் உள்ள அளவு கூட்டம் இல்லையென்றாலும், இன்று வந்த மக்கள் ‘வாங்கும் கூட்டமாக’ இருந்ததில் மகிழ்ச்சி.

இந்த முறை ஸ்டால்கள் அமைப்பில் சிறு மாற்றம். வரிசைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, நீளத்தை அதிகமாக்கி விட்டார்கள். வழக்கம்போல தரை அமைப்பு மட்டும் ஆங்காங்கே ‘மரண பயத்தைக்’ காட்டத் தவறவில்லை.

என் புத்தகங்கள் வழியாக எனக்கு அறிமுகமான வாசக நண்பர்கள் சிலரைச் சந்திப்பதற்காகத்தான் இன்று கண்காட்சிக்குச் சென்றேன். ஆகவே இரண்டோ, மூன்றோ வரிசைகள் மட்டும் நடந்தேன். மேலோட்டமாக மட்டும் புத்தகங்களைப் பார்த்தேன். இன்னும் உள்ளே குதிக்கவில்லை.

கிழக்கில் ஹரன் பிரசன்னாவைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். இந்த வருடம் அவர்கள் திட்டமிட்ட புத்தகங்கள் அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்டன. மருதனின், குஜராத் இந்துத்துவம் மோடி – அட்டை கவரும் விதத்தில் இருந்தது. ஆர்எஸ்எஸ் புத்தகத்தின் அட்டை கம்பீரமாக இருந்தது. அரவிந்தன் நீலகண்டனின் மோடி புத்தகத்தை ‘இலவச இணைப்பு’ சைஸில் கண்டதில் ஏமாற்றமே.

கிழக்கில் பிரசன்னாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பெண்மணி வந்து கேட்ட ஒரு கேள்வி தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கப்பட வேண்டியது – கோபிநாத் எழுதிய கிமு-கிபி புக் இருக்குதா?

சிக்ஸ்த் சென்ஸில் சிறிது நேரம் இருந்தேன். எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய ஜூலியஸ் சீஸரை வாசகர்கள் விருப்பத்துடன் வாங்கிச் சென்றார்கள். அங்கே ‘ஹிட்’ ஆகக்கூடிய வேகத்தில் விற்ற இன்னொரு புத்தகம் ‘போதி தர்மர்.’

அரும்பு ஸ்டாலில் ஒரு மேஜையை ‘பழைய புத்தகக் கடை’ ஆக்கியிருந்தார்கள். 50 சதவிகிதம் கழிவு. அங்கே எனக்கு ஒரு புதையல் கிடைத்தது. Uncle Tom’s Cabin-ன் மொழிபெயர்ப்பான கறுப்பு அடிமைகளின் கதை. அலைகள் வெளியீடு. ரூ. 100க்கு வாங்கினேன்.

மற்றபடி இந்த முறையும் லிச்சி ஜூஸ் ஸ்டால் இருக்கிறது. லிச்சி ஜூஸ்தான் பழைய சுவையில் இல்லை. அடுத்த முறை சுவைத்துப் பார்த்துவிட்டு ஒரு முடிவெடுக்க வேண்டும். உள்ளே காபி – டீயும் கிடைக்கிறது. டீயின் விலை பத்து ரூபாய். அதன் சுவை, மணம், திடத்துக்கு எழுபத்தைஞ்சு பைசா கொடுக்கலாம்.

அடுத்து பொங்கலன்று புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். அன்று முதல் சிக்ஸ்த் சென்ஸ் வெளியிடும் மேம்படுத்தப்பட்ட ‘அகம் புறம் அந்தப்புரம்’ விற்பனைக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சந்திப்போம்.

 

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 21, 2013

இன்று புத்தகக் கண்காட்சி காற்று வாங்கும் என்று எதிர்பார்த்து போன எனக்கு அதிர்ச்சி. மாலை 6 மணிக்குமேல் ஓரளவு நல்ல கூட்டம். கடைகளில் வியாபாரமும் ஓகே. நாளைக்கும் இதே அளவு கூட்டத்தை எதிர்பார்க்கலாம். புதன் – அன்று கடைசி தினம் என்பதால் சொல்லவே தேவை இல்லை.

நாளை மதியம் 2 மணிபோல சென்றுவிட்டால், புத்தகங்களைத் தேடி வாங்க வசதியாக இருக்கும் என்று திட்டமிட்டுள்ளேன்.

திருமகள் நிலையத்துக்கு பாலகுமாரன் வந்திருந்தார். ஏற்கெனவே வாங்க நினைத்திருந்த ‘என்னைச் சுற்றி சில நடனங்கள்’ புத்தகம் வாங்கி, அவரிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன். நான் பாலகுமாரனை வார இதழ்களில் வாசித்துள்ளேன். அதிகம் வாசித்ததில்லை. மேற்சொன்ன புத்தகம் அவரது கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் வாங்கினேன். ஒரு வகையில் இது அவரது ஆட்டோபயாகிராபி என்றுகூட சொல்லலாம்.

நண்பர் ஆர். முத்துக்குமார் வித்தியாசமான ஒரு புத்தகத்தை வாங்கியிருந்தார். என்ன பதிப்பகம், ஆசிரியர் பெயர் எல்லாம் நினைவில் நிற்கவில்லை. ஆனால், புத்தகத்தின் பெயர் என்றைக்கும் மறக்காது – ‘பெரிய புடுங்கி’. ஒரு பத்திரிகையாளரின் அனுபவ நூல் இது. (Karunakaran Perumal கவனத்துக்கு.)

பத்ரியைச் சந்தித்தேன். நேற்றைய கிழக்கு ஹிட் லிஸ்ட்டில் வாத்யார் சுஜாதாவும் இணைந்திருந்தார். ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஓஹோ. சாருவின் ஜீரோ டிகிரியும் டாப் டென்னில் வரக்கூடும் என்று சொன்னார்.

பெரிகாம் (ஸ்டால் எண் 585, 586) என்ற கடையில் மூன்று நூல்கள் கவனம் ஈர்த்தன. வாருங்கள் வீடு கட்டலாம், கம்பி வளைப்போர் கையேடு, கொத்தனார் கையேடு. மூன்றையும் எழுதிய ஆசிரியர் டாக்டர் என்.வி. அருணாசலம். யாருக்காவது பயன்படும் என்பதால் இங்கே இந்தத் தகவல்.

புக் வேர்ல்ட் லைப்ரரி என்ற ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் – இந்த முறை இரண்டு வரிசைகள் ஸ்டால்கள் அமைத்துள்ளார்கள். எல்லாம் பிற நாடுகளில் இருந்து கண்டெய்னர்களில் மொத்தமாக வரும் புத்தகங்கள். இங்கே உள்ள புத்தகக் கடைகளில் தேடினாலும் கிடைக்காதவை. பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட், காஃபி டேபிள் வகையறா புத்தங்கள். பல நல்ல, சுவாரசியமான, அரிய புத்தகங்கள் உள்ளன. ஸ்டால் எண் : 108, 436-437

திருத்தம் : தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகளுக்கு கழிவு இல்லை என்று நேற்று எழுதியிருந்தேன். மன்னிக்கவும். 10 சதவிகிதம் கொடுக்கிறார்கள்.

கேண்டீன் குறிப்பு : எதுவுமில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 20, 2013

இன்று புத்தகக் கண்காட்சியில் உச்சபட்ச கூட்டம். சென்ற மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்குக் குவிந்த ரசிகர்களைவிட, இன்று திரண்ட வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். காலை முதலே கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டது. கண்காட்சி அரங்கில் நடு வரிசையில் உள்ள அரங்குகளுக்குள் நுழைய முடியவில்லை – காற்றில்லாமல் மூச்சு திணறியது. பபாஸியின் அருமையான அரங்கு கட்டமைப்புக்கு வாசகர்களின் சார்பில் கோடானு கோடி நன்றி.

பலரும் நடக்க முடியாமல் ஆங்காங்கே அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சிறு குழந்தைகளோடு வந்திருந்த தாய்மார்கள் பலர், பாலூட்ட – உணவூட்ட தகுந்த இட வசதியின்றி தவித்ததைக் காண முடிந்தது. 750 அரங்குகளை அமைப்பவர்கள், வயதானவர்கள் – தாய்மார்கள் சற்று ஓய்வெடுக்கத் தகுந்த சிறு அறைகளை அடுத்த முறையாவது அமைத்துக் கொடுத்தால் புண்ணியம்.

இன்று கண்காட்சியில் நண்பர்கள் பலரை நீண்ட நாள்கள் கழித்து சந்தித்தேன். சொக்கனை மிஸ் செய்துவிட்டேன். நாளை சந்திக்க வேண்டும்.

கிழக்கில் ஆர். முத்துக்குமாரின் தமிழக அரசியல் வரலாறு இரண்டு தொகுதிகளும் நன்றாக விற்பனை ஆயின. மருதனின் (சே-யின்) மோட்டார் சைக்கிள் டயரியும் டாப் கியரில் விற்பனை ஆனது.

கிழக்கு ஸ்டாலை கடந்த ஓர் இளைஞன், தன்னுடன் வந்த இளைஞனிடம் அடித்த கமெண்ட் காதில் விழுந்தது. ‘ச்சே… இதையெல்லாம் போய் புக்கா கொண்டு வந்திருக்காங்க பாரு… படமே இப்போ அப்போன்னு இழுத்துக்கிட்டு இருக்குது…’ – அந்த இளைஞன் குறிப்பிட்டுச் சொன்னது இரா. முருகனின் விஸ்வரூபம் நாவலை.

தினத்தந்தியும் வழக்கம்போல வரலாற்றுச் சுவடுகளுக்கென தனி ஸ்டால் அமைத்துள்ளது. அங்கே விற்பனை டல். காரணம் இரண்டு வருடத்துக்கு முன்பு ரூ. 300க்குக் கிடைத்த சுவடுகளின் தற்போதைய விலை ரூ. 500. கழிவு கிடையாது.

வரலாற்றுச் சுவடுகளை மட்டும் சொல்ல முடியாது. காகித விலையேற்றம் முதற்கொண்டு பல காரணங்களால் எல்லா புத்தகங்களுமே கடந்த வருடத்தை விட 20லிருந்து 30 சதவிகிதம் வரை விலையேற்றம் கண்டுள்ளன. உதாரணம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சென்ற ஆண்டு ரூ. 500, தற்போது ரூ. 650.

சிக்ஸ்த்சென்ஸில் வெளியாகியிருக்கும் எனது புதிய புத்தகமான வெளிச்சத்தின் நிறம் கருப்பு, நன்றாக விற்பதாக பதிப்பாளர் புகழேந்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கோபிநாத்தின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க-வின் ஆங்கிலப் பதிப்பு புத்தகக் கண்காட்சியில் வெளியாகி 2000 பிரதிகளைத் தாண்டிவிட்டதாகத் தகவல் சொன்னார். என் சைஸுக்கு ஒரு கோட் வாங்கி மாட்டிக் கொண்டு ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து முகம் காட்ட வேண்டும் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன். சிக்ஸ்த் சென்ஸில் பலரும் விசாரித்துச் செல்லும் சுபவீயின்  ‘ஈழம் தமிழகம் நான்’ புத்தகம் நாளை மாலை முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தியா பதிப்பகத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு (வரலாற்று) நூல்களை இந்த ஆண்டும் கொண்டு வந்துள்ளார்கள். யுவான் சுவாங் (மூன்று தொகுதிகள்) வாங்க வேண்டும்.

இன்று சில புத்தகங்களை மட்டும் வாங்கினேன். வாங்கிய புத்தகங்களை பிறகு மொத்தமாகப் பட்டியலிடுகிறேன்.

கேண்டீன் குறிப்பு :

ஒரு டெல்லி அப்பளம் ரூ. 30, ஒரு கப் சோளத்தின் விலையும் அதே. அதிகம்தான். கேண்டீனில், அரங்கில் கிடைக்கும் காபியின் சுவை சரியில்லை. இரவு ஏழு மணிபோலஅரங்கின் வெளியே ஆறு ரூபாய்க்கு ஓர் இளைஞர் சைக்கிளில் வந்து சுக்கு காபி விற்கிறார். அபார ருசி.

முக்கியக் குறிப்பு:

புத்தகக் கண்காட்சி ஞாயிறே கடைசி என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 23, புதன் வரை கண்காட்சி உண்டு. அடுத்த மூன்று நாள்கள் அவ்வளவாக கூட்டம் இராது. தேடித் தேடி புத்தகம் வாங்குபவர்கள் தாராளமாக வரலாம்.