நான் யார்?

Mugil

இந்த உலகத்தில் எல்லோருமே விடை தேடிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி இதுதான்.
எங்கிருந்து வந்தேன்?
எங்கே இருக்கிறேன்?
எங்கே சென்று கொண்டிருக்கிறேன்?
நான்
என்பது என்ன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என் ஆழ்மனத்தின் அடியோட்ட இடைவெளியில் அமர்ந்து ஆசனம் செய்தபடியே யோசித்தபோது கிடைத்த பதில்கள்…

தூத்துக்குடியிலிருந்து வந்தேன். சென்னையில் இருக்கிறேன். தினமும் அலுவலகம் முடிந்ததும் பனகல் பார்க் வழியாக அசோக் நகருக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நான் என்பது ஆழ்வார்ப்பேட்டை சூர்யாஸ் ஹோட்டலில் முப்பத்துச் சொச்ச ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு பதார்த்தம்.

என்ன செய்ய, தமிழ் சினிமா கொஞ்சம் அதிகமாகப் பார்த்து மாசுபட்டுக் கிடக்கும் மனம், ஆரம்ப பில்ட்-அப் இன்றி எதையும் எழுத விடமாட்டேன் என்கிறது. சரி, என்னைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக.

பிறந்த ஊர் கோவை. வளர்ந்தது படித்தது எல்லாம் தூத்துக்குடி. வ.உ.சி. கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் (1997-2000). பின்பு அதே கல்லூரியில் எம்.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் (2000-2002). மென்பொருள் துறையில் மனம் அவ்வளவாக லயிக்கவில்லை. காரணம் எழுத்தின் மீதிருந்த ஆர்வம்.

ஐந்தாவது படிக்கும்போதிருந்தே டைரி எழுத ஆரம்பித்துவிட்டேன். தினசரி நிகழ்வுகளை அல்ல. என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவேன். அவற்றில் பலவற்றை கவிதை என்று இன்றளவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விடுமுறைக்கு எனது அம்மா வழி தாத்தா – ஆச்சி வீட்டுக்கு வெகு ஆர்வமாகச் செல்வேன். காரணம், புத்தகங்கள். 60, 70, 80களில் கல்கி, குமுதம், விகடன்களில் வந்த தொடர்கதைகளைத் தனியாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். அந்த குண்டு குண்டு புத்தகங்களில் எனது வாசிப்புப் பழக்கம் வளர்ந்தது.

பள்ளி அளவில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கவிதை மட்டுமல்ல, என்ன போட்டி வைத்தாலும் நானும் பெயர் கொடுத்து கலந்துகொள்வேன், பாட்டுப் போட்டிகளில்கூட. கல்லூரி எனது கவிதை ஆர்வத்தை வளர்த்தது. சுதந்தர தின பொன்விழா கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாவது பரிசு பெற்றது. அப்போதிருந்து, கல்லூரி அளவுகளில் பல்வேறு ஊர்களில் நடக்கும் கவிதைப் போட்டிகளுக்கு எனது கல்லூரி சார்பாகச் செல்லும் போட்டியாளராக மாறினேன். வாங்கிய பரிசுகள் சொற்பமே.

எம்.எஸ்.சி படிக்கும்போது விகடன் மாணவ நிருபர் திட்டத்துக்கு குஜராத் பூகம்பம் பற்றி ஒரு கட்டுரையை இணைத்து விண்ணப்பம் செய்தேன். அடுத்தடுத்த சுற்றுகளில் தேர்வாகி, மாணவ நிருபரானேன்.

2003ல் சென்னை வந்தேன். 78 சதவிகித மதிப்பெண்களோடு எம்.எஸ்.சி. முடித்திருந்தேன். சாப்ட்வேர் இன்ஜினியராக மாறுவேன் என்பது என் பெற்றோர்களின் கனவு. ஆனால் எனக்குத் தூக்கத்தில்கூட அப்படி ஒரு கனவு வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னையில் சும்மா இருந்தேன். பொழுதைப் போக்க டேட்டா என்ட்ரி வேலைக்கும் சென்றேன். அப்பா பணமெல்லாம் அனுப்பவில்லை. காரணம், அடிக்கடி நானே தூத்துக்குடி சென்று வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன்.

பின்பு எனது (விகடன் மாணவ நிருபர்) தோழி கார்த்திகா மூலமாக கோகுலம் சுஜாதா, கல்கி ஏக்நாத் அறிமுகம் கிடைத்தது. அங்கே எழுத ஆரம்பித்தேன். ஆசிரியர் சீதா ரவிக்கு என் எழுத்து பிடித்திருந்தது. கல்கி இதழோடு சென்னை வாசகர்களுக்கு மட்டும் வாராவாரம் இலவச இணைப்பு ஒன்றைத் தயார் செய்யத் திட்டமிட்டார்கள். அது ’சென்னை ஸ்கேன்’. அதற்கு ஆசிரியராக என்னை நியமித்தார்கள். அப்போது அதற்காகத் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் ஆர். முத்துக்குமார், மருதன், ச.ந. கண்ணன்.

கல்கியில் எங்கள் எழுத்தைக் கண்ட பா.ராகவன், கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். பின்பு நான் கிழக்கில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். மற்ற மூவரும் பிறகு இணைந்தார்கள். கிழக்கு முதன்மைத் துணை ஆசிரியராக என் பயணம் தொடர்கிறது.