வீடுகள், மனைகள் விற்பனைக்கு

போட்-ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்

வழங்கும்

பெருமையான வாய்ப்பு!

சென்னையின் புறநகர்ப்பகுதிகளான வேளஏரியில் உதயமாகியிருக்கிறது  எங்களது குடைக்குள் மழை நகர். அங்கீகரிக்கப்பட்ட புறம்போக்கு  நிலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அருமையான வீடுகள்.

  • வீட்டின் அளவு 1100 ச.அ. (புயல் காலங்களில் எல்லைகள் கிடையாது.)
  • இரண்டு படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் (நவம்பரில் மட்டும்)
  • நல்ல நீரோட்டமுள்ள சாலைகள்
  • அம்சமான படகு பார்க்கிங்
  • வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள்.
  • குறிப்பிட்ட மாதங்களில் முட்டுக்காடுக்கு உல்லாசப் படகு சவாரி  உண்டு.
  • அருகிலேயே உயர்நிலைப்பள்ளி, பொறியியல் கல்லூரி, மரு த்துவமனை மற்றும் வெள்ள நிவாரண முகாம்கள் உள்ளன.

லோன் மற்றும் வெள்ள நிவாரண நிதி வசதிகள் செய்து தருகிறோம்.

மழைப்பாக்கம், ஆறூரில் 1200 ச.அ. அளவுள்ள மீன்பிடிமனைகள்  விற்பனைக்கு உள்ளன.

மேலும் விவரங்களுக்கு :

போட்-ஹவுஸ் பிரமோட்டர்ஸ்,
எண் – 420, மழைப்பாக்கம் சாலை,
ஆறூர். 044 44420420, 9999900420.

குறிப்பு : தினமும் எங்கள் அலுவலகத்திலிருந்து சைட்-விசிட்டுக்காக  காலை பதினோரு மணிக்குப் படகு கிளம்பும்.

ரீமிக்ஸ் பலன்கள்

கணிணியில் பழைய ஃபைல்களை எல்லாம் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது  இது கிடைத்தது. சில வருடங்களுக்கு முன் ‘சனிப்பெயர்ச்சி பலன்கள்’ என்று தினமணி  கதிருக்காக லொள்ளுத்தனமாக எழுதிய கட்டுரை. பலரும் எடுத்துக் கையாண்டதால், ஏற்கெனவே படித்திருக்கக்கூடும். இந்தவாரத்தில் ஏதோ சிஷ்யப் பெயர்ச்சியோ, குரு  பெயர்ச்சியோ நடக்கப்போகிறதாமே? பழைய கட்டுரையை ரீமிக்ஸ் செய்து ‘புதிய  பலன்கள்’ ஆகத் தந்துள்ளேன். ஜோதிட நம்பிக்கை உடையவர்கள் வாசிக்க வேண்டாம்.  நகைச்சுவைமேல் நம்பிக்கையுடைவர்கள் தாராளமாகத் தொடரவும்.


மேஷ ராசி மக்களே!

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆக றதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ்  போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல ‘a,e,i,o,u’, அப்புறம் தமிழில ‘கசடதபற’ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

ரிஷப ராசி மக்களே!

நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும்  உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில  இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.

பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, ‘நாலரை பால்’ குடிக்கிறது நல்லது.

மிதுன ராசி மக்களே!

எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த  குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து தொடர்ந்து ‘நோக்கியா’. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட  கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா  ‘சங்கு சவுண்டை’ அனுப்பி வைக்கும்.

பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

கடக ராசி மக்களே!

சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.

பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால, உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!

சிம்ம ராசி மக்களே!

குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு ‘Login’ ஆகியிருக்கறதால,  இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது.  ‘orkut, facebook’ பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது. முக்கியமா  வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. ஜூன்,  ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து!

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை சாத்தறது உத்தமம்.

கன்னி ராசி மக்களே!

ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி  வகையறாக்களை பாத்தா உங்க வாய் ‘வாய்தா’ வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை ‘சனி பகவானோட’ காக்கா வந்து கொத்திரும்.

பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ ‘கவித’ பொஸ்தகம் வாங்கி, ‘கழுதை’க்கு தானம் பண்ணனும்.

துலாம் ராசி மக்களே!

கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க  வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும்  நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது.  மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல  சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!

பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.

விருச்சிக ராசி மக்களே!

யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும்  நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!

பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

தனுசு ராசி மக்களே!

நீங்க ‘i’ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற  எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு ‘i’யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி  நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப் போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை ‘ஒரு ரூபாய்’க்கு வித்துருங்க.

பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.

மகர ராசி மக்களே!

வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால,  இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது.  பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.

பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!

கும்ப ராசி மக்களே!

இப்ப ‘கரண்ட்’ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு ‘கரண்டுல’ கண்டம்.  அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ்  பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற ‘கரண்ட்’ நியூஸைக்கூட படிக்கக்கூடாது.

பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார் பெயருல அர்ச்சனை பண்ணுங்க.

மீன ராசி மக்களே!

குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு  டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது  அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது. கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக  மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.

பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க!

(மேலும் பலன்களை அறிந்துகொள்ள இதே கட்டுரையைக் கீழிருந்து படிக்கவும்.)

பாவம் ராவணன்! – போகோ கட்டுரை ;)

(இந்தக் கட்டுரை குழந்தைகளுக்கும் குழந்தை மனம் படைத்தவர்களுக்கு மட்டும். சுட்டி விகடனில் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. குழந்தைகள் தின வாழ்த்துகள்!)

ராவணன் தெரியுமா உங்களுக்கு… ஆமா பத்து தலைகளோட ‘பந்தா’வா ராமாயணத்துல  வருவாரே, அவரேதான்! ராவணன் இன்னிக்கு நம்ம கூட வாழ்ந்தார்னா, ‘அய்யோ பாவம்  அந்த அங்கிள்’னு நீங்க ‘உச்’ கொட்டுவீங்க. ஏன் தெரியுமா?

* தினமும் காலைல 320 பற்களைத் தேடிப்புடிச்சு ‘ஈ’ தேய்க்கணுமா, பாவம், அதுக்கே  எவ்வளவு நேரமாகும்!

* செல்போன்ல யாராவது ராவணனைக் கூப்பிட்டாங்கன்னா, ‘எந்தக் காதுல வைச்சுப்  பேசலாம்’னு குழம்பிப் போயிடுவாரு!

* இப்ப ராவணனுக்கு முதல் தலையில இருக்குற மூக்குல ஜலதோஷம் பிடிச்சா  அவ்வளவுதான். அப்புறம் பத்து மூக்குக்கும் பரவிடும். ‘அச்’னு ஒரு தும்மல் வந்துச்சுன்னா,  தொடர்ந்து ஒரே தும்மல் சத்தமாத்தான் இருக்கும்!

* ராவணனுக்கு ‘ஷேவ்’ பண்ண எவ்ளோ நேரமாகும்! முதல் முகத்துல இருந்து வரிசையா ‘ஷேவ்’ பண்ணிக்கிட்டே கடைசி முகத்துக்கு வர்றதுக்குள்ள முதல் முகத்துல தாடி முளைச்சிருமோ?!

* ராவணனுக்கு ஒரு தலையில ‘பொடுகு’ வந்தா, எல்லாத் தலைகளுக்கும் பரவிடுமா?  ஹைய்யோ, அப்ப குளிக்கணும்னா எவ்ளோ ஷாம்பு ஆகும்?

* ஸ்கூல்ல மிஸ் ‘2 X 3’ எவ்வளவுன்னு ராவணனைக் கேட்கறப்போ, நாலாவது வாய்  ‘6’-ன்னும் அஞ்சாவது வாய் ‘8’ன்னும் சொல்லிச்சுன்னா அவரு என்ன பண்ணுவாரு!?

* நாம அடிக்கடி தலையில அடிச்சு ‘எல்லாம் என் தலையெழுத்து’ன்னு சொல்லுவோமே,  அதை ராவணன் எப்படிச் சொல்லுவாரு?

* தனக்கு பிடிச்சவங்களுக்கு ‘கிஸ்’ கொடுக்கணும்னா ராவணன் எந்த உதட்டால கொடுப்பாரு?

* ஒரு தலைக்கு ‘ஹேர்-கட்’ பண்ண 40 ரூபாய்னா, பாவம் ராவணனுக்கு முடிவெட்ட  மட்டுமே, 400 ரூபாய் செலவாகிடும்ல!

* ஸ்கூல் பஸ்ல போகணும்னா எப்பவுமே ராவணனுக்கு கடைசி சீட்தான். அங்கதானே  அவரால உட்கார முடியும்!

இப்ப, சொல்லுங்க, ராவணன் பாவம்தானே!

சொதப்பல் ஸ்டாரின் அடுத்த மூவ்! – மிஸ்டர். காக்கையார்

ங்கிருந்தோ லவட்டிய ஊசிப்போன வடையுடன் ஸ்டைலாக வந்து உட்கார்ந்தார் காக்கையார்.

‘என்ன அமெரிக்கா ரிட்டர்ன் மாதிரி ஸ்டைலா வர்றீர்?’ என்றோம்.

‘எவன் அமெரிக்கா போய்ட்டு ரிட்டர்ன் வந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனா சூப்பர் ஸ்டார் போயிட்டு வந்தா மட்டும் மேட்டர் ‘சொத்’துனு ஆயிருது’ – காக்கையார் கச்சேரியை ஆரம்பித்தார். நாமும் கேள்விகளை அவிழ்த்துவிட்டு ஸ்ருதி ஏற்றினோம்.

‘முடிவா சூப்பர் ஸ்டார் என்னதான் சொல்ல வர்றாராம்?’

‘நான் முடிவெடுத்துதான் ஆகணும்னு யாரும் முடிவா என்னை முடிவெடுக்கச் சொல்ல முடியாது. அப்படி நான் முடிவெடுக்கணும்னு நினைச்சா முடிவுல என்ன முடிவெடுத்துருக்கிறேன்னு என்னாலேயே சொல்ல முடியாது.’

‘என்னய்யா அது, ஏற்கெனவே பன்ச்சர் ஆகிக்கிடக்குற இமேஜை பன்ச் டயலாக் விட்டு மேலும் பாழ்படுத்துறார்.’

‘படுத்தத்தான் செய்யுறார். அதுதாங்காம, கோவையில அவர்கிட்ட கேட்காமலேயே கட்சி, கொடின்னு ஆரம்பிச்ச ரசிகர் மன்றத்தினர், அடுத்த எலெக்ஷன்ல வடிவேலுவுக்கு ஆதரவா களமிறங்கப் போறாங்களாம்’ என்று புது ஸ்கூப் நியூசைக் கிளப்பிவிட, நிமிர்ந்து உட்கார்ந்தோம். ‘நாயர் கடையில சாயா சொல்லியாச்சா?’ என்றபடியே வடையைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தார் காக்கையார்.

‘ஆமா ரஜினி, தன் பொண்ணு சௌந்தர்யாவுக்கு ஏதோ ரகசிய ப்ராஜெக்ட் அசைன் பண்ணியிருக்காராமே?’ – காக்கையாரிடம் கொக்கி போட்டுப் பார்த்தோம்.

‘அதற்குள் விஷயம் வெளியில் கசிந்துவிட்டதா’ என்று செல்லமாகச் சலித்துக் கொண்டவர், தொடர்ந்தார். ‘குசேலனில் குளத்தில் டால்பின் விட்ட சௌந்தர்யாவின் க்ரியேடிவிட்டி குறித்து ரஜினிக்கு எப்போதுமே பெருமிதம் உண்டாம். சக்கரகட்டி படத்தில் ‘சின்னம்மா’ பாடலில் மம்மியை எல்லாம் மானாவாரியாக அலையவிட்டு, தனது அழகியலை நிரூபித்த மகளை உச்சி முகர்ந்து பாராட்டினாராம் சூப்பர் ஸ்டார். கூடவே, ‘சுல்தான் தி வாரியர்’ பொம்மைப் படத்தின் கதையைக் கொஞ்சம் மாற்றி அதில் அரசியல் போர்ஷனை அதிகமாக்கச் சொல்லியிருக்கிறாராம். ஷங்கரிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி ‘முதல்வன்’ பட அரசியல் காட்சிகள் சிலவற்றை அதில் அப்படியே இடம்பெறச் செய்யப் போகிறாராம். கொதித்துப் போயிருக்கும் ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தவே இந்த முயற்சி’ – காக்கையார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூடான சாயா வந்து சேர்ந்தது.

‘ஆமா, சேனல்காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் நாளைக்கு ஏதோ அவசரமா மீட்டிங் போடப்போறாங்களே, என்ன விஷயம்?’ – காக்கையாரைத் தூண்டினோம்.

‘எல்லாம் சூப்பர் ஸ்டார் விஷயமாத்தான். இனிமே ரஜினி மேட்டரை யாரும் கவர்-ஸ்டோரியா போட்டு பத்திரிகை சர்குலேஷனைக் குறைச்சுக்க வேண்டாம்னு முடிவெடுக்கப்போறாங்களாம். எந்தச் சேனல்ல ரஜினி படம் போட்டாலும், ‘நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது’ மாதிரி, சூப்பர் ஸ்டாருக்குச் சொந்தமில்லாத, அடுத்தவங்க எழுதிக் கொடுத்த பன்ச் டயலாக்கை எல்லாம் ‘கட்’ பண்ணிட்டுத்தான் ஒளி பரப்பப்போறாங்களாம்.’

‘ஆமா, ரஜினி அடுத்து அமெரிக்காவுக்குப் போறதுக்கு முன்னாடி ஹைதராபாத் விசிட் செய்யப்போறாராமே. உண்மையா?’ – அடுத்த கேள்வியைத் தவழ விட்டோம்.

சாயாவை பாயாபோல் உறிஞ்சிமுடித்த காக்கையார், கண்கள் மின்ன தொடர்ந்தார். ‘ஹைதராபாத் விசிட்டுக்கு ரஜினி ப்ளான் பண்ணுனது உண்மைதான். ‘ஏன் சிரு, இப்படி கட்சியெல்லாம் ஆரம்பிச்சு என்னைச் சிக்கல்ல மாட்டிவிட்டுட்டீங்க’ன்னு சிரஞ்சீவியைப் பார்த்து, உரிமையோட கண்டிக்கிறதுக்காகவாம். ஆனா விஷயத்தைக் கேள்விப்பட்ட சிரஞ்சீவி, எங்க ரஜினி, ஹைதராபாத் வந்து நேர்ல சந்திச்சா, தன்னோட இமேஜ் சரி ஞ்சிடுமோன்னு பயந்து, எங்கியோ குக்கிராமத்துல தலைமறைவா இருக்கிறாராம்.’

சொல்லிமுடித்த காக்கையார் அடுத்த நிமிடமே பறபற!