பாமக பொதுக்குழுவில் மீண்டும் வாக்கெடுப்பு!

பாமக பொதுக்குழு இன்றும் பட்டவர்த்தனமாகக் கூடியது. இன்றும் ஒரு புதிய வாக்கெடுப்பை நடத்தினர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் பாமகவின் தேர்தல் கூட்டணி முடிவு குறித்த தெளிவான, குழப்பமில்லாத, கொள்கைப்பிடிப்புமிக்க, லாபகரமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி

‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

நேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். இங்கே தமுக்கம் இருக்கிறது,  வண்டியூர் தெப்பக்குள மைதானம் இருக்கிறது, மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட விளையாட வரும் வீரர்களுக்கு எமது தொண்டரடிப்படையினர் குவாலிஸ்களில் வலம்வந்து தக்க பாதுகாப்புகளை அளிப்பார்கள்.  இதனால் மதுரையில் மக்களவைத் தேர்தல் பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.  திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே எல்லாம் சுபிட்சமாக நடக்கும். இந்தியாவின்  நலன் கருதி, கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்காக நான் எடுத்திருக்கும் இந்த  முடிவை லலித்மோடி வரவேற்பார் என்று நம்புகிறேன்.’

இவ்வாறு அழகிரி பேசினார்.

இதற்கிடையில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் போட்டிகளை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத்  தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மதுரையில் நடத்த வைத்து அதை எம்பிஎல் (மதுரை  பிரிமீயர் லீக்) என்று பெயர் மாற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார் கள். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன்மூலம் தேர்தலில், மக்களின் கவனத்தைத் த ங்கள் பக்கம் இழுக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கும் எம்பிஎல்லும் கிடைக்கப்போவதில்லை, ஒரு எம்பி சீட்டும் கிடைக்கப்போவதில்லை.  டுவெண்டி டுவெண்டி போட்டிகள் மதுரையிலேயே நடந்தாலும், கருணாநிதியின் கட்சிக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்பது மக்களுக்கே  தெரியும். தேர்தல் கமிஷனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கருணாநிதி குடும்பத்தின்  குறுக்குபுத்தி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.’

இவ்வாறு ஜெயலலிதா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலையில் வீரத்தளபதி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நடிகர்  என்று சொல்லிக்கொள்ளும் ஜே.கே. ரித்தீஷ், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மதுரையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமையேற்று விளையாட கேப்டன் தோனி  மறுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட்  போட்டியில் வீரமாக விளையாடிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க நான் தயார்’  இவ்வாறு அவர் கூறினார்.

வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல!

இன்னாமா பண்ணலாம்
வோட்டுக் கேட்கப் போவலாம்
குவாலிஸில் ஏறலாம்
நோட்டு நோட்டா வீசலாம்.
அல்ரெடி நாளுமாச்சு
தேர்தல் தேதி நெருங்கிப் போச்சு

வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் திருமங்கலத்துல பார்ட்டி.
வேர் இஸ் தி பார்ட்டி?
அழகிரி வூட்டுல பார்ட்டி
உள்ளவா உள்ளவா…. வா வா வா….

சன் டீவி இப்போ நம்ம செட் ஆனதே
சன்-இன்-லாஸ் டீலிங்கு ஃபிக்ஸ் ஆனதே
As usual ஏடிஎம்கே ஹர்ட் பண்ணுதே
வாயால விஜி தம்பி பைட் பண்ணுதே
பாமககூட இப்போ சேக்காளி இல்லபா
அம்மா டீவி கேமரா ரொம்ப ரொம்ப தொல்லைபா

என்னடா எலக்ஷன் இது?
ரூலிங் பார்ட்டிக்கு ரூல்ஸ் ஏது?

வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் மாட்டுத்தாவணில பார்ட்டி
வேர் இஸ் தி பார்ட்டி?
ஆங் ஆரப்பாளையத்துல பார்ட்டி

வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
சத்யமூர்த்திபவன்ல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
சுப்ரமண்யசாமி வூட்ல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
கோபாலபுரத்துல
வேர் இஸ் தி பார்ட்டி டூநைட்?
தல்லாகுளத்துல..

(தேர்தல் அன்று)
இன்னாபா இது குடைச்சாலாகீது. Polling ஃபாஸ்ட் இல்லாம ஊத்திக்குது.

(அஞ்சாத நெஞ்சிலிருந்து எழும் குரலில்)
நீ ஒண்ணும் கவலைப்படாத… நாங்க குத்துனா தமிழ்நாடே நமக்குத்தான்.