‘கல போல வருமா!’

க்ளவுட் செவன் அண்ட் ஆப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று பரம்பரை பரம்பரையாக வாரமலர் நடுப்பக்கச் செய்திகளில் பாசமாக கொஞ்சப்படும் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

யாருமே அறியாத பல செய்திகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்கே, எப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு தொடரவும் (கிசுகிசுன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்).

தும்பைப் பூ என்றும் ‘மாஸ்’அற்ற மலர் என்றும் அஜித்தை கலைஞர் பாசமாகச் சுட்டிக் காட்டி அறிக்கை விட்டதன் பின்னணியில் ஏகப்பட்ட உள்’கும்மாங்’குத்து வேலைகள் இருப்பதாக நியூஸ் பேப்பர் ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைஞரின் வசனத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பெண் சிங்கம் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு அஜித் நடனமாட(?) இருக்கிறாராம். ‘வாய் உள்ள பிள்ளை குலைக்கும்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை கலைஞரே எழுதவிருக்கிறாராம்.

தவிர, க்ளவுட் செவன் அண்ட் ஆஃப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த அஜித் படத்துக்கும் கலைஞரே வசனம் எழுதலாம் என்று மதுரை இட்லி கடைகளில் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் அஜித் வரும் பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ‘கல போல வருமா…’ (கலைஞர் என்பதன் சுருக்கம் கலை, செல்லமாக ‘கல’) என்று அஜித்தே சொந்தக் குரலில் பாடுவது போல பயன்படுத்த இருக்கிறார்களாம்.

அஜித் பேசும்போது எழுந்து நின்று கைதட்டி ‘ஊக்குவித்த’ ரஜினிக்கு கலைஞர் செல்லும் பாராட்டு விழாக்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கு அருகிலேயே நாற்காலி போட ‘ஏற்பாடு’ செய்துள்ளார்களாம். இதனால் எந்திரன் படம் மேலும் சில வருடங்களுக்கு தள்ளிப் போகலாம் ஷங்கர் வட்டாரத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவைவிட்டே அஜித் விலகப் போகிறார் என்று பத்திரிகைகள் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கார் ரேஸ் மட்டுமன்றி, ரேக்ளா ரேஸ் முதல் ஸ்லோ சைக்கிள் ரேஸ் வரை எதையும் விட்டுவைக்காமல் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாராம்.

ரேஸில் தல பின்தங்கிய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது சுறாவை வேகமாக முடித்து களமிறக்க இருக்கிறாராம் பழைய இளைய தளபதி. இதற்கிடையில் ‘3 இடியட்ஸ் தமிழ் மேக்கிங்கில் விஜய் நடிக்கப் போகிறார்’ என்றொரு சோக செய்தி வந்து விஜய் ரசிகர்களைத் தாக்கவும், ‘சேச்சே, நான் என்ன லூஸா?’ என்று அதற்கு பதில் சொல்லி தன் ரசிகர்களின் வாயிலும் வயிற்றிலும் ‘பாலை’ ஊற்றியிருக்கிறார் விஜய்.

நிஜமாகவே முழு நீள…

தமிழ்ப் படம் பார்த்து விட்டு அதைச் சிலாகித்து நான்கு வரி விமரிசனமாவது எழுதாவிட்டால் ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திவிடுவார் என்பதால்…

* நிஜமாகவே ‘முழு நீள’ நகைச்சுவைத் திரைப்படம்.

* ஏ,பி,சி முதல் இஸட் வரை எல்லா சென்டர்களிலும் எடுபடும்.

* படத்தில் ஒரு சில இடங்களில் தொய்வு தெரிந்தாலும், அநேக நகைச்சுவை காட்சிகள் நினைத்து நினைத்து சிரிக்கும் தரத்துக்கு இருக்கின்றன.

* இரண்டு மணி நேரம், ஐந்து நிமிடங்களில் படம் முடிந்துவிடுவது பெரிய ப்ளஸ்.

* சிம்பு, டி.ஆர்., பாக்யராஜ் மூவரையும் நேரடியாக நக்கலடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

* இனி வரும் படங்களில் ஹீரோ பில்ட்-அப் காட்சிகள் வந்தால் தமிழ்ப் படம் நினைவுக்கு வந்து ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

* தமிழ் சினிமாவின் க்ளிஷே காட்சிகளுக்கும் மாஸ் ஹீரோக்களுக்கும் லாடம் கட்டியிருக்கும் இயக்குநர் அமுதனுக்கு அடுத்த படம்தான் நிஜமான சவால். என்ன செய்யப் போகிறாரோ?

* 2010ன் முதல் ஹிட் தமிழ் சினிமா இதுவே. எனவே அட்வான்ஸாக இப்படி ஒரு போஸ்டர்…

* மிர்ச்சி சிவா எல்லோருடைய மனத்திலும் தாராளமாக இடம்பிடித்துவிட்டார். பார்க்கலாம், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று.

(குறிப்பு: சில வருடங்களுக்கு முன் சிவாவை கல்கிக்காக பேட்டி எடுத்தேன். அது சிவாவின் கன்னி பேட்டி. தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் தருகிறேன்.)


இன்னிக்கு தீபாவளியா? பொங்கலா?

…என்று நினைக்குமளவுக்கு அத்தனை படங்கள் ரீலிஸ் ஆகின்றன. எனக்கு தெரிந்து ஐந்து. தமிழ்ப் படம், கோவா, ஜக்குபாய் (தியேட்டர் ரிலீஸ்), கதை, தைரியம். பொங்கல் படங்கள் வந்து இரண்டே வாரங்களே ஆன நிலையில், புது படங்களுக்குப் போதுமான தியேட்டர் இல்லாத நிலை. படங்களை இரண்டாவது ரவுண்ட் ரிலீஸ் செய்யும் சைதை ஸ்ரீநிவாசா தியேட்டரில்  இன்று ‘தைரியம்’ ரிலீஸ் ஆகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் படம் ஆக விளம்பரம் செய்யப்பட்டு, ஐந்து நாள்களுக்கு முன்பு தமிழ்ப் படம் ஆக மாறிய லொள்ளு சினிமாவைத்தான் முதலில் பார்க்க வேண்டும் நினைத்திருந்தேன். இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு எங்கும் டிக்கெட் இல்லை. டிக்கெட் கிடைக்கும் என்பதற்காக அம்பத்தூர் மினிராக்கிக்கோ, ஈசிஆர் மாயாஜாலுக்கோ போக முடியாதே.

ஆன்லைனில் கோவா டிக்கெட்டுகளும் காலி. ஜக்குபாய் தியேட்டர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. இன்றைக்குள் தெரிந்துவிடும், எவையெல்லாம் பிழைக்கும் என்று.

சரக்கு இல்லாத படங்கள், தியேட்டரை விட்டு துரத்தப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அடுத்தடுத்த வாரங்களில் ஏராளமான புதிய, பெரிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக நிற்கின்றன (அசல், பையா, விண்ணைத் தாண்டி வருவாயா). ‘வேட்டை ஆரம்பாயிருச்சு டோய்’ என்று தொடை தட்டிக்கொண்டு நீண்ட நாள்கள் மொக்கை போட முடியாது. வேட்டையாடிய வரைக்கும் போதும் என்று கிளம்ப வேண்டியதுதான். பார்க்கலாம், எத்தனை தேறும் என்று.

‘நெகட்டிவ் மார்கெட்டிங்’ – கடந்த இரண்டு படங்களைப் போல, தனது மூன்றாவது படத்துக்கும் வெங்கட் பிரபு அதே உத்தியைத்தான் பயன்படுத்துகிறார். அதாவது படத்தை, படத்தோடு தொடர்புடையவர்களை மட்டம் தட்டிப் பேசியே கவனம் ஈர்ப்பது. கோவாவுக்கும் அந்த உத்தி கைகொடுக்கிறதா என்று பார்ப்போம். கோவா, Hangover படத்தின் காப்பியாக இருக்குமோ என்று ட்விட்டரில் வள்ளிதாசன் சந்தேகம் எழுப்பியிருந்தார். எனக்கும் அப்படியொரு சந்தேகம் உண்டு.

தமிழ்ப் படம் குழுவினரும் சேனல்களில் அதே நெகட்டிவ் மார்கெட்டிங் உத்தியைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாவம், ஜக்குபாய் குழுவினர். சன் டீவியில் கே.எஸ். ரவிக்குமார், சரத்குமார், ராதிகா மூவரும் படம் பற்றி பாசிட்டிவாக பேச முயற்சி செய்தார்கள். விரக்தியில் அவர்களையும் மீறி நெகட்டிவ் வார்த்தைகளே அதிகம் தென்பட்டன.

*

பொங்கல் ரிலீஸில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலில் நாணயம். தூத்துக்குடியில் பார்த்தேன். படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாள். காலைக் காட்சி. சூரிய கிரகணத்துக்கு பயந்து தியேட்டரில் சுமார் ஐம்பது பேர் மட்டும். டிக்கெட் விஷயத்தில் தூத்துக்குடி இன்னும் திருந்தவில்லை. என் பள்ளி நாள்களில் கௌண்டரில் பதினைந்து ரூபாய் கொடுத்துவிட்டு, கையில் 65 பைசாவுக்கு டிக்கெட் வாங்கியதாக ஞாபகம். இப்போது ஐம்பது ரூபாய் கொடுத்தேன். 14 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார்கள். வளர்ச்சி இருக்கிறது.

படத்தின் விமரிசனம் எழுதவெல்லாம் தோன்றவில்லை. படம் போரடிக்கவில்லை. அதேசமயம் நினைத்து வியக்குமளவுக்கு காட்சி, ஒன்றுகூட படத்திலில்லை. வழக்கம்போல, பிரசன்னா ஸ்கோர் செய்திருக்கிறார். சிபி ம்ஹூம். ஹீரோ இமேஜையும் கெடுத்துக் கொண்டு, வில்லனாகவும் சோபிக்க முடியாமல்… பாவம். சத்யராஜ் போலவே நடிப்பதற்கு அவர் போதுமே, அவர் வாரிசு தேவையில்லையே.

நான் பார்த்த இன்னொரு படம் ஆயிரத்தில் ஒருவன். சோனியா அகர்வால் சத்தியமாக நான் அதற்கு விமரிசனம் எழுதப்போவதில்லை. ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன் என்றுகூட சொல்ல முடியாது. எழுநூற்று ஐம்பதில் ஒருவன்தான் பார்த்தேன். படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் தாமதமாகத்தான் தியேட்டருக்குச் சென்றேன். படத்தில் 25 நிமிடங்களுக்கு மேல் கத்தரி போட்டுவிட்டார்கள் போல. எனவே எனக்கு படம் மிக சீக்கிரம் முடிந்ததுபோல தோன்றியது.

ரீமா சென், தனது பாண்டிய குல ப்ளாஷ்பேக்கைச் சொல்லும்போது பாண்டிய குல மன்னனாக காட்டப்படும் புகைப்படம் (இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.) ஒரு நொடியே வந்ததினால் எனக்கு சட்டென மனத்தில் பதியவில்லை. ஆனால் அதிர்ச்சியாக இருந்தது.

புகைப்படத்தில் இருப்பவர் யார்? ஆண்ட்ரியா சத்தியமாக, பாண்டிய குல மன்னன் அல்ல. ரேவா (மத்திய பிரதேசம்) சமஸ்தான மகாராஜா. 1854 முதல் 1880 வரை அதை ஆண்டவர். பெயர் ரகுராஜ் சிங். சிப்பாய் கலகத்தில் பிரிட்டிஷாருக்கு உதவியதன் மூலம் சில பிரதேசங்களை வெகுமதியாக பெற்றுக் கொண்டவர். மீன் கொடிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. ராஜபுத்திரர். இவரது முன்னோர்கள் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அவரது புகைப்படத்தோடு காட்டப்பட்ட மற்ற ‘பாண்டிய’ புகைப்படங்களையும் முன்பே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்கவில்லை. அவர்களும் பாண்டியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நல்ல ஓவியரை வைத்து, கற்பனையாக ஓவியங்களை வரைந்து காட்டியிருக்கலாம்.

வாழ்க, செல்வராகவனின் வரலாற்றுத் தொண்டு.

ஏன் இந்த கொல வெறி!

………………….

அழகிய தமிழ் மகன், வில்லு, குருவின்னு தொடர்ந்து கொலைவெறி கலைப்படங்களாக கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்த விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள பேனர். அய்யோ.. அய்யோ! அடுத்த படம் என்னதுபா?

வேட்டைக்காரன் – பொருத்தமான டைட்டில்தான்.

படம் நன்றி : kalakkalcinema.com