நான் கடவுளும் மெண்டோஸ் குரங்கும்!

உதயம் தியேட்டரில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமான உடனேயே நான்கு டிக்கெட் வாங்கியாயிற்று. குடும்பத்தினரோடு அல்ல, நண்பர்களோடு பார்ப்பதாகத் திட்டம். சனிக்கிழமை  (பிப்ரவரி 7) மாலைக்காட்சிக்கு உரிய நேரத்தில் சென்றாயிற்று.

சொர்க்க வாசலைத் திறந்து பக்தர்களை உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். எனக்குமுன் வரிசையில் சென்ற ஒருவர் கையில் பெரிய ஊதுபத்தி பாக்கெட். ‘ஓம் நமசி வாயம்’ என்று அதில் இருந்தது. அந்த நபரோடு ஒட்டி நின்றிருந்த பிறர் கையில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி… நல்லவேளை. எதுவுமில்லை.

படம் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய விளம்பரங்கள். குரங்கு, கழுதை. மெண்டோஸ் மிட்டாய் சாப்பிட்ட குரங்கு, ஆதி மனிதனாக பரிணாம வளர்ச்சிபெற்று, கழுதையை அடிமையாக்கும் கான்செப்ட். எனக்கென்னவோ அந்த விளம்பரமே ஆர்யா நடித்ததுபோல  இருந்தது.

பின் வரிசையில் குடும்பத்தோடு ஒருவர் வந்திருந்தார். ஆறு வயது மதிப்புமிக்க பெண்  குழந்தை ஒன்றும் வந்திருந்தது. அதன் கையில் டெடி பியர். கிஷ்கிந்தாவுக்கு பிக்னிக்  போவதுபோல நினைத்து அழைத்து வந்துவிட்டார்போல. ‘தேவனே! இந்த வாதைகளிலிருந்து அவர்களை ரட்சியும்!’

தேசிய விருதை வாங்கப்போகும் ஆர்யாவே! நடிப்பு உலகில் லவம் வரும் நம்பிக்கை நட்சத்திரமே! (வலம் அல்ல, லவம்தான்.) இப்படியெல்லாம் வெளியே ரசிகக் கண்மணிகள்  ஃப்ளக்ஸ் பேத்தல்கள். படத்தில் டைட்டில் கார்டு போடும்போது ‘ஆர்யா’ என்று மட்டும்  போட்டார்கள். நிறைவாக இருந்தது.

எல்லோரும் படத்தோடு ஒன்றிப் போயிருந்தார்கள். பிச்சைக்காரர்களை வைத்து அதிர வைக்கும் ஒரு காட்சி. என் பக்கத்து சீட் நண்பர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.  பின் வரிசையைத் திரும்பிப் பார்த்தேன். தந்தையும் தாயும் தலையைக் குனிந்துகொண்டிருக்க, ஆறுவயது குழந்தை மட்டுமே ‘தேமே’வெனப் பார்த்துக் கொண்டிருந்தது.

இடைவேளை. தியேட்டரின் விராண்டாவில் நிற்க முடியாத அளவுக்கு சிகரெட் புகை யாகம். ஓம் சிவோஹம். அங்கே நிற்பதற்குப் பதில் ஆர்யாவிடமிருந்து கஞ்சா பைப்பை  வாங்கி ஒரு இழு இழுத்துவிடலாம் என்றே தோன்றியது.

ஆர்யா வரும் காட்சிகளே குறைவு. அதிலும் அவர் பேசும் வசனங்கள் மிகக்குறைவு.  அதிலும் தமிழ் வார்த்தைகள் மிகச் சொற்பமே. சமஸ்கிருதமே மிகுதி. ஹரன் பிரசன்னா வோடு சேர்ந்து இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் நினைத்துக் கொண்டேன்.

க்ளைமாக்ஸில் பூஜாவின் நடிப்புக்கு கைதட்டு. ‘சூடா ஒரு தேசிய விருது பார்சல்!’ எ  பிலிம் பை பாலா என்று திரையில் வரும்போது கைதட்டு. அடுத்த பாலா படம் வருவதற்குள் 2011ல் முதல்வர் யார் என்று தெரிந்துவிடும்.

வெளியே வந்தேன். பக்கவாட்டில் நடந்துவந்த ஒருவர் என்னென்னமோ சொல்லிக்கொண்டு வந்தார். திடீரென என் முகத்தைப் பார்த்து, ‘ஓ ஸாரி. என் ஃப்ரெண்டு நினைச்சு  பேசிக்கிட்டு வந்தேன்’ என விலகினார். தவறு அவர் மீதில்லை. எல்லாப் புகழும் பாலாவுக்கே.

அடுத்த காட்சிக்காக மக்கள் தயாராகியிருந்தார்கள். பக்கத்து தியேட்டரில் செம தில்லாக வில்லு விட்டுக்கொண்டிருந்தார் விஜய். மந்தையிலிருந்து விலகிய ஆடாக பாலா தெரிந்தார். ஆட்டுமந்தைக் கூட்டத்தில் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை.

இளநீர் பாட்டியும் பப்பாளி தாத்தாவும்

கடந்த சில வருடங்களில் அவசியமேற்பட்டால் கிழக்கு அலுவலகத்திலேயே இரவு தங்கிவிடுவது வழக்கமாக இருந்தது. ச.ந. கண்ணன், முத்துக்குமார், மருதன் மற்றும் நான்.  எப்போதாவது நால்வரும். பல சமயங்களில் யாராவது இருவர் கூட்டணி அமைத்து. காலையில் எழுந்து வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவோம் அல்லது அலுவலகத்திலேயே ‘கடன்களை’ முடித்துவிட்டு பணிக்குத் தயாராகிவிடுவோம். காலை டிபன் ஆழ்வார்பேட்டை  சூர்யாஸில்.

பொங்கல், பூரி, சாம்பார் இட்லி, மசால் தோசை – சமயங்களில் வெறுப்பாகத்தான்  இருக்கும். வேறு வழியில்லாததால் சாப்பிட்டோம். ஒருநாள் நானும் கண்ணனும் சாப்பிட்டுவிட்டு வரும்போது சி.பி. ஆர்ட் கேலரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு ப ¡ட்டி இளநீர் விற்பதைப் பார்த்தோம். (பல வருடங்களாக விற்றுக் கொண்டிருந்திருக்கலாம். நாங்கள் கவனித்தது அப்போதுதான்.) ‘இளநீர் சாப்பிடலாம்’ என்றேன் கண்ணனிடம். சாப்பிட்டோம்.

அடுத்த சில நாள்களிலும் காலை உணவுக்குப் பின் இளநீர் சாப்பிட்டோம். கண்ணன்  சகஜமாக பாட்டியிடம் பேச்சு கொடுத்தார். ‘இளநிக்குள்ள தண்ணி நிறைய இருக்குதா,  இல்லையான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?’

‘ஆங், அதெப்படி சொல்லுவேன். எங்கப்பாகிட்ட நான் அடி வாங்கிக் கத்துக்கிட்ட ரகசியம். சொல்ல மாட்டேன்.’

இம்மாதிரியான உரையாடலுக்குப் பிறகு கண்ணன் பாட்டியின் மனத்துக்கு நெருக்கமா கிவிட்டார்போல. ஒருநாள் பாட்டி இளநீர் ஒன்றை வெட்டி கண்ணனிடம் கொடுத்தது.  அவர் என்னிடம் கொடுத்தார். அடுத்த இளநீரை வெட்டிக் கொண்டிருந்த பாட்டி  வெடுக்கென்று ஒரு வசனத்தை விட்டது. ‘ஏம்ப்பா, நிறைய தண்ணி இருக்கும்னு நான்  உன்கிட்ட கொடுத்தா, நீ அவன்கிட்ட தூக்கிக் கொடுத்துட்டியே!’

பதறிப்போய் அந்த ‘பாச’இளநீரை கண்ணனிடமே கொடுத்துவிட்டேன். கண்ணனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. பாட்டி எனக்கு ஒதுக்கிய இளநீரை மரியாதையாக வாங்கிக் குடித்தேன். வாழ்க கண்ணன்! வளர்க பாட்டியின் பாசம்!

இருந்தாலும் எனக்குள் உறுத்தல். பாட்டி ஏன் அப்படிச் சொன்னது அல்லது பாட்டியின்  மனத்தில் இடம்பிடிப்பது எப்படி? வாரத்திற்கு இரண்டு இளநீராவது குடிப்பது என்  வழக்கம். அலுவலகத்துக்கு வரும் வழியில் பேருந்தை விட்டு இறங்கி, பாட்டியிடே இளநீர் வாங்கிக் குடிக்க ஆரம்பித்தேன். கண்ணன் இல்லாமல். தனியாக.

வாடிக்கையாளர் ஆனபின் பாட்டி என்னிடமும் பாசம் காட்ட ஆரம்பித்தது. ‘இந்தா, உனக்குன்னே இந்த காயை எடுத்து வைச்சுருக்கேன். நிறைய தண்ணி. தித்திப்பா இருக்குதா?’ –  நிறைய தண்ணீரோ, தித்திப்போ இல்லாவிட்டாலும் பாட்டியின் பாசம் இனித்தது. கண்ணனிடம் பெருமையாகச் சொன்னேன், ‘நானும் பாட்டிக்கு தோஸ்த் ஆகிட்டேன் தெ ரியுமா!’

நாளடைவில் ஒரு தர்மசங்கடம் ஆரம்பித்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தைக் கடக்கும் போதெல்லாம் பாட்டி என்னைப் பார்ப்பதும் நான் அதைப் பார்த்தும் பார்க்காமல் போவதும். எல்லா நேரமும் இளநீர் குடிக்க முடியாதே. ‘அப்புறமா வர்றேன் பாட்டி’ என்று சொல்லிவிட்டுச் செல்வேன்.

தொடர்ந்து சில நாள்கள் நான் வராவிட்டால் பாட்டி உரிமையோடு கோபித்துக் கொள்ளும். ‘நீ இப்பல்லாம் வர்றதே இல்லை. இனிமே உனக்கு இளநி தரமாட்டேன்.’ வாய் தான் சொல்லிக்கொண்டிருக்குமே தவிர பாட்டியின் கையில் அரிவாள் இளநீரைச் சீவிக்  கொண்டிருக்கும்.

ஒருமுறை பாட்டியை நீண்ட நாள்கள் காணவில்லை. பேருந்து நிறுத்தத்தில் இளநீர்  அடுக்கப்பட்டிருக்கும் காற்றில்லாத டயர்களை உடைய துருப்பிடித்த டிரைசைக்கிள்  மட்டும் நின்று கொண்டிருந்தது. சுற்றிலும் பிளாஸ்டிக் சாக்கினால் கட்டப்பட்ட நிலையில். பத்துநாள்களுக்குப் பின் பாட்டியை மீண்டும் கண்டேன். ‘என்னைத் தேடுனியா?  அதையேன் கேக்குறப்பா. காய்ச்சல் படுத்துட்டேன். ஆஸ்பத்திரில. குளிரு தூக்கித்தூக்கிப் போட்டுச்சு. சர்ச்சுக்குக்கூட போகமுடியல. இன்னிக்குத்தான் வந்தேன்.’

அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வர ஆரம்பித்தேன். அந்தச் சமயங்களில் வாக னத்தை நிறுத்தி இளநீர் குடிப்பதுவும், தேவைப்படாத நேரத்தில் சர்ரென்று பாட்டிக்குத்  தெரியாமல் கடந்து செல்வதும் எளிதாக இருந்தது. தர்மசங்கடம் இல்லை.

2008ன் மழைக்காலம் ஆரம்பித்தது. பாட்டிக்கு வியாபாரம் இல்லை. பாட்டியும் இல்லை.  அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதகாலம் இடைவெளி விழுந்துவிட்டது. பா ட்டி இருந்தும் நான் ஏனோ இளநீர் சாப்பிடவில்லை. மனத்துக்குள் உறுத்தல். கடந்த  ஜனவரியில் ஒருநாள் பாட்டியிடம் சென்றேன். ‘எவ்ளோ நாளாச்சு? நீ ஆபிஸ் மாறிப்போயிட்டியோன்னு நினைச்சேன்.’

‘இல்ல பாட்டி, ஊருக்குப் போயிருந்தேன்’ – சமாளித்தேன்.

சென்றவாரம். இளநீர் சாப்பிடுவதற்காக பேருந்து நிறுத்தத்தைப் பார்த்தேன். பாட்டி  இல்லை. டிரை சைக்கிளைத் தேடினேன். அதுவும் இல்லை. என்ன ஆகியிருக்கும்? பாட்டி வியாபாரத்தை இடம்மாற்றிவிட்டதா? இல்லை, வேறு ஏதாவது… பாட்டியின் பெயர்,  எங்கிருந்து வருகிறது என்பதுகூடத் தெரியாதே.

இன்று காலையில்கூட பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன். ஏகப்பட்ட கூட்டம் நின்றி ருந்தாலும் அந்த இடம் வெறுமையாகத்தான் இருந்தது. ஒரு தாத்தா தள்ளுவண்டியில்  பப்பாளி விற்றுக்கொண்டிருந்தார்.

(இதன் தொடர்ச்சி…)

லாலுவுக்கு ஒரு வேண்டுகோள்!

அதிகாலை ஏழு அம்பதுக்கு என் செல்ஃபோன் சிணுங்கும். நண்பர்களோ உறவினர்களோ யாராவது  இருக்கும். எடுத்து காதில் வைப்பேன்.

‘டேய், வீட்லதான இருக்க? வர்ற சண்டே, எங்கம்மாவை ஊர்ல இருந்து அழைச்சுட்டு வர்றேன். தி ருநெல்வேலில இருந்து. தட்கல்ல டிக்கெட் போடணும். எதுல இருக்குதுன்னு பார்த்து எனக்கு ஃபோன் பண்ணு. ம்.. வேணாம், நீயே புக் பண்ணிடு. எனக்கும் அம்மாவுக்கும். அம்மா வயசு  அம்பத்தியாறு.’

வைத்துவிடுவார்கள். செல்லில் மணி பார்ப்பேன். ஏழு அம்பத்துரெண்டு. இன்னும் எட்டு நிமிடங்கள்தான் இருக்கின்றன. தட்டுத்தடுமாறி எழுந்துநிற்பேன். சுவிட்சைத் தட்டுவேன். ரேடியோ  ஒன்னில் சுச்சியின் குரல் குட்மார்னிங் சொல்லும். பக்கத்து அறைக்கு நகருவேன். யுபிஎஸ்ஸின்  முனகலுடன் சிஸ்டம் உயிர்த்தெழும். பிஎஸ்என்எல் மோடம் பல்புகளால் சிரிக்கும். ஐஆர்சிடிசிக்குள்  லாக்-இன் ஆனபின் முகம் கழுவச் செல்லுவேன்.

வந்து உட்காரவும் ஐஆர்சிடிசியின் நேரம் ஏழு அம்பத்தொன்பதாக இருக்கும். பரபரப்பாவேன்.  இன்னொரு வின்டோவில் சதர்ன்ரயில்வே தளத்தில் ரயில்களையும் காலி இருக்கைகளையும்  தெரிந்துகொள்ள கண்கள் படபடக்கும். புறப்படும் இடம், சேருமிடம், தட்கல், பயணிகளின் விவரங்கள் விரல்களிலிருந்து சிதறிவிழும். பணம் செலுத்தும் ஆப்சனை க்ளிக் செய்யும் நேரத்தில் பெரும்பாலும் ராகுகாலம் ஆரம்பமாகும்.

ஒன்று ஐசிஐசியை தளம் வேலைசெய்யாது அல்லது பணம் செலுத்திய பின் சர்வர் எரர் வரும்.  டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருக்காது. மீண்டும் பரபரவென ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அதற்கும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துபோய்விடும் அபாயம் நிறைய உண்டு. டிக்கெட்  புக் செய்யும் நேரத்தில் அவைலபிள்-ஆக இருக்கும். பணம் எல்லாம் செலுத்தியபின் வரும்  டிக்கெட்டில் வெயிட்டிங் லிஸ்ட் என பல்லிளிக்கும் சம்பவங்களும் சகஜம்.

நண்பனுக்கு ஃபோன் செய்வேன். ‘டேய், எல்லாம் காலி. ஏற்கெனவே ரெண்டுதடவை பணம் போயிருச்சு. ஒரே ஒரு ஸ்பெஷல் டிரெயின் விட்டிருக்கான். பகல் பதினொன்னுக்குத்தான் வந்து சேரும். முப்பதியிரெண்டு சீட் இருக்குது. போட்டுரவா?’

*

‘மாப்ளே, நவம்பர் 1 தீவாளி. நாளைக்கு புக்கிங் ஆரம்பமாகுது. உஷாரு!’

தீபாவளி, பொங்கல் என்றால் சரியாக தொன்னூறு நாள்களுக்கு முன்பாக டிக்கெட் புக் செய்ய ஒரு  பெரிய நெட்வொர்க்கே அமைத்து காலை எட்டுமணிக்காகக் காத்திருப்போம். ஆளுக்கு ஓர்  இடத்தில் இருந்துகொள்வோம். செல்ஃபோன்கள் தயார்நிலையில் இருக்கும்.

எட்டு மணிக்கு உள்ளுக்குள்ளிலிருந்து ஒரு குரல் அலறும்.. ‘ஃபயர்!’

‘டேய் எனக்கு ஐஆர்சிடிசிக்கு உள்ளேயே போகலடா. நீ பண்ணிரு’, ‘டேய் என் சிஸ்டம் ரீஸ்டார்ட்  ஆகியிருச்சு.’, ‘மச்சான், தூத்துக்குடி ஃபுல். அனந்தபுரில இருக்குது. சீக்கிரமா பண்ணுடா.’

தீபாவளி, பொங்கலை தூத்துக்குடி தவிர வேறெங்கு கொண்டாட முடியும்? பல்வேறு போராட்ட ங்களுக்குப் பிறகு தீபாவளிக்கான டிக்கெட் புக்கிங்கை செய்து முடிப்போம். அன்று  கிடைக்கவில்லையா? வேறுவழியில்லை, அடுத்தநாளைக்கு முயற்சி செய். துவண்டு விடாதே மனமே, தொடர்ந்து போராடு! உன் தீபாவளி உன் கையில்!

*

அலுவலக நண்பர்களுக்கு வெளியூரில் திருமணமா? ஏதாவது புத்தகக் கண்காட்சிக்கு வெளியூர்  செல்ல வேண்டுமா? அலுவலகத்தின் ஆஸ்தான ரயில்வே டிக்கெட் புக்கிங் வித்வான் முகிலைக் கூப்பிடுங்கள்!

‘மச்சான் நாளைக்குள்ள டிக்கெட்டை கேன்சல் பண்ணிருடா. அப்புறமா எவ்வளவு ஆச்சுன்னு சொல்லு. அனுப்புறேன்’ – இப்படி கேன்சல் சடங்குகளும் பொது வாழ்க்கையில் சகஜம். என்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்டை எடுத்துப் பார்த்தால், எனக்கும் ரயில்வேக்குமான பாசப்பிணைப்பு பளீரிடும். கொடுக்கல் நிறைய. வாங்கல் சற்றே நிதானமாகத்தான் நடக்கிறது. ஒவ்வொரு  டிக்கெட்டும் வங்கிகளுக்கு நான் கட்டிய கப்பத்தொகையை வைத்துமட்டுமே ஒரு நானோ கார் வாங்கியிருக்கலாம் போல!

*

ஒவ்வொரு இரவு தூங்குவதற்கு முன்பு நானும் சொக்கலிங்கமும் பேசிக்கொள்வோம். ‘நாளைக்கு யாருக்காவது டிக்கெட் புக் செய்யணுமா?’

இணையம், டிக்கெட் கவுண்ட்டரில் கால்கடுக்க நிற்கும் அவஸ்தைகளிலிருந்து விடுதலை கொடுத்திருக்கிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த சௌகரியம், இப்படி ஒரு ஏஜெண்ட் அவதாரத்தை எனக்கு அளிக்குமென நினைக்கவில்லை. இருந்தாலும் இணைய வசதியின்றி  கவுண்டரில் நிற்கும் சக மனிதர்களை நினைக்கும்போது உறுத்தலாகவே இருக்கிறது.

*

லாலுவுக்கும் வேலுவுக்கும் ஒரு வேண்டுகோள். டிக்கெட் பதிவு செய்வதில் எனது அனுபவம், வேகம், விவேகம், திறமை – இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மாம்பலம் ரயில்நிலைய பதிவுச்சீட்டு அலுவலகத்தில் பார்ட்-டைம் வேலை போட்டுக் கொடுப்பீர்களா?

மறுமாத்தம் தெரியுமா?

ஆயிரம் வேலை நெருக்கடிகள் இருந்தாலும், சென்னை புத்தகக் காட்சி ஜெகஜ்ஜோதியாக நடந் துகொண்டிருந்தாலும் பொங்கலுக்கு தூத்துக்குடிக்கு ஓடிவிடுவேன். இழக்க விரும்பாத பண்டிகை  அது. தீபாவளி, பொங்கல் அன்று தூத்துக்குடியில் சொந்தவீட்டில் இருந்தால்தான் எனக்குச் சந்தோஷம்.

விடிந்துகொண்டிருக்கும் வேளையில் வீட்டுவாசலில் பனைஓலை மணத்துடன் அம்மாவோடு ÷ சர்ந்து பொங்கல் விடும் அனுபவம், சுகம். 2006ல் மட்டும் பாரா என்னைக் கொஞ்சம் மிரட்டி  வைத்திருந்தார். ‘பொங்கலுக்கா? ஊருக்கா? அதெல்லாம் கூடாது. புக் ஃபேர்லதான் இருக்கணும்.’  அப்போது மிகுந்த மனவருத்தத்தோடு ரயில் ஏறச் செல்லவில்லை. டிக்கெட்டை கேன்சல்கூடச்  செய்யவில்லை. பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ‘போய்ட்டு வா’ என்றார். அடித்துப் பிடித்து கோயம்பேடுக்கு ஓடினேன். பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பின் பஸ் ஒன்றில் ஏறி சுமார்  பதினாறு மணி நேரங்கள் பயணம் செய்து தூத்துக்குடியை அடைந்தேன். வீட்டு வாசலில் பானை  பொங்கிக்கொண்டிருந்தது. ‘பொங்கலோ பொங்கல்!’

சென்னையில் எங்கள் குடியிருப்பில் பொங்கல் எப்படிக் கொண்டாடுவார்கள் என்று தெரிய வில்லை. இனியும் தெரிந்துகொள்ள விருப்பமில்லை. ஊரில் எங்கள் வீட்டில் இரண்டு பானையில்  பொங்கல் வைப்பார்கள். ஒன்றில் சர்க்கரைப் பொங்கல். இன்னொன்றில் சம்பா பச்சரிசி சாதம். கா ய்கறிகள், கிழங்கு வகைகள் நிறைந்த அம்மாவின் அவியல் ஸ்பெஷல். அப்புறம் குண்டா நிறைய  சாம்பார். என் உயரத்தில் பாதி இருக்கும் இலையில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு எழுந்து  கைகழுவகூட முடியாது. எனக்கே தொப்பை தெரியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாயங்காலம் பனங்கிழங்கு வேகும் வாசம் அடிக்கும். கூடவே இன்னொரு அடுப்பில் புளிக்குழம்பு  கொதிக்கும். பின் ஒரு பெரிய வாணலியில் அவியல், பச்சடி, புளிக்குழம்பு எல்லாம் கொட்டிக்  கிளறப்படும். கொதித்து வற்றி கெட்டியாகும் கலவைக்குப் பொதுவான பெயர் பழையகறி. எங்கள்  ஊரில் சொல்லப்படும் பெயர் – மறுமாத்தம். (உச்சரிக்கப்படுவது இப்படித்தான். நிஜ ஸ்பெல்லிங்  தெரியவில்லை. மறுமாற்றமாக இருக்குமோ?)

என் அம்மா செய்யும் மறுமார்த்தத்துக்கு நிகர் எனக்கு ஏதுமில்லை. மாட்டுப் பொங்கல் அன்று,  தண்ணீர் விட்டு வைத்த சம்பா பச்சரிசி சாதத்தில் மறுமாத்தத்தைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால்..  ஆஹா!

மாட்டுப்பொங்கல் தினத்துக்கு தென்தமிழ்நாட்டில் வழங்கப்படும் சிறப்புப்பெயர் – கருநாள் (அ)  கரிநாள். அன்று குடும்பத்தோடு சிற்றுலா செல்வார்கள். பழைய சோற்றையும் பழைய கரியையும்  பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு சென்று சாப்பிட்டு வருவார்கள். தூத்துக்குடியிலும் அதனைச்  சுற்றிலும் உள்ள சில பிரசித்திபெற்ற பகுதிகள் – முயல்தீவு, பாஞ்சாலக்குறிச்சி, அய்யனார் சுணை,  ரோச் பூங்கா, தண்ணீர் தாங்கி, திருச்செந்தூர். பலர் வேன், கார்களை அமர்த்திக் கொண்டு  பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, பாபநாசம் அணை, மணிமுத்தாறு, குற்றாலம்,
கொற்கை பகுதிகளுக்கும் செல்வார்கள்.

சிறுவயதில் பொங்கலன்றே நானும் அக்காவும் அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்துவிடுவோம். ‘அப்பா, இந்த கருநாளைக்கு எங்க போகலாம்?’ சில சமயங்களில் அப்பா அசைந்துகொடுப்பதில்லை.  சில வருடங்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் சென்றிருக்கிறோம். இப்போதெல்லாம் அப்பா  என்னிடம் ஆர்வமாகக் கேட்கிறார்கள் – ‘கருநாளைக்கு எங்க போகலாம்?’

என்னால்தான் இயலவில்லை. காரணம் அன்று மாலை சென்னைக்கு ரயில் ஏறிவிடும்  காரணத்தினால்.

(வெள்ளியன்று புத்தகக்காட்சியில் சந்திக்கலாம். அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள்  வாழ்த்துகள்.)

ஒரு லிட்டர் காபியின் விலை ரூ.100

88.89

திருமங்கலத்தில் பதிவான வாக்கு சதவீதம் பற்றி சொல்லவில்லை. இரண்டாவது நாளின் இறுதியில் சென்னை புத்தகக் காட்சியின் ஏற்பாடுகள் அத்தனை சதவீதம் முடிந்திருக்கின்றன. இன்னமும் தச்சர்கள் ரம்பாவோடு (ரம்பத்தோடு என்றும் சொல்லலாம்) திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மணிகண்டன் மரியாதையாக இங்கே வரவும். எலெக்ட்ரீசியன் யாராவது எகிறிக்குதித்துவரவும். எழுத்தாளர் இன்பராஜா பப்பாசி அலுவலகத்துக்கு அலுத்துக்கொள்ளாமல் வரவும். ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டே இருக்கிறார்கள் – இடைவிடாமல். ‘முகிலைக் காணவில்லை’ என்று நானே நேரடியாகச் சென்று அறிவிப்பு கொடுத்துப்பார்க்கலாம் என்று ஒரு யோசனை.

உருப்படியாகப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள் – பாரதி புத்தகாலயம். உருப்படியில்லாத புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பலரைப் பற்றி ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.

நக்கீரன் ஸ்டாலில் நீயா நானா கோபியைச் சந்தித்தேன். சிரித்துக்கொண்டே இருந்தார், தனது கவிதைப் புத்தகம் ஒன்றின் அட்டையில். நண்பர்களின் தூண்டுதலால் இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளதாக முன்னுரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். வாசகர்களின் ஆசிர்வாதம் இருந்தால் அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளை வழங்குவேன் என்று அருள்வாக்கு சொல்லியிருந்தார். கிடைக்காமல் போகட்டும்.

இந்தமுறை அரங்குக்கு உள்ளேயே அம்சமான டீ (ரூ.5), அருமையான காபி (ரூ.7), அட போட வைக்கும் பஜ்ஜி, அழகழகான பழக்கலவை, அடிநாக்கில் இனிக்கும் பழச்சாறுகள் கிடைக்கின்றன. அரங்குக்கு வெளியே இருக்கும் கேண்டீனில் பாதியை மைசூர் பாகுக்காரர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். 100மிலி அட்டு காபியின் விலை ரூ.10 என்றால் மற்ற பதார்த்தங்களின் விலைகளைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வார இறுதியில் வாங்க வேண்டும். என் அக்காவுக்கு சமையல் குறிப்பு புத்தகங்களில் ஆர்வம் அதிகம். கண்ணதாசனில் அய்யங்கார் சமையல் என்று ஒன்று (அரதப்பழசாக) கண்ணில்பட்டது. எடுத்து பில்போடச் சென்றேன். அருகில் இன்னொரு புத்தகத்தோடு இருந்த நபர், ‘அவரே எழுதியிருக்கிறாரா?’ என்று கேட்டார். ‘எவர்?’ என்று சமையல் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன், ‘எல். சுஜாதா’ என்றிருந்தது.