‘என் புத்தகத்தை வாங்காதீங்க!’

கிழக்கு பதிப்பகம் நீயா நானா கோபிநாத்துடையதாக மாறிய கதை தெரியுமா? இருங்கள், அதை அப்புறம் சொல்கிறேன்.

வாசகர்கள் – பதிப்பாளர்கள் திருவிழா இனிதே முடிந்துவிட்டது. சென்ற வியாழன் தவிர மற்ற எல்லா நாள்களும் புத்தகக் கண்காட்சியில் இருந்தேன். பல்வேறு புதிய (வலைப்பதிவு) நண்பர்களை, வாசகர்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

நிறைய வாங்கினேன். கண்காட்சியில், பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்களை பொங்கல் விடுமுறைக்குப் பின் சாவகாசமாகப் பட்டியலிடுகிறேன். ஆனால் கிழக்கு ஸ்டாலுக்கு வந்து போனவர்களெல்லாம் ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தை வாங்கிச் சென்றார்கள். சந்தேகமில்லாமல் இந்த புத்தகக் கண்காட்சியின் சூப்பர் ஹிட் புத்தகம் அதுவே.

தனிப்பட்ட முறையில் இந்தப் புத்தகக் கண்காட்சி எனக்கு மிகவும் மனநிறைவைக் கொடுத்தது. முகலாயர்கள் 500 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் (ரூ. 250), அகம் புறம் அந்தப்புரம் என்ற 1392 பக்கங்கங்கள் கொண்ட மெகா புத்தகம் (ரூ. 750) இரண்டையும் வாசகர்கள் ஆசையுடன் எடுத்துப் பார்த்து (விலை குறித்து சிறிதும் யோசிக்காமல்) ஆவலோடு வாங்கிச் சென்றார்கள். அதுவும் அகம் புறம் அந்தப்புரம் பிரதிகள் நேற்று விற்பனைக்கு இல்லை. தீர்ந்து விட்டன. (மொத்தம் எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன என்பது குறித்து பின்னர் விசாரித்துச் சொல்கிறேன்.)

பாராவின் மாவோயிஸ்ட், முத்துக்குமாரின் வாத்யார், மருதனின் இரண்டாம் உலகப்போர், கண்ணனின் இடி அமீன், குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு, முத்தையாவின் சென்னை மறுகண்டுபிடிப்பு, தீனதயாளனின் கமல், மதனின் கிமு – கிபி, பல்லவியின் சீனா போன்றவை என் பார்வையில் அதிகம் விற்ற புத்தகங்கள்.

‘உங்களை யாரு இப்போ கண்காட்சி வைக்கச் சொன்னது? பொங்கல் லீவுலதானே வைக்கணும்? யாரைக் கேட்டு மாத்துனீங்க? வழக்கம்போல வைச்சிருந்தா நாங்க சாவகாசமா வந்து பாத்துருப்போம். இப்போ பாருங்க, அரக்க பரக்க வர வேண்டியதாப் போச்சுது.’

ஓர் அம்மணி என்னிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டார். என் மனக்கண்ணில் சங்கமம் புகழ் கனிமொழியின் முகம் தெரிந்தது. சென்னை சங்கமம் வெற்றிகரமாக நடக்க வாசகர்களின் வயிறு குளிர்ந்த வாழ்த்துகள்!

என். சொக்கன் இரண்டு நாள்கள் வந்துபோனார். ஆஹா எஃப்.எம்மிலும் புத்தகக் கண்காட்சியிலும் எங்கள் பொழுது கழிந்தது.

‘கிறுக்கல்’ குரு மணிகண்டன் – கண்காட்சியில் எனக்கு நண்பரானார். மூன்று முறை சந்தித்தோம். ஒருநாள் Nikon காமரா கொண்டு வந்திருந்தார். அதில் 110 டாலர் மதிப்புள்ள சிறப்பு Portrait லென்ஸ் பொருத்தி, பாராவை, என்னை, சொக்கனை, மருதனை புகைப்படங்கள் எடுத்தார். அன்று இரவே மெயிலில் அனுப்பியும் வைத்தார். ‘அட! நானா இது’ என்று ஆச்சரியப்பட்டு போனேன். 81 KBயில் அவ்வளவு தெளிவான புகைப்படம். நன்றி குரு.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் விரும்பாத விஷயம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ். ஒவ்வொன்றும் எக்கச்சக்க விலை. வாடிக்கையாளர்கள் கைகழுவுவதற்குக்கூட சரியாக வசதி செய்து கொடுக்காத அவர்களது மெத்தனப் போக்கு. வளரட்டும் அவர்கள் சேவை.

‘ஏ இங்க, வெறும் ஏ.ஆர். ரஹ்மான் புக்குதான் போட்டிருக்காங்க, வாங்கடா’ – ஒருவன் கமெண்ட் அடித்தபடியே தன் நண்பர்களோடு வேகமாகக் கடந்து சென்றான். ‘கடோபநிஷத்னா என்னன்னு தெரியுமாடி உனக்கு? இங்க இருக்கறது ஒண்ணுமே புரியல. வாடி போகலாம்’ – ஒருத்தி தன் தோழிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றினாள். புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாத நபர்களோடு வந்திருந்த நண்பர்கள் படும்பாட்டை பல இடங்களில் பார்க்க முடிந்தது.

‘நாங்கள்ளாம் கம்பராமாயணத்தையே கரைச்சு குடிச்சவங்க.’ ஒரு பையன் வெட்டி பந்தா செய்தான்.

‘இவரு யாருன்னு சொல்லு’ – அவனுடன் வந்த நண்பன் கையிலிருந்த புத்தகத்தின் அட்டையைச் சுட்டிக் காட்டி கேட்டான்.

‘இவரு தெரியாதா? தாடி வைச்சிருக்காரு. சாக்ரடீஸு’

அந்தப் புத்தகத்தின் அட்டையிலிருந்த கார்ல் மார்க்ஸ் தன் தலையிலடித்துக் கொண்டதுபோல இருந்தது.

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க என்ற தலைப்பின் மூலம் ஏராளமான வாசகர்களைச் சுண்டியிழுத்த கோபிநாத்தின் புத்தகத்தை பலர் வாங்கிச் சென்றார்கள். அவர் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த தினத்தில் ஆட்டோகிராஃப் வாங்க ஏகக்கூட்டம்.

நேற்று ஒரு நபர், தன் பட்டாளத்தோடு கிழக்கை கடந்துசெல்லும்போது உதிர்த்த வார்த்தைகளுக்கான அர்த்தம் இதுவரை பிடிபடவில்லை.’

‘என் புத்தகத்தை வாங்காதீங்கன்னு புக்கு எழுதிருக்காரே கோபிநாத், விஜய் டீவில  வருவாரே, அவரோட கடைதான் இது!’

Leave a Comment