‘இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா?’ – பெரியார்

1967ல் விடுதலை நாளிதழில் பெரியார் தனது பொங்கல் செய்தியை வெளியிட்டார். கடந்த நாள்களில் நடந்த சம்பவங்களால் அவரது மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதை அந்த எழுத்துகளை வெளிப்படுத்தின. காகிதமே பொசுங்கிப் போகுமளவுக்குச் சூடாக இருந்தன அவரது வார்த்தைகள்.

‘………………… சாதாரணமாக ராதாவானாலும் ராமச்சந்திரன் ஆனாலும் இவர்களுக்கு பொது மக்கள் உலகத்தில் உள்ள மதிப்பு இவர்கள் கூத்தாடிகள், வேஷம்போட்டு நடிப்பவர்கள், காசுக்காக எந்த வேஷத்தையும், எப்படிப்பட்ட இழிமக்கள் தன்மையான கதையையும் எந்த உருவத்திலும் நடிப்பவர்கள் என்பதல்லாமல் இவர்களுக்கு பொதுநல யோக்கியதைக்கு ஏற்ற ஒழுக்கம் நாணயம் பொறுப்பு என்ன இருக்க முடியும்? இவர்கள் நடிப்பால் பொதுமக்களுக்கு பெரிதும் பல தீயகுணங்களும், ஒழுக்கக்கேடும் ஏற்படுவதல்லாமல் என்ன கலைஞானம் 100க்கு 90 மக்களுக்கு ஏற்பட்டு விடும்? ஏற்படக்கூடும்?

இக்காரியங்களில் ஈடுபட்ட இரண்டு கூத்தாடிக் கீழ்த்தர மக்களுக்குள் நடந்த மூர்க்கத்தனமான, காலித்தனமான சம்பவத்திற்காக எவ்வளவு ஆர்ப்பாட்டம், விளம்பரம், மக்கள் இடையில் உணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அரசாங்க ஆக்கினைகள் எவ்வளவு என்று பார்த்தோமானால் சமுதாயத்தின், ஆட்சியின் கீழ்த்தரம் எந்த அளவுக்கு இறங்கிவிட்டது என்று கவலைப்படுகிறேன்.

இதற்காக அரசாங்கம் நாட்டு நிகழ்ச்சிகளை ரூ. 1000, ரூ. 2000 செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை 144 உத்தரவு போட்டு தடுப்பது என்றால் இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா? கூத்தாடிகள் அரசாங்கமா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.

நிலைமை இப்படியே மோசமாக வளர்ந்து வருகிறது என்றால், இந்த ஆட்சிக்கு ஆளத்தகுதி இல்லை அல்லது ஜனநாயகத்துக்கும் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தம் இல்லை. ராணுவமோ, சர்வாதிகாரமோ கொண்டுதான் சமதர்மத்தை அமுல்நடத்த முடியும் என்கிற முடிவுக்கு வரவேண்டும்.

ஏன் எனக்கு இப்படி விரக்தி முடிவு தோன்றுகிறது என்றால், இரண்டு கூத்தாடிகளுக்கு ஏற்பட்ட காலித்தன நிகழ்ச்சிக்காக, காங்கிரஸ் ஆபிசு கொளுத்தப்பட்டது, காமராசர் வீட்டுக்குக் காவல், பெரியார் வீட்டுக்குக் காவல், காமராஜருக்குக் காவல் என்றெல்லாம் காரியம் நடப்பதென்றால் பிறகு நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கமுடியும்? இந்த காலித்தனத்தின் பயனாக ஏற்பட்ட விளைவு இது என்றால் நாட்டில் உண்டாக்கப்பட்டிருக்கும் உணர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை பொதுமக்கள், அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்.

காமராஜருக்கோ, காங்கிரஸ் கூட்டங்களுக்கோ, எனக்கோ, காமராஜர் தாயாருக்கோ, அவர் வீட்டிற்கோ என்னதான் கேடுவந்தாலும் அதனால் உலகம் முழுகியா போய்விடும்?
…………………’

***

இந்த ஞாயிறு (27 டிசம்பர்), கிழக்கு பாட்காஸ்டில் எம்.ஜி.ஆர். குறித்த நிகழ்ச்சி. பேசுபவர்கள் ஆர். முத்துக்குமார், பா. தீனதயாளன் – சித்ராவுடன். தவற விடாதீர்கள்.

Leave a Comment