நேற்று கற்றுக்கொண்ட பாடம்!

சிநேகிதிக்குத் திருமணம். திருப்பூரில். நண்பன் சொக்கலிங்கத்தோடு நேற்று காலை 5.45க்கு திருப்பூர் ரயில் நிலையைத்தில் இறங்கினேன். (திருப்பூரில் இறங்காமல் தூங்கிவிடக்கூடாதே என்ற பயத்திலேயே சரியாகத் தூங்கவில்லை. திருப்பூர் வந்துவிட்டது என சொக்கலிங்கம் ஈரோட்டிலேயே என்னை எழுப்பிவிட்டது தனி காமெடி.) ரயில் 45 நிமிடங்கள் தாமதம். இன்னொரு நண்பன் முருகேஷ், பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு 6 மணிக்கு வந்து இறங்கினான்.

திருமணம் முகூர்த்த நேரம் காலை 7.00 – 8.00 என்பதால் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே லாட்ஜுல் ரூம் போட முடிவுசெய்தோம். சிலவற்றில் கிடைக்கவில்லை. ஒரு டொக்கு லாட்ஜில் கிடைத்தது. மணி 7.00 ஆயிற்று. ‘கடமைகளை’ முடித்துவிட்டு கிளம்பினோம். மணி 7.45.

சிநேகிதிக்கு மாப்பிள்ளை தாலி கட்டும் காட்சியை ‘கற்பனை’ செய்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுசெய்துவிட்டு ‘பெருமாநல்லூருக்கு’ பஸ் ஏறினோம். பஸ்ஸில் கண்டக்டர் முதற்கொண்டு பலரிடமும் ‘பெருமாநல்லூர் வந்தா சொல்லுங்க’ என்று சொல்லிவைத்து, ஒருவழியாக அங்கே இறங்கினோம். கல்யாண மண்டபத்தின் பெயரைச் சொல்லி வழி கேட்டபோது ஆளாளுக்குக் குழப்பினார்கள். ஒருவர் போலீஸ் ஸ்டேசனுக்கு வழி சொன்னார். கடைசியாக ஒரு ஆட்டோ டிரைவர் ‘நல்வழி’ நல்கினார். ‘இங்கிருந்து ரெண்டு கிலோமீட்டர் இருக்கும். அதோ வர்ற டவுன் பஸ்ல ஏறுங்க. அடுத்த ஸ்டாப்பிங்தான்.’

மண்டபத்துக்குள் செல்லும்போது மணி 8.20. பந்திக்கு முந்திக் கொண்டிருந்தார்கள். ‘சிநேகிதியை அப்புறம் பார். முதலில் என்னைக் கவனி’ என்றது அரைஜான். எப்போது இடம் காலியாகும் என்று காத்திருந்து இடம் பிடித்து அமர்ந்தோம். அருமையான மெனு. அல்வா, பொங்கல், பூரி சென்னா, வெங்காய தோசை, இட்லி, இரண்டு வகை சட்னிகள், சாம்பார்.

ஆனால் எல்லாம் அளவோடுதான் (ஒன்றே ஒன்று) வைத்தார்கள். மறுமுறை வேண்டுமா என்று கேட்க யாரும் வரவே இல்லை. ‘அரைக்கிணறுதான் தாண்டியிருக்க மவனே’ என்று அறைகூவல் விட்டது அரைஜான். அதற்குள் ‘இந்த வரிசைக்கு வடையே வரல’ என்று இலையை மூடிவைத்துவிட்டு முறுக்கியபடி சண்டைக்குக் கிளம்பினார் ஒரு சகலை. ‘சாப்பிட ஆரம்பிக்கறதுக்குள்ளயே பந்தி முடிச்சுட்டாங்களே’ என புலம்ப ஆரம்பித்தான் முருகேஷ்.

ஏப்பம் எல்லாம் வரவில்லை. இலையெடுக்க வந்துவிட்டார்கள். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எழ வேண்டியாதாயிற்று. கைகழுவிவிட்டு, காப்பி குடித்துவிட்டு, நிதானமாக சிநேகிதியைப் பார்க்கச் சென்றோம். ஒவ்வொருவராக மொய் செய்துவிட்டு  கேமராவுக்கு முகம் காட்டிக் கொண்டிருந்தார்கள். அடுத்து போய்விடலாம், அதற்கடுத்து போய்விடலாம் என்று நாங்கள் மூவரும் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தோம். அரைமணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, ஒருவழியாக கேமராவுக்குக் குறுக்கே பாய்ந்து எங்கள் உரிமையை நிலைநாட்டி, சிநேகிதியிடம் பரிசைக் கொடுத்து, மாப்பிள்ளைக்கு ‘வாழ்த்துகள்’ சொல்லி, புகைப்படத்துக்கு ‘இளிச்சவாய்’ காட்டிவிட்டு வந்தோம்.

வந்த வேலை முடிந்தது. இரவுதான் ரயில். சேரன் எக்ஸ்பிரஸ். ஈரோடிலிருந்து சென்னைக்கு முன்பதிவு செய்திருந்தேன்.  சொந்த வேலைகளைப் பார்க்க, கிளம்பினோம். லாட்ஜுக்கு வந்து, லக்கேஜ் எடுத்துவிட்டு, வாடகையாக ரூ. 275 மனசில்லாமல் கொடுத்தோம். ‘அடுத்து எப்போ வருவீங்க?’ என புன்னகை ஒழுகக் கேட்டார் லாட்ஜ்காரர். ‘வர்றதாவே இல்ல’ இது மைன்ட் வாய்ஸ். ‘வந்தா வர்றோம்’ இது உதடுகளின் அவுட்புட்.

முருகேஷ் கோவைக்கு கிளம்பினான். நானும் சொக்கலிங்கமும் திருப்பூரில் நல்லூர் என்ற இடத்துக்குக் கிளம்பினோம். சொந்தக்காரர்கள் வீட்டுக்கு. அதற்கான பஸ் ஏறி உட்காரும்போது, எனக்குப் பிரியமாக ஜீன்ஸில் ஸீட்டிலுள்ள ஆணி குத்தி பொத்தல் விழுந்துவிட்டது. ரொம்ப நேரத்துக்கு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘நல்லூர் இதாம்பா, இறங்கு’ என்றார் பக்கத்து இருக்கை பெரியவர்.

சொந்தக்காரர்கள் வீட்டிலிருந்து கிளம்பி, மதிய உணவை அவர்களோடு வெளியில் முடித்துவிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தை அடையும்போது மணி 2.40. அடுத்து ஈரோடு செல்வதாகத் திட்டம். ரயிலில் சென்றால் நாற்பதே நிமிடங்கள். டிக்கெட்டுக்காக வரிசையில் நிற்கும்போது, இன்னும் சில நிமிடங்கள் கோவை இண்டர்சிட்டி, ப்ளாட்பார்ம் ஒன்றுக்கு வந்துசேரும் என்ற அறிவிப்பு டென்ஷனைத் தூண்டிவிட்டது. வரிசை கரைவதாகத் தெரியவில்லை. அடுத்த ரயில் எப்போது என்று தகவல் பலகைகளில் தேடினேன். எதுவும் தென்படவில்லை. பத்து நிமிடங்களில் ரயில் வருவதற்கும் சொக்கலிங்கம் டிக்கெட் வாங்க, கவுண்டரை (Counter, திருப்பூர் என்பதால் குழப்பிக்கொள்ள வேண்டாம்.) நெருங்கவும் சரியாக இருந்தது. ரயில் ப்ளாட்பாரத்தில் இருந்து கிளம்பும் நொடியில் தாவி ஏறினோம். கையில் அன்ரிசர்வ்ட் டிக்கெட், ஏறியது ரிசர்வ்ட் பெட்டி. காலியாகத்தான் இருந்தது. எனவே உட்கார்ந்துகொண்டோம், குறுகுறுப்புடன்.

சற்று நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்தார். டிக்கெட்டைப் பார்த்துவிட்டு, முப்பது ரூபாய்க்கு அபராதம் போட்டார். உட்கார இரண்டு இருக்கைகள் ஒதுக்கிக் கொடுத்தார். சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை என்ற மிதப்பு உள்ளுக்குள் தானாக ஏற, நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டேன்.

ஈரோட்டில் என் சகோதரி ஒருத்தியின் வீடு. நீண்ட நாள்கள் கழித்து சந்தித்தோம். பொழுது வேகமாக ஓடியது. இரவு உணவை முடித்தபிறகு, ரயில் நிலையத்துக்கு எத்தனை மணிக்குக் கிளம்பவேண்டும் என்று கேட்டேன். ரயில் எத்தனை மணிக்கு என்று கேட்டார் சகோதரியின் கணவர் ரவி. ‘சேரன் எக்ஸ்பிரஸ்’ என்று சொல்லிவிட்டு டிக்கெட்டை எடுத்துப் பார்த்தேன். ரயில் ஈரோட்டிலிருந்து கிளம்பும் நேரம் ‘00:06′ என்றிருந்தது. பயண தேதி 25 அக். 09.

ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தோன்றியது. சேரன் எக்ஸ்பிரஸ் கோவையில் 22.20க்கு கிளம்பி, ஈரோட்டை அடையும் நேரம் 00.02. ஆக, அது அடுத்த நாள் ஆகிவிடுகிறது. அக். 26, 2009. எனில் என் கையில் நான் வைத்திருக்கும் அக். 25க்குரிய பயணச்சீட்டு செல்லுபடியாகுமா?

ரவியும் நானும் அவசர, அவசரமாக ஈரோடு ரயில் நிலையத்துக்கு விரைந்தோம். தகவல் மையத்தில் விசாரித்தோம். அங்கிருந்த நபர் சர்வ சாதாரணமாகச் சொன்னார், ‘ரயில் காலைலயே போயிருச்சு.’

IRCTC இணையதளம் மூலமாக மாதத்துக்கு சுமார் பத்து டிக்கெட்டுகளாவது முன்பதிவு செய்யும் எனக்கு இந்தப் பிரச்னை புதிது. இதெல்லாம் கவனிக்காமல் ரயிலில் ஏறியிருந்தால்? அப்படி ஏறிய எத்தனை பேர் இறக்கி விடப்பட்டிருப்பார்கள்? சரியாகக் கவனிக்காதது என் தவறுதான். டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்திருந்தால் ஒருவேளை சரியாக வழிகாட்டியிருப்பார்களா? ஒருவேளை ரயில் ஈரோட்டுக்கு சீக்கிரமாக, 23.50க்கு வந்து 23.56க்கு கிளம்பினால் என் டிக்கெட் செல்லுபடியாகியிருக்குமா? (அல்ப ஆசை!) அல்லது சேரனுக்கு முன் வரும் வேறோரு ரயிலில் அத்துமீறி ஏறி, அபராதம் கட்டி பயணம் செய்ய இயலுமா? இந்த விஷயத்தில் IRCTC இணையதளம் மேல் தவறே இல்லையா?

பல கேள்விகள். அதற்கெல்லாம் விடைதேட நேரமில்லை. எப்படியாவது சென்னைக்குச் செல்லவேண்டும். கோவையில் இருந்து வரும் ரயிலில், ஈரோட்டில்  அன்ரிசர்வ்ட் பெட்டியில் ஏறி வருவதெல்லாம் சாத்தியமே அல்ல. ஞாயிறு இரவு என்பதால் கூட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். வெளியே வந்து பிரைவேட் பஸ்களில் விசாரித்தோம். இடம் இல்லை. மீண்டும் சகோதரியின் வீட்டுக்கு வந்தேன். சொக்கலிங்கத்தை அழைத்துக்கொண்டு, லக்கேஜை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தேன்.

மணி இரவு 11.30.சென்னை பேருந்துகளெல்லாம் கிளம்பியிருந்தன. சேலத்துக்கு வண்டி ஏறினேன். அங்கு இறங்கும்போது 12.45. அந்த இரவில் அங்கே காத்திருந்த கூட்டம் மிரள வைத்தது. ஒரு வழியாக சென்னைக்குச் செல்ல சாதாரண பேருந்து கிடைத்தது. அடித்துப் பிடித்து ஏறியதால் இடமும் கிடைத்தது. ஏற்கெனவே மிகவும் களைத்துப் போயிருந்தோம். உட்கார்ந்து தூங்குவதற்கு வசதியில்லாத இருக்கை. பேருந்துகளின் சேனலான பூம் டீவி முழு சத்தத்தோடு தன் ஒளிபரப்பை ஆரம்பித்தது.

‘தாய் மீது சத்தியம்’ படம். பா. தீனதயாளனின் புத்த்தகத்தில் நான் ரசித்து வியந்த சாண்டோ சின்னப்பா தேவர் மீது கோபம் கோபமாக வந்தது. எட்டு மணி நேர அவஸ்தை. வீட்டுக்கு வந்து அலுவலகத்துக்கும் வந்தாயிற்று.

பண இழப்பு. உடல் அசதி. மனக்கஷ்டம். பயணம் செய்யாத டிக்கெட்டுக்கு 24 மணி நேரங்கள் கழித்து, IRCTC தளத்திலேயே TDR விண்ணப்பிக்கலாம் என்று அண்ணாச்சி முத்துகணேஷ் சொன்னார். செய்திருக்கிறேன். பார்க்கலாம்.

சரி எதற்கு இந்தக் கட்டுரை எழுதியிருக்கிறேன் என்றால்… ஆவ்.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது… உங்களுக்கு?

Leave a Comment