அப்பன் மவனே! அருமை யுவனே!

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில்.

சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.

யுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும்  மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி  ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்!)

மூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம்  படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.

அடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம்  பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால்  மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே! அருமை யுவனே! ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா?

ஓவர் டூ அப்பன்! வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச  காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா  பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான  இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக  ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று  சொல்லலாம்.

இந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு  மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி  ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.

ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே!
லிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,
தத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே!
…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி
– இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.

நாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின்  இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக்  காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும்  சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல  முடியும்போல.

கார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

மோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத்  தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் –  என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு  பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் – சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.

ஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது?

தனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.

பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா? இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.

தாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில்  அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே  வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் –  கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.

அங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ  காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – பாடல்.  கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று  தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச்  சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.

(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?)

12 Comments

 1. //மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்!//

  //காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன்//

  :-))

 2. Rayar from dubai says:

  angaditheru vil aval appadi ontrum azhagillai super ra iruku pa

 3. காத்தவராயன் says:

  7G யுவனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது போல. ஆயிரத்தில் ஒருவன் கண்டிப்பாக GV.பிரகாஷ் குமாருக்கு பிரேக் கொடுக்கும். சில குறைகள் இருக்கின்றன காரணம் செல்வராகவன் அவரது முந்தய படங்களின் வாசனையை வார்த்தைகளிலும், வாத்தியங்களிலும் தூவியுள்ளார்.

  கதை நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கி செல்வதாக செல்வா கூறினார், ஆனால் “உன் மேல ஆசைதான்” பாடலும் புதுப்பேட்டையில் காதல்கொண்டு இளமை துள்ளி பின்னோக்கி செல்கிறது.

  சோழர்காலப்பாடலில் விஜய்ஜேசுதாஸ் அவரது தந்தையின் 70வயது குரலில் பாடுவது ஆச்சர்யம்.

  கீழே உள்ள பாடல்களில் பாடகர்களின் பெயர் சில இணையதளங்களில் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது(சரியான தகவல் இங்கே குறிப்பிட்டுள்ளேன்).
  1. பெம்மானே – PB.ஸ்ரீனிவாஸ்-பாம்பே ஜெயஸ்ரீ
  2. தாய் தின்ற(தமிழ்-கன்னடம்) – விஜய் – நித்யஸ்ரீ
  3. தாய் தின்ற(தமிழ்) – விஜய்

  இந்த மூன்று பாடல்களிலும்(படத்தில் ஒன்று மட்டும்தான் இருக்கும் என நினைக்கிறேன்) பிரகாஷ் இசையால் மிரட்டுகிறார், வைரமுத்து ஈழதேசத்து சோகத்தை சோழதேசத்து சோகத்துடன் அழகாக முடிச்சு போடுகிறார்(அதனாலேயே பாடல்கள் கதையிலிருந்து சற்று சறுக்குகிறது. படத்தில் பார்க்கும் போது சரியாக இருக்கலாம்).

  “பெம்மானே” பாடலின் கடைசியில் PB.ஸ்ரீனிவாஸ் சிவனைப்பற்றி பாடும் வரிகள் சங்க இலக்கியத்தரம் வாய்ந்தவை.

  “தாய் தின்ற மண்னே(தமிழ்-கன்னடம்)” பாடலில் “நெல்லாடும் நிலமிங்கே” எனத்தொடங்கும் பல்லவியில் முத்திரை பதிக்கும் வைரமுத்து, பல்லவியில் அரைத்த மாவையே சரணத்திலும் அரைப்பது சலிப்பு.

  “தாய் தின்ற மண்னே (தமிழ்)” பாடலில் ஓரிடத்தில்

  தமிழர் காணும் துயரம் கண்டு
  தலையை சுற்றும் கோளே
  அழதே!

  என்று ஒரு வரி வருகிறது. கவிப்பேரரசுவின் திறமையை மெச்சி (?????????? period film-க்கு எழுதுகிறோம் என்ற நினைப்பு வேண்டாம்)
  கவிஞர்களுக்கு பட்டம் வழங்கிய
  அந்நாளய சோழப்பேரரசுவிடம் புகார் மணி அடிக்கலாமா?
  இல்லை
  கவிஞர்களுக்கு பட்டம் வழங்கும்
  இந்நாளய சோழப்பேரரசுவிடம் (வேற யாரு திருவாரூர் மைந்தன்தான்) புகார் money அடிக்கலாமா?
  என யோசிக்கிறேன்.
  யாரும் கிடைக்கவில்லை என்றால் இயக்குனர் பேரரசுக்கிட்ட போயித்தான் புகார் சொல்லனும்.

  சோழநாட்டின் கதைக்கு பாண்டிய தேசத்து கவிஞனை பயன்படுத்தியதைவிட சோழதேசத்து கவிஞனையே பயன்படுத்தியிருக்கலாம்.

  -காத்தவராயன்

 4. uma shakthi says:

  வால்மீகி பாடல்கள் நன்றாக உள்ளன. ராஜா எப்பவும் ராஜா தான் முகில். ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ வெகு நாள் கழித்து கவித்துவமான அழகிய பாடல். நான் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
  //இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது// ;)))) பகிர்விற்கு நன்றி முகில்.

 5. Kumutha says:

  Vaamanan Padathula “Oru Devadhai Paarkum neram” – Really superb song…. Unga style la sollanumna “Mazhai nindra pin marakilaiyin thooral” maadhri irukkudhu…

 6. Lenin says:

  Haven’t you listened to ‘Moscowin kaveri’.
  Songs are good expecially ‘ gore… gore..’ and ‘pidichiruku’

 7. “அவள் அப்படி ஒன்றும் அழகியில்லை” காதல் பற்றிய தெய்வீகப்பாடல் போல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆராதனைப்பாடல் போல. Realy devotioanl feel. அந்த ராகம் அப்படியா? தெரிந்தால் சொல்லுங்கள்

 8. Senthil says:

  Great Post!

  Keep Going!

  Senthil

 9. Mrithulla says:

  Thanks for the info !!!

 10. K says:

  [தாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார்.] Listen to Ilayaraja’s Concert for RAJ TV you may get a clue for the source.

 11. காத்தவராயன் says:

  K,

  நான் கண்டுபுடிச்சிட்டேன்………

  வைரமுத்து: நெல்லாடும் நிலம் எங்கே?
  கண்ணதாசன்: சீறிய நெற்றி எங்கே?

  முகில், பாரா-விடம் கேட்டு சொல்லுங்க சரியான்னு.

  காத்தவராயன்

 12. Mugil says:

  காத்தவராயன்,
  கண்ணதாசன் பாட்டு பற்றி தெரியல. ஆனா உளியின் ஓசைல இதே மெட்டுல ஒரு சந்தோஷப் பாட்டு இருக்குது. எனக்கு விடைகொடு எங்கள் நாடே பாடல் நினைவுக்கு வருகிறது.

Leave a Reply