புலி புராணம்!

தேசிய விலங்கு என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த மிருகக் காட்சியில் எப்போது புலி குட்டி போடும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. வண்டலூரில் வெள்ளைப்புலி அனு, மூன்று குட்டிகள் போட்டதாக செய்தி. கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

சரி, நம் முன்னோர்கள் புலிகளை எப்படியெல்லாம் அழித்தார்கள்? வேட்டை என்று சொல்லிக்கொண்டு மகாராஜாக்களும் பிரிட்டிஷாரும் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன?

***

வேட்டையாடுதல் என்பது இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று. அதை ஒரு கௌரவமாகக் கருதினார்கள். ‘போன வருசம் மட்டும் நான் பதினேழு காட்டுப்பன்றி, ஒன்பது சிறுத்தை, நாலு புலி கொன்னுருக்கேன்’ என்று சக சமஸ்தான மகாராஜாக்களிடம் பட்டியலிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அத்தோடு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பாடம் செய்துவைத்து ஓர் அறை முழுவதையும் நிரப்பியிருப்பார்கள்.

குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா
குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா

சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும். அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்.. டுமீல்! இன்றும் குவாலியரில் மாதவ் தேசியப் பூங்காவில், சிவ்புரி என்ற வேட்டை அரண்மனை அப்படியே இருக்கிறது. அது மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா கட்டியது.

பொதுவாக வைஸ்ராய், ஒரு சமஸ்தானத்துக்கு வருடத்துக்கு ஒருமுறைதான் செல்லுவார். செல்லும் நேரத்தில் பலே விருந்து உண்டு. அது காட்டை ஒட்டிய சமஸ்தானமாக இருந்தால் வேட்டையும் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால் விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்ததில்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால் யானை வேட்டை சாத்தியம். இவைபோக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன.

பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

கர்ஸன், லேடி கர்ஸன், புலி
கர்ஸன், லேடி கர்ஸன், புலி

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால் ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

மிரள வைக்கும் வேட்டை புள்ளி விவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வரும் அகம் புறம் அந்தப்புரம் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி.)

Leave a Comment