கழுதைகள் மன்னிக்கவும்!

(காதலர் தினத்துக்கும் இந்தக் கட்டுரைக்கும் ராம்சேனாவுக்கும் இத்துனூன்டுகூட தொடர்பில்லை.)

ஆட்டையாம்பட்டி என்றொரு அழகிய குக்கிராமம். (இந்தக் கிராமம் தமிழ்நாட்டில் இல்லை. ஏன் இந்தியாவிலேயே இல்லை. இது ஒரு வெர்ச்சுவல் கிராமம் என்று வைத்துக் கொள்வோமே!) இது திரு மற்றும் திருமதி என்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி வரும் கதை. அவர்களின் மழலைக் காலத்தில் ஆரம்பித்து இளமைக் காலத்தில் தொடர்வதாக உருவாக்கப்பட்ட கதை.

திருவுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். திருமதிக்கு வயது ஆறு மாதமிருக்கும். இரண்டு பேருமே செம அழகாக இருப்பார்கள். ஊரோ கொண்டாடும் அழகு என் சொல்லலாம்.

‘கழுதை கெட்டா குட்டிச் சுவரு’ என்ற ‘திரு’க்குறளுக்கேற்ப ஏதாவது குட்டிச் சுவரைத் தேடிச் சென்று முதுகு சொரிந்து கொண்டிருப்பதுதான் திருவின் முழுநேரப் பொழுதுபோக்கு. இப்படி திரு எல்லாக் குட்டிச் சுவர்களையும் தன் சகாக்களோடு ஆக்கிரமித்துக் கொள்வதால் திருமதி எந்தவொரு சுவரும் கிடைக்காமல் விக்கித்து நிற்பாள்.

(திரு ஒரு ஆண் கழுதை, திருமதி ஒரு பெண் கழுதை என்பதை இங்கே சொல்லிவிடுகிறேன்.)

இப்படி எல்லாச் சுவர்களிலும் திரு தன் முதுகுரேகையை பதித்துவிட,  அதற்குமேல் தன் முதுகு ரேகையை அதில் பதிக்க அருவருப்படைந்து அவஸ்தைப்படுவாள் திருமதி. இப்படி திருவின் மேல் திருமதிக்கு விறுவிறுவென வெறுப்பு வளர்ந்துகொண்டே போனது.

இரண்டு வருடங்கள் கழிந்தன.

அன்று, தான் உண்டு கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு பேப்பரை திருமதிக்கு கொடுத்தான் திரு. ஆனால் திருமதி அதை வாங்கிக் கொள்ளவில்லை. ‘வேண்டாம்’ என மறுத்தபோது திருமதியின் முகத்தில் வெளிப்பட்டது வெட்கம் கலந்த கோபமா, அல்லது வெறுப்பு கலந்த ஆத்திரமா என திருவால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் அந்தப் பேப்பரில் இருந்த வார்த்தைகள் ‘ஓடிப்போகலாமா?’

தினம் தினம் திருமதி செல்லும் பாதையில் ஒரு ஒற்றை ரோஜாவோடு காத்திருப்பான் திரு. ஒருநாளும் அந்த ரோஜாவை வாங்கிக் கொண்டதில்லை திருமதி. அதுக்காக கவலைப்பட்டுக்கொண்டு கண்ணீர் விட்டதில்லை திரு. என்ன செய்வான்? வேறேன்ன.. ரோஜாவைத் தின்று விடுவான்.

ஆட்டையாம்பட்டியில் அந்த வருடம் ஐப்பசி தாண்டியும் மழை ஒரு எஸ்.எம்.எஸ். கூட அனுப்பவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. கண்மாய் நிர்வாணமாகக் கிடந்தது. கள்ளிச் செடிகளும், கருவேலம் மரங்களும்தான் பாக்கியிருந்தன.

‘எப்பா பதினைஞ்சு வருசங்கழிச்சு இப்படிப் பஞ்சம் பல்லைக் காட்டுது. நம்ம ஊரு எல்லைச்சாமிக்கு வர்ற வெள்ளிக்கிழம பொங்க வைச்சு  பூசாரி கிட்ட குறி கேட்டுருவோம்!’ என பஞ்சாயத்துப் பெரிசு தன் பஞ்ச் தீர்ப்பை வழங்கினார்.

‘ஏஏஏய்ய்ய்.. நா ஆத்தா வந்திருக்கேன்.. ஊருல நல்ல காரியம் ஏதோ தடங்கலாயிடுச்சு. பெரும் தெய்வக் குத்தம் ஆயிடுச்சு!. மழ தண்ணீ வேணுமுன்னா இளங் கழுதைகளுக்கு கண்ணாலம் செஞ்சு வைக்கிறதுதான் ஒரே பரிகாரம். வர்ற பவுர்ண அன்னிக்கு கண்ணாலம் நடக்காட்டி அடுத்த ஏழு வருசங்களுக்கு பஞ்சந்தேன்.. பட்டினிதேன்!’ – பூசாரி கூறிய வாக்கு திருமதியை பூச்சாண்டி காட்டியது. காரணம் ஊரிலுள்ள ஒரே இளம் பெண் கழுதை அவள் மட்டும்தான். கல்யாணம் சரி. இதற்காக வெளியூரில் அல்லது வெளிநாட்டிலா அவளுக்கு மாப்பிள்ளை தேடப் போகிறார்கள். திரு மட்டும்தான் ஒரே சாய்ஸ்!

நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது. போயும் போயும் அவனுக்கா வாழ்க்கைப்பட வேண்டுமென நினைத்த திருமதி அன்று இரவே ஊரை விட்டு ஓடிப்போக முடிவு செய்தாள். பதுங்கிப் பதுங்கி தெருத்தெருவாக ஒதுங்கி ஒதுங்கி அவள் நழுவிக் கொண்டிருக்கும்போதே பார்த்துவிட்டான் திரு. அவள் ஓட, அவன் துரத்த.. அதற்கு மேல் துரத்த முடியாமல் சோர்ந்து போய் தன் சாதகத்தை ஆரம்பித்துவிட்டான் திரு. ஊரே ஒன்று கூடி பிடித்தனர், இருவரையும்!

‘ஏலேய்.. இன்னொரு தெய்வக்குத்தம் நடக்கப் பாத்துச்சுலே! கழுதைய்ங்க தப்பிச்சுப் போயிருந்துச்சுன்னா வேற கழுதைய்ங்களுக்க நாம எங்கிட்டுப் போறது? இந்தக் கல்யாண சோடிகளை நம்மூரு எல்லைச் சாமி கோயில்லயே கட்டிப் போட்டு, காவலா ஒரு ஆளையும் போடுங்கவே!’ என்று ஊர்ப் பெருசு ஒருவர் கூற திருமதிக்கு தலை சுற்றியது.

‘ஒரு பொம்பளையோட மனசு இன்னொரு பொம்பளைக்குத்தான் புரியும். நம்ம மனசைப் புரிஞ்சுக்குற மாதிரி இங்க எவளுமே இல்லையே’ என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் திருமதி. அவளை சந்தோஷமாக உரசியபடி பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் திரு.

கல்யாண நாள் வந்தது. தனக்கு பட்டுவேட்டிச் சட்டை கிடைக்கும், அவளுக்குச் சின்னாளப் பட்டுச் சீலை கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த திருவின் நினைப்பில் அரை லாரி மண் விழுந்தது. சிக்கனமாக தண்ணீரைச் செலவழித்து குளிப்பாட்டி விட்டனர். ஏழெட்டு பூக்களால் கட்டப்பட்ட மாலைகள் இரண்டு. (மொத்தமே ஏழெட்டு பூக்கள்தாங்க!) திருமதியின் நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்ட பொட்டு. ஊரே கூடி நின்றது. ஒரு மஞ்சள் கயிறுடன் பூசாரி தயாராக இருந்தார்.

கொஞ்சமாவது வெட்கப்படுவாள் மணப்பெண் என எதிர்பார்த்து ஏமாந்தான் திரு. ‘கழுதைக்கு வாக்கப்பட்டா கனைச்சுத்தானே ஆகணும்’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் திருமதி.

நையாண்டி மேளம் கொட்ட, வெற்றிலைக் கறை படிந்த வாயோடு புன்னகைத்து திருவின் சார்பில் திருமதிக்குத் தாலி கட்டினார் பூசாரி. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதற்குப் பதிலாக பூசாரியை மிதித்து அவர் வலியால் அலறுவதைப் பார்க்க வேண்டும் என துடித்தாள் திருமதி. பத்மஸ்ரீ வாங்கியது போல் பெருமித்துடன் நின்று கொண்டிருந்தான் திரு.

கல்யாணச் சாப்பாடு என அல்லோகலகல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. திருவுக்கும் திருமதிக்கும் கழுத்தில் போடப்பட்ட அந்த ‘மெகா’ மாலைதான் கல்யாணச் சாப்பாடு. சாப்பிட்ட மக்களெல்லாம் ஏப்பம் விட்ட வாயோடு மழை வருகிறாதா இல்லையா என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, சூரியனால் வியர்வை மழை பொழிந்து கொண்டிருந்தது.

ஒரு வாரமாயிற்று. ‘கழுதைக்குத் தெரியுமா காதலோட வாசனை’ என திரு வெறுக்குமளவுக்கு சண்டித்தனம் செய்து கொண்டிருந்தாள் திருமதி.

‘தாலி கட்டின புருஷனை மதிக்க மாட்டீங்கியே! நீயெல்லாம் ஒரு பொம்பளையா?’ கோபமாகக் கத்தினான் திரு.

‘இது தாலிக் கயிறில்ல.. என் கழுத்துல ஏறுன தூக்குக்கயிறு!’ பதிலுக்குக் கத்தினாள் திருமதி. இதுவே வாடிக்கையாயிற்று.

‘மழை பெஞ்சிடுச்சுன்னா இந்தத் தாலியைக் கழட்டி வீசிரலாம். இல்லை சாஸ்திரத்துக்கு கல்யாணம்தான் பண்ணியாச்சே. இனிமே இவன் கூட வாழப் பிடிக்கலன்னு டைவர்ஸ் அப்ளை பண்ணலாமா’ என்றெல்லாம் யோசித்தாள் திருமதி.

மழை வந்த பாடில்லை.

மூன்று மாதங்கள் கழிந்தது. இடைப்பட்ட நாட்களில் திரு-திருமதி ஆதர்ச தம்பதிகளாக மாறிப்போயினர். ‘சோடின்னா இதான்யா சோடி’ என சாலமன் பாப்பையா பட்டிமன்றம் வைத்தால் தீர்ப்பு சொல்லுமளவுக்கு மாறிப் போயினர்.

மேகம் கருத்தது. ரம்பா, மேனகா, ஊர்வசி என்ற பெயர்கள் கொண்ட மூன்று புயல்கள் அடுத்தடுத்து கரையைக் கடந்தது. கண்மாய் மட்டுமல்ல. ஆட்டையாம்பட்டியே நிறைந்து போனது. எங்கு பார்த்தாலும் வெள்ளம்.

‘ஏஏய்ய்ய்… மழை நிக்கணும்னா அந்தக் கழுத கழுத்துல கெடக்குற தாலியைக் கழட்டணும். தானா நிக்கும் மழ’ இடுப்பளவு நீரில் ஆவேசமாக வாக்குச் சொன்னார் பூசாரி.

‘நானாடா உங்களைக் கண்ணாலம் பண்ணிவைக்கச் சொன்னேன். யேய் நீங்க நெனைச்சா கட்டுறதுக்கும் தேவையில்லாட்டி எடுக்கறதுக்கும் என் தாலி என்ன சினிமா ஷூட்டிங்குக்கு போட்ட செட்டா! புருசன் உசிரோட இருக்கறப்ப தன் தாலியைக் கழட்டிக் கொடுக்க கலாசாரத்தைக் கட்டிக் காக்குற எந்தப் பொம்பளையும் சம்மதிக்க மாட்டா! முட்டாப் பசங்களா, உங்களால முடிஞ்சதைப் பண்ணிக்கோங்கடா’ உள்ளுக்குள்ளேயே குமுறினாள் திருமதி.

சிறிசு முதல் பெருசு வரை ஊரே திரண்டு தேடியது திருமதியை.

மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஊரைத் தாண்டி தண்டவாளத்தின் மேல் ஒரு நிம்மதியான பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தனர் அந்தக் காதல் ஜோடிகள்.

கழுத்தில் மஞ்சள் கயிறோடு திருமதி உங்கள் ஊருக்கும் தஞ்சம் புக வரலாம். வந்தால் இந்தக் கட்டுரையை அச்செடுத்து அந்தக் காகிதத்தை அவளிடம் காண்பியுங்கள். சந்தோஷமாகச் சாப்பிடுவாள்.

Leave a Comment