லாலுவுக்கு ஒரு வேண்டுகோள்!

This entry was posted by Mugil on Tuesday, 27 January, 2009 at

அதிகாலை ஏழு அம்பதுக்கு என் செல்ஃபோன் சிணுங்கும். நண்பர்களோ உறவினர்களோ யாராவது  இருக்கும். எடுத்து காதில் வைப்பேன்.

‘டேய், வீட்லதான இருக்க? வர்ற சண்டே, எங்கம்மாவை ஊர்ல இருந்து அழைச்சுட்டு வர்றேன். தி ருநெல்வேலில இருந்து. தட்கல்ல டிக்கெட் போடணும். எதுல இருக்குதுன்னு பார்த்து எனக்கு ஃபோன் பண்ணு. ம்.. வேணாம், நீயே புக் பண்ணிடு. எனக்கும் அம்மாவுக்கும். அம்மா வயசு  அம்பத்தியாறு.’

வைத்துவிடுவார்கள். செல்லில் மணி பார்ப்பேன். ஏழு அம்பத்துரெண்டு. இன்னும் எட்டு நிமிடங்கள்தான் இருக்கின்றன. தட்டுத்தடுமாறி எழுந்துநிற்பேன். சுவிட்சைத் தட்டுவேன். ரேடியோ  ஒன்னில் சுச்சியின் குரல் குட்மார்னிங் சொல்லும். பக்கத்து அறைக்கு நகருவேன். யுபிஎஸ்ஸின்  முனகலுடன் சிஸ்டம் உயிர்த்தெழும். பிஎஸ்என்எல் மோடம் பல்புகளால் சிரிக்கும். ஐஆர்சிடிசிக்குள்  லாக்-இன் ஆனபின் முகம் கழுவச் செல்லுவேன்.

வந்து உட்காரவும் ஐஆர்சிடிசியின் நேரம் ஏழு அம்பத்தொன்பதாக இருக்கும். பரபரப்பாவேன்.  இன்னொரு வின்டோவில் சதர்ன்ரயில்வே தளத்தில் ரயில்களையும் காலி இருக்கைகளையும்  தெரிந்துகொள்ள கண்கள் படபடக்கும். புறப்படும் இடம், சேருமிடம், தட்கல், பயணிகளின் விவரங்கள் விரல்களிலிருந்து சிதறிவிழும். பணம் செலுத்தும் ஆப்சனை க்ளிக் செய்யும் நேரத்தில் பெரும்பாலும் ராகுகாலம் ஆரம்பமாகும்.

ஒன்று ஐசிஐசியை தளம் வேலைசெய்யாது அல்லது பணம் செலுத்திய பின் சர்வர் எரர் வரும்.  டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருக்காது. மீண்டும் பரபரவென ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அதற்கும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துபோய்விடும் அபாயம் நிறைய உண்டு. டிக்கெட்  புக் செய்யும் நேரத்தில் அவைலபிள்-ஆக இருக்கும். பணம் எல்லாம் செலுத்தியபின் வரும்  டிக்கெட்டில் வெயிட்டிங் லிஸ்ட் என பல்லிளிக்கும் சம்பவங்களும் சகஜம்.

நண்பனுக்கு ஃபோன் செய்வேன். ‘டேய், எல்லாம் காலி. ஏற்கெனவே ரெண்டுதடவை பணம் போயிருச்சு. ஒரே ஒரு ஸ்பெஷல் டிரெயின் விட்டிருக்கான். பகல் பதினொன்னுக்குத்தான் வந்து சேரும். முப்பதியிரெண்டு சீட் இருக்குது. போட்டுரவா?’

*

‘மாப்ளே, நவம்பர் 1 தீவாளி. நாளைக்கு புக்கிங் ஆரம்பமாகுது. உஷாரு!’

தீபாவளி, பொங்கல் என்றால் சரியாக தொன்னூறு நாள்களுக்கு முன்பாக டிக்கெட் புக் செய்ய ஒரு  பெரிய நெட்வொர்க்கே அமைத்து காலை எட்டுமணிக்காகக் காத்திருப்போம். ஆளுக்கு ஓர்  இடத்தில் இருந்துகொள்வோம். செல்ஃபோன்கள் தயார்நிலையில் இருக்கும்.

எட்டு மணிக்கு உள்ளுக்குள்ளிலிருந்து ஒரு குரல் அலறும்.. ‘ஃபயர்!’

‘டேய் எனக்கு ஐஆர்சிடிசிக்கு உள்ளேயே போகலடா. நீ பண்ணிரு’, ‘டேய் என் சிஸ்டம் ரீஸ்டார்ட்  ஆகியிருச்சு.’, ‘மச்சான், தூத்துக்குடி ஃபுல். அனந்தபுரில இருக்குது. சீக்கிரமா பண்ணுடா.’

தீபாவளி, பொங்கலை தூத்துக்குடி தவிர வேறெங்கு கொண்டாட முடியும்? பல்வேறு போராட்ட ங்களுக்குப் பிறகு தீபாவளிக்கான டிக்கெட் புக்கிங்கை செய்து முடிப்போம். அன்று  கிடைக்கவில்லையா? வேறுவழியில்லை, அடுத்தநாளைக்கு முயற்சி செய். துவண்டு விடாதே மனமே, தொடர்ந்து போராடு! உன் தீபாவளி உன் கையில்!

*

அலுவலக நண்பர்களுக்கு வெளியூரில் திருமணமா? ஏதாவது புத்தகக் கண்காட்சிக்கு வெளியூர்  செல்ல வேண்டுமா? அலுவலகத்தின் ஆஸ்தான ரயில்வே டிக்கெட் புக்கிங் வித்வான் முகிலைக் கூப்பிடுங்கள்!

‘மச்சான் நாளைக்குள்ள டிக்கெட்டை கேன்சல் பண்ணிருடா. அப்புறமா எவ்வளவு ஆச்சுன்னு சொல்லு. அனுப்புறேன்’ – இப்படி கேன்சல் சடங்குகளும் பொது வாழ்க்கையில் சகஜம். என்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்டை எடுத்துப் பார்த்தால், எனக்கும் ரயில்வேக்குமான பாசப்பிணைப்பு பளீரிடும். கொடுக்கல் நிறைய. வாங்கல் சற்றே நிதானமாகத்தான் நடக்கிறது. ஒவ்வொரு  டிக்கெட்டும் வங்கிகளுக்கு நான் கட்டிய கப்பத்தொகையை வைத்துமட்டுமே ஒரு நானோ கார் வாங்கியிருக்கலாம் போல!

*

ஒவ்வொரு இரவு தூங்குவதற்கு முன்பு நானும் சொக்கலிங்கமும் பேசிக்கொள்வோம். ‘நாளைக்கு யாருக்காவது டிக்கெட் புக் செய்யணுமா?’

இணையம், டிக்கெட் கவுண்ட்டரில் கால்கடுக்க நிற்கும் அவஸ்தைகளிலிருந்து விடுதலை கொடுத்திருக்கிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த சௌகரியம், இப்படி ஒரு ஏஜெண்ட் அவதாரத்தை எனக்கு அளிக்குமென நினைக்கவில்லை. இருந்தாலும் இணைய வசதியின்றி  கவுண்டரில் நிற்கும் சக மனிதர்களை நினைக்கும்போது உறுத்தலாகவே இருக்கிறது.

*

லாலுவுக்கும் வேலுவுக்கும் ஒரு வேண்டுகோள். டிக்கெட் பதிவு செய்வதில் எனது அனுபவம், வேகம், விவேகம், திறமை – இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மாம்பலம் ரயில்நிலைய பதிவுச்சீட்டு அலுவலகத்தில் பார்ட்-டைம் வேலை போட்டுக் கொடுப்பீர்களா?

9 Responses to “லாலுவுக்கு ஒரு வேண்டுகோள்!”

  1. uma

    முகில்…. நீங்க மக்களுக்கு இந்த ஃப்ரீ சர்வீஸ் செய்யறது லாலுவுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம். உங்க பாஸ்போர் சைஸ் போட்டோ இருந்தா அனுப்பி விடுங்க அவர் பார்த்து சந்தோஷப்படுவார்….சரி அது இருக்கட்டும் எனக்கு அடுத்த வாரம் திருநெல்வேலிக்கு எட்டு டிக்கெட் வேணும், அடுத்த மாசம் மந்த்ராலயம் போகலாம்னு ப்ளான் பண்ணிருக்கோம்…முகில் இருக்கையில் கவலை எதற்கு..என்னது டிக்கெட் பணத்தை ஊருக்கு போயிட்டு வந்துட்டு பயணம் திருப்தியா இருந்தா கொடுக்கறதைப் பத்தி யோசிக்கலாம்…

  2. முகில்
    இந்நேரம் உங்களுக்கு IRCTCலேர்ந்து பிரத்தியேக அழைப்பு வந்திருக்கனுமே (எங்கூட வேலை பார்த்தவர் இதுல ரெக்கார்டு – 59000 ரூவா, மூனு வருசத்துல, அவருக்கு அழைப்பு வந்திருச்சு! ஆனா அவங்க தர்றதா சொன்ன கார்டுதான் இன்னும் வரவேயில்லை!) இந்த இடுகை உங்களுக்கு உதவுதான்னு பாருங்க – A Greasemonkey script to show the availability without an extra click)
    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  3. Mugil

    நன்றி ரமணன்,

    நீங்கள் கொடுத்த ஸ்கிரிப்ட் அருமை!

  4. Muthuganesh

    அண்ணாச்சி நமக்கு எதுக்கு வேலை. பேசாம ஒரு ரயிலுக்கு உங்கள் பேர வைக்கச் சொல்லுங்க. எப்படி நம்ம யோசன?

  5. ila

    அடக் கொடுமையே, இவ்ளோ களோபரமா இருக்குமா??

  6. goinchami

    சூப்பரப்பு. கொளுத்திட்டடே. புக் பண்ணுறது மட்டுமாடே செய்யுத? கேன்சல் திருவிளான்னு ஒண்ணு உண்டில்லா? லாலு என்னிய வந்து கேக்கட்டு, சொல்லுதேன். ரயில் பவனுக்கு முகில் பவன்னு பேரமாத்திரச் சொல்லி.

  7. அம்புட்டு நல்லவனா நீ? உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன்.முந்தின நாளே சொன்னா போதுமா? எவ்ளோ சர்வீஸ் சார்ஜ்? :-)

  8. நன்றி முகில்! மற்றொன்று – http://www.cleartrip.com/trains/calendar – Cleartrip Train Calendar – availability 4 a range of dates across trains, can find best date & train to travel.

    அன்புடன்
    வெங்கட்ரம்ணன்

Trackbacks/Pingbacks

  1. இரயில் பயணங்களில்! « அன்பே சிவம்!

Leave a Reply