திடுக் திடுக் – ஞாநி – கிழக்கு மொட்டைமாடி

கிழக்கு மொட்டைமாடியில் இன்று இரண்டாவது கூட்டம். சிறப்பு அழைப்பாளர் ஞாநி. பொருள் :  மும்பை பயங்கரவாதத் தாக்குதல். என்ன பேசினார்கள், எந்த மாதிரியான விவாதம், தப்பு, சரி போன்ற பல விஷயங்களை கண்டிப்பாக மற்ற பல இணைய நண்பர்கள் கண்டிப்பாக எழுதுவார்கள்  (எழுத ஆரம்பித்திருப்பார்கள்). என்னுடைய தனிப்பட்ட பார்வையில் சில ‘பொது’ விஷயங்கள்.

* ஆரம்பத்தில் வெகு சாதாரணமான வார்த்தைகளோடு கூட்டம் ஆரம்பித்தது. கடைசி வரிசையில்  உட்கார்ந்திருந்த எனக்கு கொட்டாவி வந்தது. காபி எப்போது கிடைக்கும் என்று காத்திருந்தேன்.

* ஞாநியின் முதற்கட்ட பேச்சு முடிந்தபிறகு, விவாதம் ஆரம்பித்தது. விவகாரங்களும். இருக்கையை உதறி எழுந்த நபர்களிடமிருந்து உத்வேகக் கேள்விகள். நிமிடத்துக்கு நிமிடம் சூடு கூடியது. மொட்டைமாடியில் நிறைய வேண்டாத கட்டைகள், கிரில் கம்பிகள் வேறு கிடந்தன. எனக்கு  சட்டக்கல்லூரி காட்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன.

* கிட்டத்தட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு போல சூழல் மாறியிருந்தது. கேள்வி கேட்ட சிலர்  காலில் ஷூ அணிந்திருந்ததும் என் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.

* கேள்வி கேட்டுவிட்டு சட்டென அங்கிருந்து நகர்ந்து ஓரம்போன ஒருவர், செல்பேசியில் கொஞ்ச  நேரம் பேசிவிட்டுத் திரும்பினார். சிறிதுநேரம் கழித்து மொட்டை மாடியிலிருந்து கீழே எட்டிப்  பார்த்தேன். ஆட்டோ(க்கள்) தென்படவில்லை.

* நான்கைந்து விமானங்கள் மொட்டைமாடியைக் கடந்தன. கொஞ்சம் திகிலோடுதான் மேலே  பார்த்தேன். எதுவும் தாழ்வாகப் பறக்கவில்லை.

* மும்பையை விட்டு பேச்சு எங்கெங்கோ திசைமாறிப்போனது. மதக்கலவரம், சாதிக்கலவரம் உருவாகிவிடுமோ என்றொரு பயம் வந்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதிலும் சிலர்  அடிக்கடி பின்னங்கழுத்துக்கு அருகே கையைக் கொண்டு சென்றபோது அடிவயிற்றில் பக்.

* குமுதம், ஆனந்தவிகடன், தீம்தரிகிட, ஒற்றை ரீல் – ஞாநிக்கான பிரத்யேக கேள்விகள் தொடுக்கப்பட்டு அதற்கான விளக்கங்கள் சென்றுகொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் இருவருக்கிடையே வேறொரு விவாதம். ‘ஞா’வும் ’நி’யும் தனித்தனியே தமிழெழுத்துகள்தான். ஆனால்  ‘ஞாநி’ தமிழ் வார்த்தை இல்லை. இதுக்கு என்ன சொல்லுறீங்க?. ‘யாரெல்லாம் உண்மையான  தமிழன்’ என்ற பிரச்னை கிளம்புவதற்குரிய அறிகுறிகள் முளைத்தன.

இந்த மொட்டை மாடிக் கூட்டத்தின் முடிவில் நான் எடுத்த முடிவு : இதுவரை நான் டூவிலர் காப்பீடு  தவிர வேறெதுவும் எடுக்கவில்லை. அடுத்த கூட்டத்துக்குள் தனிநபர் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

15 thoughts on “திடுக் திடுக் – ஞாநி – கிழக்கு மொட்டைமாடி”

 1. செம காமெடி, கலக்கல் முகில்!!!!!!!!

  பெங்களூர் வாழ்க்கையில் ஒரே வருத்தம், இதையெல்லாம் அனுபவிக்க முடியலையேங்கறதுதான் 😉

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

 2. எப்படிங்க இவ்வளவு நக்கல் வருது? ஊரு கோயமுத்தூரா?

 3. இதை விட ஒரு சூப்பர் ரிபோர்ட் யாராலும் எழுத முடியாது என்று உத்திரவாதமாக என்னால் சொல்ல முடியும். முடியாது என்று யாராவது சொன்னால், ஆட்டோ அனுப்ப மாட்டேன், நான் நேரில் வந்து உதைப்பேன் 😉

 4. சென்ற பின்னூட்டத்தில் “முடியாது என்று யாராவது சொன்னால், ” என்பதை “எழுத முடியும் என்று யாராவது சொன்னால்” என்று வாசிக்கவும்

 5. தலைவா பின்னிட்ட. சூப்பர். எப்படித்தான் உன்னாலமட்டும் இப்படியெல்லாம் எழுதமுடியுதோ? வாலும் கலைவானரே, நீ வால்க.வைகைப்புயலை விஞ்சிய வண்ணாரப்பேட்டை முயலே நீ வால்க.

 6. சம்பவ(!!!) தினத்தன்று அ.வெண்ணிலாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போய்விட்டதால் மொ.மா கூட்டத்திற்கு வர முடியவில்லை..உங்கள் பதிவைப் படித்ததும் ‘ஆஹா’ என்று நினைத்துக் கொண்டேன்…நான் வராததால் பெரும் நஷ்டம் எதுவுமில்லை, ஒரு கேள்வியை கூட்டம் இழந்துவிட்டது முகில் மேலும் பதட்டப்படாமல் இருக்க முடிந்தது..அவ்ளோ தான்பா..

 7. // மொட்டைமாடியில் நிறைய வேண்டாத கட்டைகள், கிரில் கம்பிகள் வேறு கிடந்தன. எனக்கு சட்டக்கல்லூரி காட்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன. //
  ஏன் இந்த விபரீத கற்பனை.. 😛

 8. Jeevan Anand, Jeevan Aastha, Jeevan Nidhi என்று பல காப்பீடுகள் உள்ளன.எந்த காப்பீடு வேண்டும் என்று சொல்லுங்கள், Application form கொண்டு வருகிறேன் 🙂

 9. எங்கள் ஊர் அரசு நூலகத்தில் வாசகர் வட்டம் என்ற ஒரு இலக்கிய அமைப்பு இருந்தது. அதன் செயலாளராக ஒரு கராத்தே மாஸ்டர் இருந்தார். அரசியல், சமூக, இலக்கிய விவாதங்களின் போது தன் கருத்தை ஆணித்தரமாக பருத்தக்குரலில் முன் வைப்பார். பேச்சின் உச்சஸ்தாயில் ஓடு உடைப்பது போல மேஜையைக் குத்துவார். அப்போதெல்லாம் எதிரணியில் இருக்கும் எனக்கு உயிர்பயம் ஏற்படும். அதை ஞாபகப்படுத்தியது மொட்டைமாடிக் கூட்டம் குறித்த உங்கள் பதிவு

 10. //இந்த மொட்டை மாடிக் கூட்டத்தின் முடிவில் நான் எடுத்த முடிவு : இதுவரை நான் டூவிலர் காப்பீடு தவிர வேறெதுவும் எடுக்கவில்லை. அடுத்த கூட்டத்துக்குள் தனிநபர் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்.//

  ஹா ஹா செம காமெடி போங்க.

 11. ஞானிக்கு கமலையும் பிடிக்காது இளையராஜாவையும் பிடிக்காது. இவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதே இவருக்கு முழுநேர தொழில். பொதுவாக இவருக்கும் சாருவுக்கும் ஒத்து வராது. ஆனால் இவர்கள் இருவரையும் எதிர்ப்பதில் ஒற்றுமையானவர்கள்

  இவர்களை எதிர்பதின் மூலம் பிரபலம் தேடுகின்றார்கள்

Leave a Comment