மன்னர் மானிய ஒழிப்பு

இந்திரா காந்தி அரசு, மன்னர் மானிய ஒழிப்பில் தீவிரம் காட்டியது. அப்போது அதிகபட்ச ஆண்டு மானியமாக வரிவிலக்கோடு ரூ. 26,00,000 பெற்றவர் மைசூர் மகாராஜா ஜெய சாமராஜேந்திர உடையார். குறைந்தபட்சமாக சௌராஷ்டிராவிலிருந்த குட்டி சமஸ்தானமான கட்டோடியாவின் ராஜா ரூ. 192 பெற்றுக் கொண்டிருந்தார். எதற்கு அநாவசியச் செலவு என்று இந்திரா, மன்னர் மானிய ஒழிப்புத் தீர்மானத்தை அந்த செப்டெம்பரில் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். கீழவையில் நிறைவேறியது. ஆனால் மேலவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
‘மானியத்தை மட்டும் ஒழித்தால் போதாது. மன்னர்களின் பின் ஒட்டிக்கொண்டிருக்கும் வெற்றுப்பட்டங்களையும் ஒழிக்கவேண்டும்.’ இந்திரா, அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முடிவுசெய்தார். ஹைதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரி, இந்திராவின் விருப்பத்துக்கேற்ப அரசாணையில் கையொப்பமிட்டார். மன்னர்கள் தரப்பில் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். தீர்ப்பு மன்னர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ‘இந்தச் சட்டம் செல்லாது.’
இந்திராவின் அடுத்த காய் நகர்த்தலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார் (1971). பங்களாதேஷ் போரில் கிடைத்த வெற்றியினால் இந்திராவுக்கு அந்தத் தேர்தலில் பூரண ஜெயம். மீண்டும் பிரதமரானார். இந்திய அரசியலமைப்பின் இருபத்தாறாவது சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்தார் இந்திரா. அது மன்னர் மானிய ஒழிப்பு. தீர்மானம் இரு அவைகளிலும் நிறைவேறியது. 1971, டிசம்பரில் அது சட்டமாகியது. அவர்களின் பட்டங்களும் பறிக்கப்பட்டன. ‘நாங்கள் மன்னர்களில் ஆடம்பரத்தைப் பறித்துவிட்டோம். ஆனால் அவர்கள் மனிதர்களாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்’ – இந்திரா சொன்னார். ‘சுதந்தரத்தின்போது இந்தியாவைக் கட்டமைக்கும் சக சிற்பிகள் என்று சொன்னீர்கள். இப்போது ஏதுமில்லாதவர்களாக்கி விட்டீர்கள்’ – பரோடா மகாராஜா பஃதேசிங் புலம்பினார். ‘எங்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி விட்டீர்கள்’ – கதறினார் ஜோத்பூர் மகாராஜா கஜ்சிங்.
வருடம் 192 ரூபாய் மானியமாகப் பெற்றுவந்த கட்டோடியா ராஜா, அதையும் இழந்தபின் சோற்றுக்கு என்ன செய்தார்? ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்திருந்தார். ராஜா, தனது ஓட்டை சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்லும்போது யாரும் அவருக்கு வணக்கம் வைக்கவில்லை.

 

Leave a Comment