கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி?

பிரபல வாரமிருமுறை பரபரப்பு பத்திரிகையின் ஆசிரியர் அறை. கொஞ்சம் சூடாகவே இருக்கிறார் ஆசிரியர். ‘சீனியர் புறா’, ‘சுவாமி சுனாமியானந்தா’ என்ற புனைப் பெயரில் எழுதும் இரு உதவி ஆசிரியர்கள் அவர் முன் அமைதியாக பவ்யமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் : போன நாலு இஸ்யூல நம்ம சர்க்குலேஷன் பத்து சதவிகிதம் குறைஞ்சிருக்கு. நம்ம போட்டி பத்திரிக்கைக்கு ஏழு சதவிகிதம் கூடியிருக்கு. இப்படியே போனா ஊத்திக்கும். எல்லாரும் வேற எங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தூண்டில் போட வேண்டியதுதான். நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோன்னு எனக்குத் தெரியாது. பத்திக்குற மாதிரி ஒரு மேட்டரை கெளப்பி விடுறீங்க. அந்த மேட்டரை வைச்சே இன்னும் ஏழெட்டு இஸ்யூவோட கவர் ஸ்டோரியை காரசாரமா பண்ணிடனும். விட்ட சர்க்குலேசனை கிச்சுன்னு ஏத்தணும். எந்த அரசியல்வாதி வாயைப் புடுங்குறீங்களோ, இல்ல எந்த நடிகையை சர்ச்சையில மாட்டி விடுவீங்களோ, எந்த கிளுகிளு சாமியாரை உருவாக்குவீங்களோன்னு எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல என் டேபிள்ல சூட்டைக் கெளப்புற கவர் ஸ்டோரி இருக்கணும். நீங்க போகலாம்.

கொஞ்சம் கிறுகிறுக்கும் தலையுடன் வெளியே வரும் சுனாமியும், புறாவும் பேப்பர் பேனாவுடன் சென்று ஒரு டேபிளில் அமர்கின்றனர். ஐந்து நிமிட மௌனத்துக்குப் பிறகு.

சுனாமி : ஆங்.. ஐடியா. நம்ம அரசியல்வாதி கால்’வாய்’ கண்ணாயிரத்துக்கு போனைப் போடு. அவங்கிட்ட எதையாவது போட்டு வாங்கலாம். அதை வைச்சு ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கிரலாம்.

(புறா போனை டயல் செய்து ரிஸீவரைத் தர)

சுனாமி : அண்ணே வணக்கம்னே.. நாந்தான் சுனாமி பேசறேன். சுகம்தானா?

கால்வாய் : வணக்கம்வே! என்னவே போனமொற நம்ம பத்திரிக்கையில நம்ம கட்சிக்காரப்பயலைப் பத்தி இப்படி கண்டதும் எழுதிப்புட்ட! நானே உனக்கு பூசை போடணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தன்! நீயா வந்து வசமா சிக்கிக்கிட்டவே!

சுனாமி : என்னண்ணே நீங்க. என்னப் போயி சந்தேகப்படுறீங்களேண்ணே! நான் நீங்க வெட்டிப் போட்ட நகத்துல இருக்குற அழுக்கைப் பத்திக் கூட தப்பா எழுத மாட்டேன், உங்களுக்குத் தெரியாதாண்ணே! அது ஒரு புது ரிப்போர்ட்டர் பய செஞ்ச வேலைண்ணே! போன வாரம் நான் லீவுண்ணே! அதான் என்னை மீறி இப்படி ஆயிடுச்சுண்ணே! பாத்தீங்களாண்ணே, எம்புட்டு விசுவாசமுள்ள என்னைப் போயி..

கால்வாய் : அதானப் பாத்தேன். சரி விடுவே! இப்ப என்னவே விசேஷம்?

சுனாமி : அதை நீங்கதாண்ணே சொல்லணும். நேத்து மொளச்ச பயலுக திமிரா எகத்தாளமா ஏதாவது ஏடாகூட அறிக்கை விட்டுக்கிட்டு தலைப்புச் செய்தி ஆக்கிட்டு இருக்காணுங்க! உங்க பவரை நீங்க காட்ட வேணாமாண்ணே!

கால்வாய் : இப்ப என்ன பண்ணனுங்கற?

சுனாமி : புதுசா அந்த நடிகரு ரமணராஜ் கட்சி தொடங்கியிருக்காரே அவரு உங்ககூட கூட்டணி வைக்க தொங்கிக்கிட்டு இருக்கறதா பேச்சு அடிபடுதே, உண்மையாண்ணே?

கால்வாய் : சும்மாக் கெடவே! அவன் நம்ம சாதிக்காரப் பய. அரசியல்ல பழம் தின்னு கொட்ட போட்டவன் நான். ஒரு மருவாதைக்கு தேடிவருவான்னு நெனைச்சேன். இதுவரைக்கும் வரல. எலெக்ஷன் வரும்ல அப்ப பாத்துக்கலாம்.

சுனாமி : சரிங்கண்ணே. நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க. தொந்தரவுக்கு மன்னிச்சுக்கோங்கண்ணே! வைச்சிடுறேன். (போனை கட் செய்து விட்டு, புறாவிடம்) செம மேட்டர் கிடைச்சுடுச்சு. டைட்டில் இதுதான். ‘தலைகணத்தில் தடுமாறுகிறாரா ரமணராஜ்?!’ – தலைவர்கள் அதிருப்தி. எப்படி?

புறா : அப்படிப்போடு. இதை அப்படியே விடக்கூடாது. இன்னும் கெளறி விடலாம். கொஞ்சம் இருங்க. (ஒரு எண்ணை டயல் செய்கிறார்.) வணக்கம். நான் புறா பேசுறேன். புரட்சி லீடர் ரமணராஜ் இருக்காருங்களா.

எதிர்முனை : வணக்கம். வணக்கம். நான் லீடரோட செகரட்டரி லிங்கம்தான் பேசறேன். லீடர் ஹைதராபாத் ஷூட்டிங் போயிருக்காரு. என்ன விஷயம்ணு சொல்லுங்க. எதுவும் முக்கியம்னா நான் லீடர்கிட்ட கேட்டுச் சொல்லுறேன்.

புறா : என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? அந்த சாதிக் கட்சித் தலைவர் ‘நம்ம லீடருக்கு பணிவே கெடையாது. அவுத்த வுட்ட ஜல்லிக்கட்டு காளை மாதிரி திமிறிக்கிட்டு அலையறாரு. மக்கள் மூக்கணாங்கயிறு போட்டுருவாங்க’ன்னு இஷ்டத்துக்கு அறிக்கை விட்டிருக்காரு. நீங்க என்னடான்னா ஒண்ணும் நடக்காத மாதிரி கேக்கறீங்க?

எதிர்முனை : அப்படியா! எதுல சொன்னாரு. எனக்கு ஏதும் நியூஸ் வரலியே?

புறா : அவரோட சேனல்லதான் சொன்னாருங்கிறேன். அதுபோக இப்பத்தான் அவரை பேட்டி எடுத்தோம். அதுலயும் நம்ம லீடரை இப்படியெல்லாம் பேசிப்புட்டாரு. மனசு கேக்கல. அதான் உங்க காதுல விசயத்தைப் போட்டுட்டு, அப்படியே லீடர்கிட்ட கருத்து வாங்கிடலாம்னுதான் போனைப் போட்டேன்.

எதிர்முனை : லீடர் ஷூட்டிங் முடிச்சுட்டு, தன் பையன் பொறந்த நாளை சித்தூர் பக்கத்துல உள்ள ஒரு கோயிலுக்கு போய் கொண்டாடிட்டு நாலு நாள் கழிச்சுத்தான் சென்னைக்கு வர்றாரு. அப்ப லீடர் கண்டிப்பா நேரம் ஒதுக்கிப் பேசுவாரு.

புறா : ரொம்ப நல்லது சார். (போனை கட் பண்ணி விட்டு) மேட்டரை டெவலப் பண்ணிக்கோங்க.. ‘ஆந்திரா பக்க்கத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ரமணராஜ் ரகசிய யாகம்! நரபலி கொடுத்தது உண்மையா?’ எப்படி.

சுனாமி : சூப்பரப்பு.

புறா : ஆனா மேட்டர்ல பரபரப்பு இருக்கு. ஆனா கிளுகிளுப்பே இல்லையே. என்ன பண்ணலாம்?

சுனாமி : எதாவது நடிகையை இழுத்து உட்டுடலாம். பரபரப்பு + கிளுகிளுப்பு. நாமளும் பேஜ் லே-அவுட்டை கவர்ச்சியா பண்ணலாம்.

புறா :  இந்த இஸ்யூக்கு இது தாங்கும். அடுத்த இஸ்யூக்கு நடிகை கிஷிதாவை கிள்ளி உட்டுருவோம்.

சுனாமி : எப்படி?

புறா : ‘டேட்டிங்’ பத்தி ஏதாவது கேப்போம். அது தமிழ் தெரியாம ஏதாவது உளறி வைக்கும். ‘டேட்டிங் போவது பெண்களின் கடமை’ன்னு நியூஸ் ஆக்கிருவோம். அப்புறம் கொடும்பாவி எரிப்பாங்க. கேஸ் போடுவாங்க. ஆர்ப்பாட்டம் நடத்துவாங்க. ‘டேட்டிங்’குக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனுங்க கூட தெனாவெட்டா அறிக்கை உடுவாங்க.

சுனாமி : இப்படி ஒரு பிரச்னையைக் கெளப்பி விட்டா கண்டிப்பா கால்வாய் ‘கலாசாராம் காராச்சேவு’ன்னு கொதிச்சு எழுவாரு. ஆனா கிஷிதா நம்ம ரமணராஜோட தொடர்ந்து மூணு படம் சோடி கட்டிட்டு வர்ற நடிகை. அதனால ரமணராஜ் வேற வழியில்லாம படத்துல இருந்து கிஷிதாவைத் தூக்கிக் கெடாச வேண்டியது வரும்.

புறா : இதை அப்படியே விடலாமா, எவனாவது இந்த கேப்ல நெட்ல கிஷிதா மூஞ்சை மார்ஃப்பிங் பண்ணி ஏதாவது கிளுகிளு போட்டாவை விடுவான். உடனே கிஷிதாவுக்கும் சர்வதேச கொலைகாரன் அமாம் உபருல்லாக்கும் தொடர்பிருக்குன்னு தெரிஞ்சதாலதான் ரமணராஜ் தன்னோட படத்துல இருந்து தூக்குனாருன்னு ஒரு கவர் ஸ்டோரி பண்ணிடலாம்.

சுனாமி : இதுல ஏதாவது சாமியாரை இழுத்து விட்டுட்டோம்னா இன்னும் கனலா இருக்கும்.

புறா : அவ்ளோதான. ‘முழியாங்கண்ணன்பட்டி மயிர் சாமியார்’னு ஒரு கேரக்டரை உள்ள நுழைச்சுருவோம். இந்த சாமியார்கிட்டதான் அமாவாசை அன்னிக்கு நைட்டோட நைட்டா போயி ரமணராஜ் மயிர் ஜோசியம் பாத்தாரு. அவரோட மயிர் அமைப்புப்படி அவருக்கு முன்னந்தலைல மூணு சென்டி மீட்டருக்கு சொட்டை விழுந்துருக்கறதால அவரு கட்சியோட பேரை மாத்தணுமாம். ‘க’ எழுத்துல பேரு ஆரம்பிக்குற அரசியல்வாதிங்க கூட கூட்டணி வெச்சுக்கக்கூடாதாம். அதுக்கு பரிகாரமா அடுத்த அமாவாசைக்கு 108 வழுக்கைத் தலையர்களுக்கு விக் தானம் பண்ணப் போறாராம். அதுக்காக 108 சொட்டை மண்டைங்கள கட்சிக்காரங்க மும்முரமா தேடிக்கிட்டு இருக்காங்களாம். எப்படி நம்ம நியூஸ்?

சுனாமி : அந்த முடி சாமியார் மேல நாலு கேஸ் இருந்தாத்தான் மேட்டர் வெயிட்டா இருக்கும். எப்படியாவது தோண்டித் துருவி அந்த சாமியார் மேல கேஸைக் கொண்டு வந்துரலாம். அதுவும் சுண்டக் கஞ்சி கடத்தல் கேஸ் ஏதாவது இருந்தா கலக்கலா இருக்கும்.

புறா : சாமியார் கூட ‘சுண்டக் கஞ்சி கடத்தல்’ல தொடர்பு வைச்சிருந்த அழகின்னு எவளாவது அடுத்து சிக்காமலா இருப்பா. ‘சுண்டக் கஞ்சி கடத்தல் தேவதை’யோடு தொடர்புடைய அரசியல்வாதிகள்னு எல்லாக் கட்சியில இருந்தும் வந்து தானா பட்சிங்க சிக்குவாங்க.

புறா : இப்படியே போனா அடுத்த சட்டசபைத் தேர்தல் வர்ற வரைக்கும் கவர் ஸ்டோரிக்கு தட்டுப்பாடே வராது. கலக்கிப்புடலாம்.

சுனாமி : சரி சரி. நான் ஸ்டோரியை எழுதுறேன். நீ போய் முன் அட்டையையும், போஸ்டரையும் லே அவுட் பண்ண ஆரம்பி. ஏதாவது போட்டோ தேறுதான்னு பார்ப்போம். எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி கெளப்பி விட வேண்டியதுதான்.

புறா : சூப்பரு. இந்த இஸ்யூ சர்குலேசன் ஓஹோதான்.  நீ எடிட்டர்கிட்ட ஓ.கே. வாங்கிடு. நான் லே-அவுட்டுக்குப் போறேன்.

(லொள்ளு தர்பார் – கிழக்கு வெளியீடு)

Leave a Comment