சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்

ஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை

* தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

* வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. தற்போது வரை திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

* கிழக்கு F7, F20 என்ற இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. உடையும் இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனி, பஞ்சம் பட்டினி படுகொலை கம்யூனிஸம், நல்ல கட்டமைப்புடன் கூடிய பொன்னியின் செல்வன், வலைவிரிக்கும் இந்துத்துவம், எக்ஸைல், ஓப்பன் சோர்ஸ், அறியப்படாத அண்ணா ஹசாரே என வேறு விதமான புத்தகங்களுடன் கிழக்கு களமிறங்கியுள்ளது. இவற்றில் சில புத்தகங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்கு வந்துவிடும்.

* சட்டென என்னைக் கவர்ந்தது – சில்ட்ரன் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை ஆங்கிலக் கதைப் புத்தகங்கள். ரூ 50 லிருந்து ரூ. 150க்குள் நல்ல காகிதம், அழகான பைண்டிங்குடன் கதைப் புத்தகங்கள் பல தலைப்புகளில் கிடைக்கின்றன.

* விகடனில் இந்தமுறை பல புதிய தலைப்புகள் வெளிவந்துள்ளன. கலைஞரின் அரிய புகைப்படங்கள், ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனித்தனி புத்தகங்கள் வரவிருக்கின்றன. விலை ரூ. 150 இருக்கலாம். ஆர்ட் பேப்பரா என்று தெரியவில்லை. மருத்துவ நூல்கள் அதிகம் விற்பனையாவதாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, விகடனில் இந்த வருட டாப் புத்தகமாக கல்கியும் மணியமும் மீண்டும் கைகோர்த்துள்ள கெட்டி அட்டை பொன்னியின் செல்வன்தான் இருக்கப் போகிறது.

* ஸ்டால் எண் F10ல் ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் அமைந்துள்ளது. சென்ற வருட கண்காட்சியிலேயே செகண்ட் ஹேண்ட் ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் கலக்கியவர்கள் இவர்கள். ஐநூற்றுச் சொச்ச விலையில் காபி டேபிள் புத்தகங்கள் சிலவும், குண்டு என்சைக்ளோபீடியாக்கள் சிலவும் தற்போது விற்பனைக்கு இருக்கின்றன. முந்துங்கள்.

* மதி நிலையத்தில் குற்றியலுலகமாக பாரா தன் சைஸுக்குப் பொருந்தாத புத்தகத்துடன் ப்ளக்ஸில் சிரித்தார். கைக்கடக்கமான ட்விட்டர் தொகுப்பு. அதை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதானவர் அதே புத்தகத்துடன் என்னருகில் வந்து ஒரு சந்தேகம் கேட்டார். ‘இதுல டைனோன்னு இருக்குதே. அப்படின்னா?’ – ‘டைனோன்னா ஒருத்தரோட பெயர்.’ – ‘ஓ… நான் டைனோஸரோன்னு குழம்பிட்டேன்’ – ‘சேச்சே, டைனோ ரொம்ப சாது. இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறவர்தான் ட்விட்டர்ல டைனோஸர்’ என்றேன் சிரித்தபடி. அவருக்கு என்ன புரிந்ததோ, என்னிடமிருந்து நகர்ந்து விட்டார்.

* இந்த முறை கேண்டீன் வழக்கத்தை விட பளபளப்பாக, தோட்டாதரணி செட்டுடன் இருக்கும்போதே மனத்தில் ஏதோ உறுத்தியது. நண்பர்கள் மருதனும் முத்துக்குமாரும் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன். மெனு போர்டைப் பார்த்து மினி சமோசா என்றேன். 50 ரூபாய் கேட்டார்கள். ஒரு பிளேட் போதும் என்றேன். அதுதான் 50 ரூபாய் என்றார்கள். கொடுத்தேன். அதற்கான இடத்துக்குத் தேடிப் போய் கூப்பனை நீட்டினேன். பத்து மினி சமோசாவது தருவார்கள் என்பது என் எதிர்பார்ப்பு. எள்ளுருண்டை சைசில் நான்கே நான்கு மைக்ரோ சமோசாக்கள். கொஞ்சூண்டு சாஸ். அதுதான் ஐம்பது ரூபாயாம். சமோசாவுக்குள் பெருங்காயம் பேரரசு நடத்திக் கொண்டிருந்தது. சகிக்கவில்லை. காபி இருபது ரூபாயாம். தோசை எல்லாம் ரூபாய் ஐம்பதுக்கும் மேல்… ஏதோ சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸாம்… ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர என பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. என் பர்ஸுக்குள்ளிருந்து ‘அரோகரா அரோகரா’வென சத்தம் கேட்டது. தண்ணீர் மட்டும் இலவசமாகத் தருகிறார்கள் (இன்றைக்குத் தந்தார்கள்). கொடுத்த ஐம்பது ரூபாய்க்காக தினமும் அங்கே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

Leave a Comment