நேரடி அனுபவப் புனைவு!

நான் அந்தப் பேருந்தில் ஏறும்போது, அதிலிருந்து இறங்குவதற்கு முன் அப்படியொரு விஷயம் நடக்கும் என்று அறிந்திருக்கவில்லை. (Disclaimer: மேற்படி வரி சத்தியமாக ஆரம்ப பில்ட்-அப் மட்டுமே. தவிர பெரும்பாலானோர் உபயோகிக்கும் க்ளிஷே ஸ்டைலை எனக்கும் உபயோகித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால்…) பிராட்வே செல்லும் இலெவன் ஹெச் பேருந்து. அன்று குடியரசுத் தலைவி டெல்லியில் கொடியேற்றியதால் சென்னையில் சாலைகள் காலியாக இருந்தன. கண்ணில்பட்ட தேசியக் கொடிகளெல்லாம் நேராக இருக்கிறதா என்று மனம் அனிச்சையாகச் சோதனை செய்ததை ‘தேச பக்தி’ என்று Tag செய்யலாம்.

விலைவாசி, தமிழினத்தின் தாற்காலிக ஐகான்-ஆகக் கருதப்படும் சீமானின் கோபம் அளவுக்கு உயர்ந்துகொண்டே சென்றாலும், அதன் பிரதிபலிப்பு திநகர், பாண்டிபஜாரில் மட்டும் கிஞ்சித்தும் பிரதிபலிக்காதது சரித்திரப் பிழை. ‘இது ஆலையம்மன் கோயில், இது வானவில்…’ என பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த மனைவிக்கு, ஒவ்வொரு இடத்தையும்  சொல்லிக்கொண்டே வந்தேன். அவளுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு கணிதத்தில் கால்குலஸ் எனக்கு எப்போதுமே புரிந்ததில்லை.

புதிய சட்டப்பேரவை வளாகத்தைக் கடந்தபோது, வருங்காலத்தின் எதிர்காலத்தை நினைத்து மனத்தில் ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப்பேழை அழுத்தியது. சேப்பாக்கத்தைக் கடந்தபோது, ஐபிஎல்லில் புறக்கணிக்கப்பட்ட என் இனிய கங்குலியின் முகம், எதிரில் தெரிந்த ப்ளக்ஸில் தொல். திருமாவின் முகத்தில் ரீப்ளேஸ் ஆனது.

பாரீஸ். எனது அகம், புறம், அந்தப்புரத்தில்* வரும் சரித்திர கேரக்டரான பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங், உல்லாசம் தேடி அடிக்கடி செல்லும் நகரம். நான் அங்கே இல்லை, இருப்பது சென்னை பாரீஸில் என்று உணர்ந்தபோது, பான்பராக்கைத் துப்பியபடியே ஒருவர் பல்ஸரில் கடந்துசென்றார். (*இதனை footnote என்று கருதி படித்துக் கொள்ளவும். அகம் புறம் அந்தப்புரம் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை மதிப்பளவில் முதலிடம் பிடித்தது என்பதை ஹரன் பிரசன்னா மூலம் அறிந்துகொண்டேன். இந்தத் தகவல் புனைவா இல்லையா என்பதையும் அவரிடமே கேட்டுக் கொள்ளவும். எனது புதிய புத்தகமான (ஏழாம்) கிளியோபாட்ரா, எண்ணிக்கை அளவில் ஏழாம் இடம் பிடித்தது. ஒருவேளை முதலாம் கிளியோபாட்ரா பற்றி எழுதியிருந்தால்…..  ம்ஹூம், யாருமே வாங்கியிருக்க மாட்டார்கள்.)

பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து மணலி செல்ல வேண்டும். திருவொற்றியூருக்குத்தான் பேருந்து இருந்தது. ஏறி அமர்ந்தோம். ராயபுரத்தின் ஊடாக பேருந்து நகர்ந்தது. நான் ராயபுரத்தை முதன் முதலாகப் பார்த்தேன். கண்ணன் வரும் வேளை.. அந்தி மாலை.. என்று பாடியபடியே எங்கிருந்தோ ஓடிவந்த நடிகை பாவனா, என் கண் முன் ஆட ஆரம்பித்தார். ‘தீபாவளி’ முடிந்து, தலைப் பொங்கலும் முடிந்துவிட்டது என்று கடிந்துகொண்ட என் மனைவி, பாவனாவை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டார்.

‘அய்யோ, 2011ன் வருங்கால முதல்வர் இவரதானோ?’ என்று மனம் அநாவசியமாக, அர்த்தமில்லாமல், ஆதாரமில்லாமல் அச்சப்படுமளவுக்கு, ஜி.கே. வாசன்  பல இடங்களில் சிரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பாக்கு, புகையிலைப் பொருள்களின் விலை ஏற்றப்படுவது நினைவுக்கு வந்தது.

திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இறங்கும்போது, ஜனவரி மாதம்தான் நடக்கிறது என்ற நினைப்புகூட இல்லாமல் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து மணலிக்கு பேருந்து எதுவும் இல்லை. ‘மணலி நியு டவுன் போகணும். வர்றீங்களா?’ என ஷேர் ஆட்டோவையோ,  ஆட்டோவையோ விசாரித்தால், ஏதோ கலைஞரின் இளைஞன் படத்துக்கு வலுக்கட்டாயமாக திமுகவினர் அழைப்பதுபோல அவர்கள் மிரண்டு ஓடினார்கள். என்ன காரணம் என்று எனக்குப் புரியவில்லை. ‘மீஞ்சூரு பஸ் வந்தா ஏறிக்கோங்க’ என்றார் ஒருவர். காத்திருப்பில் கடுப்பு வளர்ந்தது. மச்சான் உடையோன் ஆட்டோவுக்கு அஞ்சான் என்ற பழமொழியை நான் உருவாக்குவதற்காகவே, என் மச்சான் எங்கிருந்தோ ஒரு டாடா மேஜிக் ஆட்டோவை ‘வாடகை’ பேசி அழைத்து வந்தான். சந்தோஷமாக ஏறினோம்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மணலி நோக்கிச் செல்லும் எண்ணூர் துறைமுக நெடுஞ்(?)சாலையில் சிக்கிக் கொண்டோம். உலகம் கண்டெயினர்களால் ஆனது என்று தோற்ற மயக்கம் தெளிவாகத் தோன்றமளவுக்கு எங்கெங்கு காணினும் நீள லாரிகள். திருவொற்றியூர் ஆட்டோக்காரர்கள் அடைந்த பீதிக்கான ரீஸன் இப்போது புரிந்தது. அந்தச் சாலையை கடந்துசெல்ல ஒன்றரை மணி நேரம் பிடித்தது. இது அங்கே தினமும் நடக்கும் பிரச்னை. பல வருடங்களாக அப்பகுதிவாசிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில்தான் அதனை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு ஜி.கே. வாசன் அடிக்கல் நாட்டினாராம். அதற்கு இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ? அதற்குள் மதுரையாருக்கு சதாபிஷேகம் நடந்துவிடும்போல.

ஒருவழியாக மணலி சென்று அங்கே உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு, மீண்டும் திருவொற்றியூர் திரும்பினோம். மாலை. ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்தோம். எங்கு திரும்பினாலும் லிங்கம். சந்நிதிக்கு சந்நிதி சிவலிங்கம். பிள்ளையார்கூட தும்பிக்கை வைத்த லிங்கம் போலவே இருந்ததாக ஒரு தோற்ற மயக்கம். சுப்ரமணிய சுவாமி சந்நிதிக்குச் சென்றேன். அவர் அப்போதும் டீ பார்ட்டிக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். திரும்பிவிட்டேன்.

கோயில் வெளி பிரகாரத்தில் ஜகஜகவென ஒளிரும் தங்கத் தேரை யாரோ ஸ்பான்சர் செய்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். தேரில் வடிவுடை அம்மன். மெய்சிலிர்க்க வைக்கும் அழகு. ‘கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?’
என உள்ளுக்குள் டி.எம்.எஸ்., சீர்காழியின் குரல்கள் ஒலித்தன. அந்த இடத்துக்குச் சம்பந்தமில்லாத பாடல் என்பதால் spam செய்துவிட்டேன்.

வெளியே வியாழக்கிழமைகளில் படு பிஸியாக இருக்கும் தட்சிணாமூர்த்திக்கென தனி கோயில் அமைத்திருந்தார்கள். கலைத்துறையினர் இங்கே வந்துவேண்டினால் அமோக வெற்றிகளைப் பெறலாம் என்று யாரோ ஒரு பழங்கால முனிவர், சமீபத்தில் ஃபார்வேர்ட் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தாராம். கோயிலினுள் வளர்ந்து வரும் உயரம் குறைந்த இளம் நடிகர் ஒருவரைக் கண்டேன். ஆளுயர ‘வடைமாலை’யுடன் வந்திருந்தார். கோயில் மாறி வந்துவிட்டாரோ என அர்ச்சகர் அவரைக் கலவரத்துடன் நோக்கிக் கொண்டிருந்தார்.

பேருந்து நிறுத்தத்துக்கு வந்தோம். வீடு திரும்ப பேருந்து ஏறினோம். பிராட்வே செல்லும் பேருந்தில் ஏறினோம். ராயபுரம் கடல்பகுதி வழியாக கடந்துவந்த வழியெல்லாம் #tnfisherman ட்வீட்டுகள் மின்னிக் கொண்டிருந்தன. அன்று முழுவதும் ட்விட்டருக்குள் செல்லாத நான், ட்ரெண்டை உணர்ந்தேன். மெரீனாவைக் கடக்கும் வேளையில் ‘பீச்சுக்கு போகலாமா?’ என்று கேட்டார் மனைவி. ‘இலங்கை ஆர்மிக்காரன் சைனா துப்பாக்கியோட கடலோரமா அலையறனாம். கடற்கரையில யாரைப் பார்த்தாலும் சுடுறானாம்’ என்றேன். மன்மோகன் ஜிங் போலவே என் மனைவியும் பதில் பேசவில்லை.

6 Comments

 1. santhosh says:

  “நான் அந்தப் பேருந்தில் ஏறும்போது என் மனைவியும் பதில் பேசவில்லை.”
  அவ்வளவு வேகமாக ப‌டிக்கிற அளவுக்கு காந்தி நடையாக உள்ளது உங்கள் எழுத்து!
  super mugil!

 2. Shan says:

  *************உலகம் கண்டெயினர்களால் ஆனது என்று தோற்ற மயக்கம் தெளிவாகத் தோன்றமளவுக்கு எங்கெங்கு காணினும் நீள லாரிகள் ***************** சூப்பர் எங்க தொகுதி பக்கம் வந்துட்டு போய்டீங்க , மணலி நியு டவுன் வரமாட்டேனு ஆட்டோகார ஜகா வாங்கும்போதே தெரியும் நீங்க இததான் சொல்லுவேங்கனு

 3. ramji_yahoo says:

  மணலி நோக்கிச் செல்லும் எண்ணூர் துறைமுக நெடுஞ்(?)சாலையில் சிக்கிக் கொண்டோம். உலகம் கண்டெயினர்களால் ஆனது என்று தோற்ற மயக்கம் தெளிவாகத் தோன்றமளவுக்கு எங்கெங்கு காணினும் நீள லாரிகள்.

  ராயபுரம் கடல்பகுதி வழியாக கடந்துவந்த வழியெல்லாம் #tnfisherman ட்வீட்டுகள் மின்னிக் கொண்டிருந்தன. அன்று முழுவதும் ட்விட்டருக்குள் செல்லாத நான்,

 4. PARTHIBAN says:

  enga area ulla varathey…. Royapuram Rockers

  NIce Mugil its really superb i travelled 11H on the time… Keep it up

 5. NAYAGAM says:

  thampi udaiyan padaiku anchan

 6. uma says:

  எளிமையான விஷயம் கூட சொல்லும் அழகில் பளிச் என தெரியும்…சொல்லும் அழகு உங்களிடம் இருக்கின்றது

Leave a Reply