தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

மே 13 புதன்கிழமை
உங்கள் முத்திரை டீவி வழங்கும்
தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

காலை 6 மணிக்கு
சிங்கள இசை
திடீர்த் தமிழீழ ஆதரவாளர்கள் வழங்கும் ‘கர்நாடக’ இசை விருந்து

காலை 7 மணிக்கு
வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்
மாண்புமிகு தமிழக புதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.

கிளிப்பிங்ஸ்:

‘தமிழர்களே.. டாக்டர் கலைஞர் அவர்களின் மகனாக உட்கார்ந்து கேட்கி றேன். உரிமையோடு கேட்கிறேன். உணர்வோடு கேட்கிறேன். உங்களுக்காக கேட்கிறேன். கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கிறேன். எனது தந்தை அப்பல்லோவிலே முடியாமல் படுத்திருந்தபோது வந்து எட்டிப் பார்க்கத் திராணியில்லாத ராமதாஸ், உண்மையிலேயே டாக்டர்தானா?’

காலை 9 மணிக்கு
காலணியாதிக்கம்

ப. சிதம்பரம் சிறுவயதில் இருந்து தான் சேகரித்து வைத்திருக்கும் காலணிகள் குறித்து கலகலப்பாக தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வித்தியாசமான நிகழ்ச்சி.

காலை 9.30க்கு
உண்ணாவிரத சமையல்

உண்ணாவிரத நாள்களில் என்னென்ன சமைக்கலாம் என்று விசேஷ சமையல் குறிப்புகளை வாரி வழங்குகிறார்கள் திருமதி. தயாளு, திருமதி. ராஜாத்தி

காலை 10 மணிக்கு
தாவுடா ராமா, தாவு!

தேர்தலுக்குத் தேர்தல் வெ.மா.சூ.சொ. இல்லாமல் கூட்டணி விட்டுக் கூட்டணி தாவுவது எப்படி என்று தங்கள் பொது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொடுக்கிறார்கள் அரசியல் ‘கரை’கண்ட பிரபலங்கள்.

காலை 10.30 மணிக்கு
சிறப்பு பட்டிமன்றம்.
கள்ள ஓட்டில் கைதேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியினரே! எதிர்க்கட்சியினரே!

பல களம் கண்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பூத் ஏஜெண்டுகள் தங்கள் திறமையை நிரூபிக்க வாதங்களால் போராடும் அடிதடி ரணகள பட்டிமன்றம்.

காலை 11.30 மணிக்கு
தமிழக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் முதல் முறையாக,
அம்பலத்துக்கு வந்து சில மாதங்களே ஆன
ஜெ. ஜெயலலிதா, பொன்னையன், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா நடித்த
அதிரடி சூப்பர் ஹிட் தமிழீழத் திரைப்படம்

சின்னத்தில் முத்தமிட்டால்

மாலை 4.00 மணிக்கு
நான் பிரதமர் ஆனால்..

வைகோ, விஜயகாந்த், சரத்குமார், திருமாவளவன் ஆகியோர் தாங்கள் கண்ட பகல் கனவு பற்றி சுவைபடக் கூறுகிறார்கள்.

மாலை 5.00 மணிக்கு
கன்னி ஓட்டு!

வாழ்க்கையில் முதன்முறையாக வாக்களிக்கப் போகும் நடிகை நமீதா, பூத்துக்குச் சென்று வாக்களிக்கும் நிகழ்ச்சி – நேரடி ஒளிபரப்பு!

மாலை 5.30 மணிக்கு
கடுங்காப்பி வித் சோனியா!

தங்கபாலு, இளங்கோவன், ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி நால்வரும் இணைந்து, ஒருத்தரை ஒருத்தர் கனிவாகப் போட்டுத் தள்ளும் பாரம்பரிய நிகழ்ச்சி.

மாலை 6.30 மணிக்கு
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக
தெருவுக்கு வந்து சிலநாள்களே ஆன
படுதோல்வி திரைப்படம்
தேர்தலில் கட்டிய வைப்புத் தொகைக்காக, நாக்குதள்ள போராடும் மூன்று இளைஞர்களின் கண்ணீர்க் கதை
கார்த்திக், டி. ராஜேந்தர், மன்சூர் அலிகான் நடித்த

டெபாசிட்

கலகல டிராஜடி திரைப்படம்

இரவு 10.00 மணிக்கு
மௌன அஞ்சலி!

நடந்துமுடிந்த ஜனநாயகப் படுகொலைக்கான சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி!

தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்கும் ஒரே விளம்பரதாரர்
எளிமை நாயகன் ஜே.கே. ரித்தீஸ்

வாக்காளர்களே!

வரும் தேர்தலைக் கொண்டாடுவோம்!
அடுத்த தேர்தல்வரை திண்டாடுவோம்!

பக்கடாவும் மனோன்மணியும்!

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காக வந்துள்ள ஒரே படம் என்று அஞ்சலியை பலகாலமாக வேறுவழியின்றிக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அஞ்சலி குழந்தைகளுக்கான படமா என்ன?

இனி நாமும் துண்டை, கௌரவமாகத் தோளில் போட்டுக் கொள்ளலாம். பசங்க வந்துவிட்டது. குழந்தைகளுக்கான முதல் தமிழ் சினிமா வந்தேவிட்டது. இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரைப் பார்த்து கேட்கத் தோன்றும் கேள்வி, இத்தனை நாளா எங்க சார் இருந்தீங்க?

முதல் படத்துக்கு ‘சின்னப்பசங்க’ கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைஞ்ச இயக்குநர் பாண்டிராஜுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்திதான். இந்தக் கதையை பல மசாலா தயாரிப்பாளர்கள் இடதுகையால் நிராகரிச்ச சம்பவங்கள் கண்டிப்பாக நடந்திருக்கலாம். சமீபத்தில் மீண்டும் படம் தயாரிக்க ஆரம்பித்த அந்த நிறுவனமும் நிராகரித்ததாகக் கேள்விப்பட்டேன். இப்போது வருத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

விகடனில் 50 மார்க் போட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. மக்களை தியேட்டருக்கு இழுக்க இந்த மார்க் மிகவும் உபயோகப்படும். இரு தினங்களுக்கு முன்பு நானும் சூரியனில் பசங்க பார்த்தேன், பசங்களோடு. பக்கடா, மனோன்மணி, குட்டிமணி உள்பட சில சிறுவர்களை படத்தின் உதவி இயக்குநர்கள் தியேட்டருக்கு அழைத்து வந்திருந்தார்கள். அனைத்து பகுதிகளிலிருந்தும் ரிசல்ட் பாசிட்டிவாக வருகிறது என்றார் அந்த உதவி இயக்குநர். ஜீவா, அன்பு தவிர மற்ற எல்லோரும் புதுக்கோட்டை பசங்க. படத்தில் வரும் பள்ளி, டைரக்டர் படித்த இடம். எல்லோரையும் கவர்ந்த கதாபாத்திரமான புஜ்ஜியின் சொந்த வீட்டில்தான் அவன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

கோடை விடுமுறை என்பதால் படத்தில் நடித்த பசங்க, தியேட்டர் தியேட்டராக சென்று மக்களின் வரவேற்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம், நம் வீட்டுப் பசங்களோடு தியேட்டருக்குச் சென்று அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம் இது.

படத்தில் குறைகளே இல்லையா? நீளமான காட்சிகள், சேராத பின்னணி இசை, க்ளைமாக்ஸ் என்று குறைகள் இருக்கின்றன. ஆனால் நிறைகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக யதார்த்தம் மீறாத காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்கள்.

அவ்வளவு உயர்தரமான படமா? ரெண்டாம்தர கதைகளோடும், மூன்றாம்தர வசனங்களோடும் வரும் கேடுகெட்ட சினிமாக்களே நமக்கு விதிக்கப்பட்டது என்று நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. அந்தக் குப்பைகளோடு ஒப்பிடத் தேவையே இல்லை. பசங்க, பெரியவங்க!

இயக்குநருடன் போனில் பேசும் வாய்ப்பு அமைந்தது. ‘அடுத்த படத்துல நீங்களும் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள்ள சிக்கிக்காதீங்க’ என்றேன். ‘கண்டிப்பாக மாட்டேன்’ என்றார் அழுத்தமாக.

நம்புகிறேன்.

சோனியா எஸ்கேப்பு!

அலைகடலாய் வாமவனே என்று சொல்லி
கலைஞரய்யா கட்டில்போட்டுப் படுத்துக்கொண்டார்
கொலைப்பசிடா பேமானி! கொண்டா அந்த
கொத்துக்கடலை சட்னியுடன் இட்லி என்றார்
வலை தொடங்கி நிலமெல்லாம் வாய்க்கு வந்த
வார்த்தையினால் வைததுபார் தமிழ்நாடிங்கே
தலைவலியாப் போச்சென்று தலைவர் இன்று
தலைவியுடன் தோன்றுவதை கேன்சல் செய்தார்

எலிகாப்டர் ஏறியங்கு வாரேன் என்று
எக்குத்தப்பா சொல்லிவைத்த அன்னையம்மா
கிலி பிடிச்சிப் போனதனால் கிட்டத்தட்ட
கீத்துக்கொட்டா காலியென்று புரிந்துகொண்டார்
சளிபுடிச்சிப் போச்சப்பா சனியன் இந்த
சண்டேவரை ப்ரோக்ராம்கள் டைட்டு என்று
வலியெடுத்த வேகத்தில் சொல்லிவிட்டு
வந்தவழி போனதுபார் க்ரேட் எஸ்கேப்பு.

குறிப்பு : நியூஸைக் கேள்விப்பட்டதும் குரோம்பேட்டை கவிராயர் ஜிடாக்குல தட்டுன கவித! கழுத!

ஐபிஎல் – Indian Parliament League

டெல்லி லோக்சபா Indian Parliament League போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. எந்த அணி முந்துகிறது, எந்த அணி பிந்துகிறது, யார் மண்ணைக் கவ்வப் போகிறார்கள் என்று கணிக்கவே முடியவில்லை. மாநிலம் வாரியாக பரபரப்பாகப் பேசப்படுபவர்கள்…

கடைசியா யாரு ஆகப்போறாங்கோ…..?Thanks Cheerleaders…