அரைவேக்காடு!

பொதிகையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்… 

அதிலும் சமையல் குறிப்பு நிகழ்ச்சி Live-ஆக ஒளிபரப்பு…

குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த பெரியம்மா கேமராவுக்கு பழக்கமில்லாதவர் போல. கேமராவின் திசையைத் தவிர மற்ற திசைகளில் எல்லாம் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். அவ்வப்போது ‘நான் பேசுறது, செய்யறது சரியா?’ என்பது போல எதிரிலிருப்பவர்களிடம் பார்வையால் பேசிக் கொண்டார்.

கைகள் மட்டுமல்ல, பேசப்பேச அவருக்கு குரலும் நடுங்கியது. ஆனால் என்ன, அவர் சொன்ன சமையல் குறிப்புகள் அனைத்துமே புதுமையானவை. விநாயகருக்கு உகந்ததாகக் கருதப்படும் விளாம்பழத்தைக் கொண்டு ஏகப்பட்ட விஷயங்கள் சொன்னார். விளாம்பழ பஞ்சாமிர்தம், விளாம்பழ ரசம், விலாம்பழ துவையல்… இப்படி. பெரியம்மாதான் தடுமாறுகிறார் என்றால், கேமராமேன் அதற்குமேல். பல பழங்கள் கலந்த கூழ்போன்ற பஞ்சாமிர்தத்தில் விளாம்பழம் தனியாகத் தெரியுமளவுக்கு டைட்-குளோஸப்பில் காட்டி படுத்தினார்.

ஒரு கட்டத்தில் பெரியம்மாவுக்கு தொண்டை வற்றி விட்டது. பேச்சு வரவில்லை. அடப்போங்கப்பா என அருகிலிருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக் என தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தச் சமயத்தில் கேமராமேன் தட்டுத்தடுமாறி அருகிலிருந்த பிள்ளையார் சிலையின் தொப்பையை நோக்கி கேமராவைத் திருப்பிக் கொண்டார்.

சில நொடிகள் கழித்து பெரியம்மா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘கம்பு’ குறித்த சமையல் குறிப்புகளைப் பேச ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே தடுமாற்றம். பேச வந்தது மறந்துவிட்டது. ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று வரும் என்று ஆசையாகக் காத்திருந்தேன். விளம்பரங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள்.

நாலைந்து விளம்பரங்களுக்குப் பிறகு மீண்டு வந்த பெரியம்மா, கம்பு குறித்த சமையல் குறிப்புகளை வேக வேகமாக ஒப்பிக்க ஆரம்பித்தார். (இருந்தாலும் அவையெல்லாமே மிக அருமையான குறிப்புகள்.) அதன்பின் பிள்ளையாருக்குப் பிரசாதமாக வேறு என்னவெல்லாம் படைக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஏகப்பட்ட பதார்த்தங்களை தன் வீட்டிலேயே தயாரித்து, வண்ண வண்ண டப்பர்வேர்களில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். Live-விலும் ஏதோ ஒன்று செய்து காட்ட வேண்டுமல்லவா. அதனால் கடைசியாக, தேங்காய்ப்பூ கலந்த அரிசிமாவுக் கொழுக்கட்டை செய்ய ஆரம்பித்தார். மாவை உருண்டையாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து குக்கருக்குள் வேக வைத்தார்.

பெரியம்மா பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை. நிகழ்ச்சியை முடிக்க வேண்டியதுதான். ஆனால் ஏதாவது பேசித்தான் ஆகவேண்டும். ‘கொழுக்கட்ட வேக பத்து நிமிஷம் ஆகும்’ என்றார் கொஞ்சம் டென்ஷனாக. ‘ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்’ என்று எதிர்முனையில் இருந்து சொல்லியிருப்பார்கள் போல.

‘விநாயகரை வழிபட இப்படியெல்லாம் நிறைய செஞ்சு வழிபடணும்னு இல்ல. ரெண்டு பழம், வெல்லம் வைச்சுகூட வழிபடலாம்’ என்றார் அப்பாவியாக. மேற்கொண்டு ஏதேதோ சொல்ல முயற்சி செய்தார்.

‘வணக்கம்’ சொல்லச் சொல்லிவிட்டார்கள் போல. சொல்லி விடைபெற்றார்.

அச்சமயத்தில் கொழுக்கட்டை, அரைவேக்காடாகத்தான் இருந்திருக்கும் – பொதிகை போல.

நீங்க டைரக்டரா?

என்னைச் சந்திக்க வரும் சினிமா நண்பர்களுக்கு எங்கள் அபார்ட்மெண்ட் பூங்கா பிடித்தமான ஓரிடம். ஒருமுறை அங்கே அமர்ந்து பேசும் நண்பர்கள், மறுமுறை வரும்போதும் பூங்காவில் பேசுவதைத்தான் விரும்புவார்கள். நிறைய மரங்கள். சறுக்கு, ஊஞ்சல், சீஸா உள்ளிட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள். நடைபாதை. உட்கார்ந்து பேச சிமெண்ட் பெஞ்சுகள். சாலையை ஒட்டி அமைந்திருந்தாலும் பேசுவதற்கு ஏற்ற அமைதியும் நிழலும் எப்போதும் நிலவும்.

பொதுவாக இயக்குநர்களுடன், உதவி இயக்குநர்களுடன் பூங்காவில் பேசுவது வழக்கம். எனவே அங்கே விளையாடும் குழந்தைகள் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இரு தினங்களுக்கு முன்பு நண்பரும், சினிமா நடிகருமான ஒருவருடன் பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது குழந்தைகள் சைக்கிளில் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டுக் கொண்டார்கள். இன்று ஓர் அவசர வேலையாக பூங்காவைக் கடக்கும்போது அந்தக் குழந்தைகள் கண்கள் நிறைய கேள்விகளுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அந்த உரையாடல்…

‘அங்கிள் அன்னிக்கு நீங்க பார்க்ல யார்கூட பேசிக்கிட்டிருந்தீங்க?’

‘ம்… அவர் ஒரு நடிகர்.’

‘ஓ… நான் அவரை சினிமால பார்த்திருக்கேன்.’

‘அவர் உங்க ஃப்ரெண்டா?’

‘ஆமா.’

‘உங்களுக்கு சினிமால நிறைய ஃப்ரெண்ட்ஸ் உண்டா?’

‘கொஞ்ச பேரு.’

‘சூர்யா உங்க ஃப்ரெண்டா?’

‘ம்ஹூம்.’

‘கார்த்தி?’

‘எனக்கு சிவகுமாரைத்தான் தெரியும்.’

‘வேற யாரு உங்க ஃப்ரெண்ட்?’

சில நண்பர்களின் பெயரைச் சொன்னேன். குழந்தைகள் எதிர்பார்த்த பெயர்கள் இல்லைபோல. அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவினார்கள்.

‘நீங்க சினிமால இருக்கீங்களா?’

‘ஆமா?’

‘டைரக்டரா?’

‘இல்ல.’

‘புரொடியூசரா?’

‘ம்ஹூம்.’

‘இல்ல.’

‘அப்போ என்னதான் பண்றீங்க?’

‘ரைட்டர்.’

‘எல்லாரையும் இண்டர்வியூ பண்ணுவீங்க. கரெக்டா?’

‘இல்ல. இது வேற.’

‘புரியல. அதை விடுங்க. எப்போ சூர்யாவை ஃப்ரெண்டு பிடிப்பீங்க?’

இதற்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. ‘ஃப்ரெண்ட் ஆன உடனே சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

மேலுள்ள வரியோடு இந்தப் பதிவை முடித்தால், முற்றுப்பெறாததுபோல் தெரியும் என்பதால் கூடுதலாக இந்த வரியையும் சேர்த்துக் கொள்கிறேன் முற்றுப்புள்ளி

மாலை மலர் ஸ்பெஷல் எடிஸன்…

ப்ளஸ் டூ ரிசல்ட்… டென்த் ரிசல்ட்…

ஒன்பது மணிக்கே பொட்டிக்கடை வாசல்ல காத்திருப்போம். ஏஜெண்ட் அண்ணாச்சி சைக்கிள்ல வேகமா வந்து, கேரியர்ல இருந்துஅம்பது அறுபது பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு அடுத்த கடைக்கு ஓடுவாரு. மாலை மலர் ஸ்பெஷல் எடிஷன். பொட்டிக்கடைக்காரர் கையில காசைத் திணிச்சிட்டு, பேப்பரை வாங்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பொரட்டுவோம்.

அவ்ளோ நேரம் மனப்பாடமா இருந்த ரெஜிஸ்டர் நம்பரு, அப்பத்தான் மறந்துபோன மாதிரி இருக்கும். ‘தூத்துக்குடில பாருலே… நீ என்ன கோவில்பட்டிய வெச்சுக்கிட்டிருக்க…’ – நண்பன் பதறுவான். கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ‘தூத்துக்குடி’, அப்போது நம் கண்ணில் படாது.

ஒருவழியாக பேப்பரின் சகல பரிமாணங்களையும் ஆராய்ந்த பிறகு, தூத்துக்குடி கண்ணில் படும். ‘ஏலேய்… நானூத்து பத்தொம்பது சீரியலை மட்டும் காணல’ – பதட்டம் மேலும் தொடரும்.

சில நொடிகள் நெஞ்சு அடைப்பதுபோல தோன்றும் உணர்வுக்குப் பிறகு, ‘419’ல் தொடங்கும் சீரியல் எண் அகப்படும். ‘இந்தாருக்கு என் நம்பரு… நான் பாஸூ’ என்று குதூகலிப்பான் ஒரு நண்பன்.

‘எங்கிட்டுலே?’ – பதட்டம் அதிகமாகும்.

‘அந்தா.. கீழ பாருலே…’

419344…. கண்கள் தேடும். முந்நூறில் தேடும்போது, 42, 43க்குப் பிறகு 44 மட்டும் காணாமல் போனதாக ஒரு தோற்ற மயக்கம் சட்டென வந்து காணாமல் போகும். ‘நாப்பத்து நாலு… நானும் பாஸு’ – முகத்தில் சங்கமித்திருந்த பதட்டம், பரவசமாக உருமாறிக் கொண்டிருக்கும் தருணம் அது. இருந்தாலும் அது தூத்துக்குடிதானா, சீரியல் நம்பரை ஒழுங்காகப் பார்த்திருக்கிறோமா என்ற பயம் ஒருமுறை வந்துபோக, மீண்டும் ரிசல்டைச் சரி பார்ப்போம். நம் எண்ணைச் சுற்றி பேனாவால் வட்டமிடுவோம்.

‘நம்பர் நாப்பத்தேழு இல்லேல… நம்ம கிளாஸுல யாருலே அது… சுதர்ஸனா, சுடலையா?’

‘எனக்கு அடுத்து சுடலை, அப்புறம் சுதர்ஸன்… நாப்பத்தேழு சுரேஷ்ல… பாவம்… சைன்ஸ் அன்னிக்கு அவனுக்கு காய்ச்சல் வந்துருச்சுல்ல….’

கடையில் மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வீடுகளுக்குக் கிளம்புவோம். அப்பா, அம்மாக்களின் முகத்திலும் நம் முக பரவசம் பரவும். பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கெல்லாம் மிட்டாய் சப்ளை.

பாஸ் ஆயாச்சு. மார்க் என்ன வரும்? கொஞ்ச நேரத்திலேயே அடுத்தகட்ட டென்ஷன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும். அன்றிரவு தூக்கம் வராது. காலை எழுந்தவுடன், பரபரவெனக் கிளம்பி பள்ளிக்கு ஓடுவோம்.

ஒரு ஹால். ஹாலுக்கு வெளியிலிருந்து ஜன்னல் வழியாக மார்க்குகளைப் பார்க்கலாம். ஜன்னல் எப்போது திறக்கும் என காத்திருக்க வேண்டும். இதில் என்ன கொடுமை என்றால், மாணவர்களின் தலையைவிட ஜன்னல் உயரமானது. அது திறக்கப்பட்டவுடன், ஜன்னல் கம்பியைப் பிடித்து குரங்கு போல ஏறி, நெரிசலில் கீழே விழாமல்தான் மார்க்குகளைத் தேடிப் பிடித்துப் பார்க்க வேண்டும். அது தேர்வு எழுதுவதைவிட கஷ்டமான வேலை. ஒருவேளை இதன் மூலம் ‘வாழ்க்கைப் பாடம்’ எதையாவது உணர்த்துவதற்காக, பள்ளி நிர்வாகம் அந்த ஜன்னலைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்போல.

ஜன்னல் எப்போது திறக்கும்? நேரம் ஆக ஆக காதுக்குள் சம்பந்தமில்லாமல் ‘நிலை மாறும் உலகில்…’ பாடல் எல்லாம் கேட்கும். ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ என்று செந்தில் வந்து தைரியம் கொடுத்துச் செல்வார். ஜன்னல் வெளிப்பக்கமாகத் திறக்கப்பட்ட நொடியில் பலமானவர்கள் தாவி ஜன்னல் கம்பிகளை ஆக்கிரமிப்பார்கள்.

பல நிமிட தள்ளு முள்ளு போராட்டங்களுக்குப் பிறகு, மார்க்கை அறிந்து கொண்ட நிமிடத்தில் குறைந்தபட்சம் சட்டைப் பையாவது கிழிந்திருக்கும். அடுத்தவன் மார்க் என்ன என்ற விசாரிப்புகளில் அன்றைய பொழுது போகும். ஸ்டேட் பர்ஸ்ட் எவனாக இருந்தால் என்ன? ஸ்கூல் பர்ஸ்ட் பற்றியும் கவலையில்லை. கிளாஸ் பர்ஸ்ட் யார், வகுப்பில் என்னென்ன சப்ஜெட்டில் யார் யார் பர்ஸ்ட் என்ற விதமான புள்ளிவிவர ஆராய்ச்சியில் பொழுது கழியும்.

வேறென்ன சொல்ல… ‘அந்தக் காலத்துல நாங்கள்ளாம்…’னு நானும் பேச ஆரம்பிச்சுட்டேன். வயசாயிருச்சு போல!

சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள் (2)

11 ஜனவரி, புதன்கிழமை

* இன்றைக்கு பிளாட்பார வியாபாரிகள் மட்டுமல்ல; புத்தகக் காட்சி வியாபாரிகளுமே மழையைச் சபித்துக் கொண்டிருந்தார்கள். மாலை ஆறு மணிபோல ஆரம்பித்த மழை அடுத்த 45 நிமிடங்களுக்கு தாண்டவமாடியது. கண்காட்சிக் கூரையில் பல இடங்களில் ஒழுக ஆரம்பிக்க, புத்தகங்கள் நனைய ஆரம்பிக்க, வியாபாரிகளெல்லாம் புத்தகங்களைக் காப்பாற்ற அங்குமிங்கும் ஓட… பபாசி அடுத்த முறையாவது ஒழுகாத வண்ணம் கூரைகள் அமைக்கப் பாடம் கற்றுக் கொண்டால் சரி.

* பிளாட்பாரத்தில் இந்தமுறை இதுவரை எனக்கு எந்தப் பொக்கிஷமும் கிட்டவில்லை. இன்னும் ஓரிரு முறை சென்று மேய வேண்டும். காவ்யாவின் பல புத்தகங்கள் ரூ 20க்கும் ரூ 30க்கும் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

* இந்தியாவுக்கு முதல் தேவை என்ன? விவசாயத்தில் வளர்ச்சிதான் என்று எடுத்துச் சொல்வதுபோல கண்காட்சியின் முதல் ஸ்டாலாக ‘நவீன வேளாண்மை’ அமைந்திருப்பது சிறப்பு. அந்த ஸ்டாலுக்குள் சென்று புத்தகங்களைப் புரட்டும்போது, எங்கிட்டாவது குக்கிராமத்துல துண்டு நெலம் வாங்கி, சோளம் கம்புன்னு பயிறு செஞ்சு… அப்படியே கயித்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு காத்து வாங்கிட்டு… கூழு குடிச்சிட்டு…  நடந்தா நல்லாயிருக்கும்!

* நற்றிணை பதிப்பகத்தில் சட்டெனக் கவரும் அழகான அட்டைகளுடன் இந்த முறை பல புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். பிரபஞ்சனின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ’மயிலிறகு குட்டி போட்டது’ புத்தகமும், ‘துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்’ என்ற புத்தகமும் கவனம் கவருகின்றன.

* கோலிவுட்டில் அதிகப் பாடல்களை எழுதும் ரேஸில் சமீப வருடங்களில் முன்னணியில் இருக்கும் நா. முத்துக்குமாரின் புத்தகங்கள், அவரது ‘பட்டாம்பூச்சி’ பதிப்பகத்தில் கிடைக்கின்றன. அவருடைய பழைய கவிதைப் புத்தகங்களும் புதிய அட்டைகளுடன் ஈர்க்கின்றன.

* பொன்னியின் செல்வன் – கல்கி – இளைஞர் பதிப்பு – என்ற அந்த நூலைப் பார்த்ததும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அட்டையில் விஜயும் சூர்யாவும் ராஜா கெட்-அப்பில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லா விழாக்களிலும் பரிசளித்து மகிழ மலிவு விலையில் மகத்தான காவியம் – என்று வேறு அட்டையில் போட்டிருந்தார்கள். (விலை ரூ. 100 என நினைவு.) அதாவது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களைச் சுருக்கி, இளைஞர்கள் சட்டென படித்து முடித்து வகையில் ஒரே பாகமாக வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே. சுப்பிரமணியன் என்பவர். ஓய்வுபெற்ற ஆசிரியராம். இன்றைய தலைமுறை இளைஞர்களிடமும் பொன்னியின் செல்வனைக் கொண்டு செல்ல இந்த முயற்சியாம்! லாப நோக்கின்றி சேவை நோக்கில் செய்யப்பட்டதாம்! அவரை வாழ்த்துவதா, திட்டுவதா?

* இன்றும் வாழும் சோழ மன்னர்கள், இன்றும் வாழும் பல்லவ மன்னர்கள் – என சோழ, பல்லவ வாரிசுகள் குறித்த ஆவணப் படங்கள் ரூ. 50 விலையில் இரண்டு சிடிக்களாக தென்பட்டன.

 

 

 

 

 

 

 

* எல்லா புத்தகக் காட்சியிலும் ஹீரோவாக வலம் வரும் சே குவாரா, இந்த முறை படக்கதை வடிவில் (மொழி பெயர்ப்பு புத்தகம்) நல்ல ஓவியங்களுடன் கிடைக்கிறார். கவனம் கவர்ந்த இன்னொரு படப் புத்தகம் – கார்டூனாயணம். அண்ணா குறித்து வெளிவந்துள்ள கார்ட்டூன்களின் தொகுப்பு. தொகுப்பாளர்களில் ஒருவர் டிராஸ்கி மருது.

* மதி நிலையத்தில் பாராவின் குற்றியலுலகம் முதல் 1000 பிரதிகளைக் கடந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிந்துகொண்டேன். சொக்கன் எழுதிய விண்டோஸ் 7 கையேடு – பலரது கவனத்தையும் ஈர்க்கும் புத்தகமாக அமைந்துள்ளது.

* விகடனில் டாப்பில் இருப்பது பொன்னியின் செல்வன். அடுத்தடுத்த இடங்களை சுகாவின் மூங்கில் மூச்சு, நா. முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில், விகடன் பொக்கிஷம், காலப்பெட்டகம் போன்றவை பிடித்த்துள்ளன. கிழக்கிலும் சுகாவின் தாயார் சந்நிதி வேகமாக விற்று வருகிறது. நல்ல எழுத்தாளர்களின் ஊர் சார்ந்த அனுபவங்களை வாசகர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

* சென்ற முறை கிழக்கில் 80 பிரதிகளுக்கும் மேல் விற்ற அகம் புறம் அந்தப்புரம் (ரூ. 950), இந்தமுறை விற்பனைக்கு இல்லை. ஸ்டாக்கில் இருந்த ஐந்து புத்தகங்களும் ஓரிரு நாள்களிலேயே விற்றுவிட்டன.

* தென்னிந்தியப் பதிப்பகத்தில் – காமிக்ஸ் பிரியர்களின் ஆதரவால் எப்போதும் கூட்டம்தான். கிங் விஸ்வா மொத்தமாக அள்ளிச் செல்வோர் அனைவரையும் போட்டோ எடுத்துக் கொள்கிறார். நானும் ஒரு செட் வாங்கிவிட்டேன். உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள். லயன் ComeBack எடிசனும் வந்துவிட்டது.

* இந்தப் புத்தகக் காட்சியில் நான் கவனித்த ஒரு பொதுவான விஷயம் : வாசகர் கூட்டம் குறையவில்லை. அவர்கள் வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம். அதாவது கடந்த ஆண்டுகளில் ஒரு வாசகரால் 500 ரூபாய்க்கு 5 புத்தகங்கள் வாங்க முடிந்ததென்றால், இந்த ஆண்டு அதே 500 ரூபாய்க்கு 3 புத்தகங்கள்தான் வாங்க முடிகிறது. புத்தகங்களின் விலையேற்றம்தான் காரணம். புத்தகங்களின் விலையேற்றத்துக்குப் பல காரணங்கள்.

* ஒரு ஸ்டாலில் நடந்த உரையாடல் :
‘ஆர்னிகா நாசரோட விஞ்ஞான நாவல்லாம் உங்ககிட்ட இருக்கா?’
‘ஆர்னிகா நாசர், எங்ககிட்டதான் எல்லா கதையும் கொடுத்து வைச்சிருக்காரு. விஞ்ஞான கதைகள் நாங்க போடல. யோசிக்கணும்.’
‘எப்போ கொண்டு வருவீங்க?’
‘யாரு வாங்குவா? அவரென்ன சுஜாதாவா? அந்தளவு மார்க்கெட் இல்லியே.’
‘ஓ… சரி, எந்திரன் கதை தன்னோடதுன்னு கேஸ் போட்டாரே. என்னாச்சு?’
‘சங்கரு தாத்தாவாகுற வரை அந்தக் கேஸு நடக்கும்.’