அழிந்து கொண்டிருக்கிறோம்!

ஈழத்தமிழர்களுக்காக இறுதி வேண்டுகோள்.

பதினைந்து நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி இது. இதில் வரும் சில காட்சிகள் உங்கள் மனத்தைப் பாதிக்கலாம், தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது. இன்றைய ஈழத்தமிழர்களில் நிலையே ஒட்டுமொத்த உலகத்தால் தவிர்க்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கிறது.  பாதிக்கட்டும், பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அதற்கான இணைப்புகளைத் தருகிறேன். பாதித்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது?

பகுதி 1 :http://www.youtube.com/watch?v=YZ_qbOyz4Ms&NR=1

பகுதி 2 :http://www.youtube.com/watch?v=d8kXCDiW98o&NR=1

ஸ்ரீலங்காவில் இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை என்று சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பேட்டி கொடுத்துள்ளார்.

திருவாசகம். ஐநா சபையின் நியு யார்க தலைமையகத்தில் பொறித்து வைத்துக் கொள்ளட்டும். தமிழினத் தலைவர்களே டெல்லியில் முடிந்தவரைக்கு ஆதாயம் ஈட்டுவதில் முனைப்புடன் இருக்கும்போது, யாரோ ஒரு மூன்றாவது மனுசன் ஆதாரம் இல்லையென்று சொல்வதில் வியப்பில்லையே.

ரமணன் இன்று மழை பெய்யும் என்று சொன்னாரா? கந்தசாமி ரிலீஸ் தள்ளிப்போகிறதா? பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுமா? 20-20 வேர்ல்ட் கப்ல தோனி மறுபடியும் ஜெயிப்பாரா? – நமக்கென்று வாழ்க்கையில் இப்படி ஆயிரம் யதார்த்தக் கவலைகள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களின் நிலையை எண்ணி, நமது இன உணர்வு பீறிட,  அதிகபட்சம் ‘உச்’ கொட்டி கண்ணீர் சிந்துவோம். உள்ளுக்குள் கோபம் கொந்தளிக்கும். நாலு பேரைத் திட்டிப் பேசுவோம், எழுதுவோம். பிறகு,அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.

இந்த வீடியோவைப் பார்த்து கண்ணீர் சிந்தக்கூட அருகதையற்றவனாகத்தான் என்னை நினைக்கிறேன்.

ஐபிஎல் – Indian Parliament League

டெல்லி லோக்சபா Indian Parliament League போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. எந்த அணி முந்துகிறது, எந்த அணி பிந்துகிறது, யார் மண்ணைக் கவ்வப் போகிறார்கள் என்று கணிக்கவே முடியவில்லை. மாநிலம் வாரியாக பரபரப்பாகப் பேசப்படுபவர்கள்…

கடைசியா யாரு ஆகப்போறாங்கோ…..?



Thanks Cheerleaders…

ஆடியது காங்கிரஸ் கூடாரம்!

(தேர்தல் செய்திதான். ஆனால் கொஞ்சம் பழசு.)

சுதந்தரம், சமஸ்தானங்கள் இணைப்பு இவையெல்லாம் நிகழ்ந்த பிறகும் பல மகாராஜாக்களுக்குப் பழைய நினைப்பும் மிதப்பும் குறையவில்லை. சொல்லப்போனால் அதுவரை மன்னர் ஆட்சிக்குப் பழகியிருந்த மக்கள் மனத்தில் மகாராஜாக்களின் மீதான மதிப்பு குறையாமல்தான் இருந்தது.

1952. ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் சட்டசபை, இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ‘எவனாவது தேர்தல்ல நின்னீங்க, மானியம் கிடையாது’ என்று நேரு, முன்னாள் மகாராஜாக்களை மிரட்டியதாக ஒரு தகவல் உண்டு.

ஜோத்பூரின் கடைசி மகாராஜா ஹன்வந்த் சிங்கும் தேர்தலைச் சந்திக்கத் தயாரானார். காங்கிரஸோடு கூட்டணி அமைத்து போட்டிபோட நினைத்தார். பாதி தொகுதிகள் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவில்லை. தனித்து நிற்க முடிவு செய்தார்.

ஹன்வந்த் சிங்

காங்கிரஸார் கைகொட்டிச் சிரித்தார்கள். ‘நான் நிக்கவைச்சா ஒரு கல்லுகூட தேர்தல்ல ஜெயிக்கும்’ என்று சவால்விட்டு களமிறங்கினார் ஹன்வந்த் சிங். தனது ரதோர் பரம்பரையைச் சேர்ந்த பிரமுகர்களையெல்லாம் சேர்த்தார். முப்பந்தைந்து சட்டசபை, நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் நிறுத்தினார். அவரு ஜோத்பூர் சட்டசபை, பாராளுமன்றம் இரண்டிலும் வேட்பாளராக நின்றார்.

‘போடுங்கம்மா ஓட்டு! ஒட்டகத்தைப் பார்த்து!’ – ஊர் ஊராகச் சுற்றினார். ‘நீங்கள் என் மக்கள். நீங்களே எனக்கான மானியம்!’ – ஹன்வந்த் சிங்குக்கு செல்லுமிடமெல்லாம் படுவரவேற்பு. காங்கிரஸ் கூடாரம் ஆடித்தான் போயிருந்தது. தேர்தல்கள் முடிந்தன. ஓட்டு எண்ணிக்கைகள் ஆரம்பமாயின (ஜனவரி 26). ஆரம்பத்திலிருந்தே ஒட்டகத்துக்கு நல்ல செய்திதான் வந்துகொண்டிருந்தது.

ஹன்வந்த் சிங்குக்கு குஷி தாங்கவில்லை. தனது மூன்றாவது மனைவியும் நடிகையுமான ஸுபைதாவை அழைத்துக்கொண்டார். இருவர் மட்டும் செல்லும் மினி விமானம் ஒன்றில் ஏறினார். மகிழ்ச்சியாக ஓட்ட ஆரம்பித்தார். விமானம் வானத்தில் சாகசம் செய்துகொண்டிருந்தது.

இரவு. நொறுங்கிக் கிடந்த விமானத்தில் இருந்து ஹன்வந்த் சிங்கின் உடலையும் ஸுபைதாவின் உடலையும் மீட்டெடுத்தார்கள். (ஹன்வந்த் சிங், ஸுபைதாவின் கதை, ‘ஸுபைதா’ என்ற ஹிந்தித் திரைப்படமாக வெளிவந்துள்ளது.) தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகின. ஹன்வந்த் சிங்கின் வேட்பாளர்கள் 31 சட்டசபைத்தொகுதிகளிலும், 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார்கள். அவரும் இரண்டிலும் வெற்றிபெற்றிருந்தார்.

காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளரான ஜெய் நாராயன் வியாஸுக்குப் படுதோல்வி. மகாராஜா இறந்த துக்கம், ஆத்திரம். வியாஸை ஜோத்பூர் மக்கள் நையப்புடைத்திருந்தார்கள். பின்பு இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றிபெற்றுதான் வியாஸால் முதலமைச்சர் ஆக முடிந்தது.

கணக்கு பரிட்சையும் சில கெட்ட கனவுகளும்

பத்தாம் வகுப்புவரை நான் கணக்கில் புலியாக இல்லாவிட்டாலும் புள்ளிமானாகவாவது இருந்தேன். அப்போது 92 மார்க் எடுத்ததாக ஞாபகம். பளஸ் ஒண்ணுக்குப் பிறகுதான் எனக்கும் கணக்குக்குமான பிணக்குகள் ஆரம்பித்தன. இண்டக்ரேஷன் எல்லாம் இன்ஜெக்‌ஷனாக வலித்தது. டெட்டர்மினேஷனைப் பார்க்கும்போது அது என்னை டெர்மினேட் பண்ண வந்த அவதாரமாகத் தோன்றியது.

எப்படியாவது என்னை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டுமென்ற அவாவில் அப்பா, தனியாக கணக்குக்கென்று ட்யூஷன் எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆசிரியரின் பெயர் அனந்த நாராயணன். பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டே காலை, மாலை வேளைகளில் பல பேட்ச்களாக ட்யூஷன் எடுப்பார். சனி, ஞாயிறு விடுமுறை என்றால் சிறப்பு வகுப்புகள் உண்டு. என்னோடு பல கணிதப் புலிகள் படித்தார்கள்.

‘பள்ளியிலும் இதே பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். ட்யூஷனினும் அதையே எடுக்கிறார். தொடர்ந்து இதையே பல வருடங்கள் செய்துகொண்டிருந்தால்…’ – அவர் கால்குலஸ் போட்டுக் கொண்டிருக்கும்போது என் சிந்தனையில் இப்படி ஏதாவது கால்குலேஷன் ஓடிக் கொண்டிருக்கும்.

என் சக ட்யூஷன் நண்பர்கள் எல்லாம் நேரம், நாள் தவறாது ட்யூஷனுக்குச் சென்று வந்தார்கள். எனக்குத்தான் பிடிக்கவில்லை. அவரையா, கணக்கையா என்று தெரியவில்லை. ஏதாவது காரணம் சொல்லி பெரும்பாலும் மட்டம் போட்டு விடுவேன். அவ்வப்போது சென்று வந்தேன். நான் போனாலே ஒருமாதிரியாக நக்கலாகப் பார்ப்பார். எனக்கு அது பழகிப் போயிருந்தது.

ப்ளஸ் ஒன்னிலும் சரி, ப்ளஸ் டூவிலும் சரி. பள்ளித்தேர்வுகளில் கணக்கில் தட்டுத்தடுமாறி எழுபது எடுத்துவிடுவேன். எப்போதாவது நூறு வரை செல்வதுண்டு. ‘பொறியியல் கல்லூரிக்குச் சேர எல்லாவற்றிலும் அறுபது சதவிகிதம் வேண்டுமாமே. எப்படியாவது எடுத்துவிடு. நான் உன்னைச் சேர்த்துவிடுகிறேன்.’ அப்பா அடிக்கடி சொன்ன வாசகம். என்னால் இயன்ற அளவு முயற்சி செய்தேன்.

அதென்னமோ தெரியவில்லை, கணக்கு பரிட்சைக்கு முந்தைய இரவுகளில்லாம் எனக்கு ஒரு கனவு வரும். அதாவது நான் பரிட்சை எழுத முடியாமல்போவது போலவோ அல்லது நான் ஹாலுக்குள் நுழையும் சமயத்தில் பரிட்சை முடிந்துவிடுவது போலவோ அல்லது நான் வேறு பரிட்சை என்று நினைத்து படித்துக்கொண்டு போனால் கணக்குக்கான வினாத்தாள் வழங்கப்படுவதுபோலவோ. இப்படி கெட்ட கனவுகள் என் தூக்கத்தைக் கெடுக்கும்.

கனவுகளை எல்லாம் கடந்து ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடித்தேன். கணக்கு நூற்றியிருவது வருமா? வினாத்தாளை வைத்து மார்க் போட்டுப் பார்த்தேன். பாஸ் ஆகிவிடுவேன் என்று தெரிந்தது. அடுத்து நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில் அப்பா சேர்த்துவிட்டார்கள். அங்கும் கணக்கு பளிப்பு காட்டியது.

நுழைவுத்தேர்வு, அப்புறம் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தன. மற்ற எல்லாமே 140க்கு மேல். கணக்கில் சதம். பத்தாவது வகுப்பில் எடுக்க நினைத்தது அப்போதுதான் கைகூடியிருந்தது. இருநூறுக்கு நூறு என்றால் எல்லோரும் ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ என்றா சொல்வார்கள்.

‘பரவால்ல விடு. இப்போதைக்கு காலேஜ்ல சேர்ந்துக்கோ. கணக்குக்கு மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் டெஸ்ட் எழுது. நூத்தியிருவது எடுத்துரு. அடுத்த வருஷம் இன்ஜினியரிங் போயிடு.’ அப்பா ஊக்கப்படுத்தினார்கள். தலையாட்டினேன். பிஎஸ்ஸி கெமிஸ்டிரியில் சேர்ந்துகொண்டேன். இம்ப்ரூவ்மெண்ட் எழுதினேன். அந்தமுடிவும் வந்தது. ஏற்கெனவே எடுத்ததைவிட குறைவான மார்க் வந்துவிடக்கூடாது என்று மட்டும்தான் எனக்கு பயம்.

அதிகமாகவே வந்தது. 104. இப்படியே நாலு நாலா இம்ப்ரூவ்மெண்ட் ஆனா, இன்ஜினியரிங் போய்ச்சேர பல வருடங்கள் பிடிக்குமெனத் தோன்றியது. வேதியியலையே தொடர்ந்தேன்.

கல்லூரியிலும் துணைப்பாடமாக கணக்கு படுத்தியது. மொத்தம் 4 தாள்கள். கண்டமாகத் தெரிந்தன. முதல் தாளில் தேறிவிட்டேன். இரண்டாவதில், அந்தப் பேறு பெற்றேன். அரியர். பிறகு ஒருவருடம் கழித்து அதை திரும்ப எடுத்துவிட்டேன். ஆனால் அந்த வருடம் எழுதிய நாலாவது கணக்குத் தாளில் சொற்ப மதிப்பெண்களில் கோட்டை விட்டுவிட்டேன். மீண்டும் ஒருமுறை அந்தப் பாடத்தைப் படித்து தேர்வு எழுதும் மனோதிடம், பொறுமை எனக்கில்லை.

‘அஞ்சு மார்க்குதானே குறையுது. ரீவேல்யூஸன் போடு. பாஸ் ஆக்கிருவாங்க’ – நண்பர்கள் யோசனை சொன்னார்கள். செய்தேன். மறுகூட்டலில் தேறினேன்.

பிஎஸ்ஸி முடித்து எம்சிஏ படிப்பதாக ஒரு திட்டம். மூன்று இடங்களில் ஸீட்டும் கிடைத்தன. நல்லவேளை. எம்எஸ்ஸி ஐடி சேர்ந்துவிட்டேன். அதில் கணக்கு கிடையாது. எம்சிஏ சேர்ந்திருந்தால் கணக்குகளை எல்லாம் தாண்டி அதை முடித்திருக்க மாட்டேன் என்றே இப்போதும் தோன்றுகிறது.

பழைய கணக்கு பரிட்சை கனவுகள் இப்போதும் எப்போதாவது வருவதுண்டு. ஆனால் நிஜத்தில் ‘இனிமே வாழ்க்கைல கணக்கு பரிட்சையே கிடையாதுடா!’ என்கிற நினைப்பே சுகமாக இருக்கிறது.

கண்டேன் பாட்டியை!

இளநீர்ப் பாட்டியை மீண்டும் கண்டுகொண்டேன். புரியாதவர்கள் சிரமம் பாராமல் இங்கே சென்று வரவும்.

அதே சிபி ஆர்ட் கேலரி பேருந்து நிறுத்தத்தில்தான் பார்த்தேன். காணாமல் போன இளநீர் வண்டிக்கு பதிலாக, பேருந்து நிறுத்தத்திலேயே தரையில் கடை விரித்திருந்தாள்.

ஸ்கூட்டியை விட்டு இறங்கி, ஹெல்மெட்டை கழட்டிவிட்டு ஆர்வமாக பாட்டியை நெருங்கினேன். மொட்டையடிக்கப்பட்டு, சற்றே முடிவளர்ந்த தலையோடு பாட்டி. நிமிர்ந்து பார்த்தாள். என்னைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு பிரகாசம். ‘வந்துட்டியா ராசா. என்னைத் தேடுனியா?’ – குரலில் ஏக்கம்.

‘தேடுனேன் பாட்டி. ஆனா யார்கிட்ட விசாரிக்கிறதுன்னு தெரியல. என்ன ஆச்சு?’

‘அதயேன் கேக்குற. இந்தா மேலருந்து விளம்பர போர்டு என் தலைல வுழுந்து, அப்படியே சரிஞ்சுட்டேன். இங்கேயே ரெண்டு பாட்டில் ரத்தம் போயிருக்கும். ஆசுபத்திரில ரொம்ப நாள் கெடந்தேன். எம் புள்ளைங்க பாத்துக்கிட்டாங்க. திரும்ப வந்ததே மறுபொறப்புதான்.’

சொல்லிக்கொண்டே ஒரு பெரிய இளநீரை வெட்டி நீட்டினாள். பேருந்து நிறுத்தத்தின் மேலே பார்த்தேன். வெறும் கம்பிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தன.

‘நான் வந்து நாலு நாளாச்சு. நீ ஏன் வரலை?’

‘இல்ல பாட்டி, இன்னிக்குத்தான் உங்களைப் பார்த்தேன்.’

பதினைந்து ரூபாயை நீட்டினேன். ஸ்கூட்டியில் ஏறி ஹெல்மெட்டை அணிந்தேன். ‘நீகூட வண்டிலலாம் போற. பாத்து கவனமா போ ராசா…’