140 எழுத்துப் பறவை!

ட்விட்டர், பேஸ்புக் வகையறாக்கள் மீது எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. எனவே பலகாலமாக அதனுள் எனது வலதுகாலை வைக்கவில்லை. எல்லாமே நேரத்தை விழுங்கும் முதலைகளாக மட்டுமே தெரிந்தன.

இருந்தாலும் எளிதில் விஷயங்களை அப்-டேட் செய்துகொள்ள இந்த முதலைகள்தான் இன்றைக்கு உதவுகின்றன என்பதை மறுக்க முடியாதே. தவிர, இவ்விரண்டிலும் அக்கவுண்ட் இல்லாவிட்டால் வாழத் தகுதியில்லாதவர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துவிடுவார்கள் என்ற பயத்தில், அவற்றினுள் என் இடதுகாலை எடுத்துவைத்தேன்.

இப்போது வரை முகப்புத்தகத்தில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. அதனுள் செல்லும்போதெல்லாம் ஏதோ நடுத்தெருவில் நிற்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. கல்லூரி நண்பர்கள் பலரும் அதில் இருப்பதால், அதில் அவ்வப்போது முகம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ட்விட்டரில் இருக்கும் சுவாரசியம் வேறெந்த சமூக வலைத்தளங்களிலும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 140 எழுத்துப் பறவையைத் துரத்திச் செல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு வருடத்துக்கும் மேல் ட்விட்டரில் இயக்கிக் கொண்டிருக்கிறேன். என் பின் தொடரும் நிழலின் குரலாக இருக்கும் ஆயிரம்+ நண்பர்களுக்கு நன்றி.

ட்விட்டரில் என்னைத் தொடர : http://twitter.com/writermugil

எனது சில ட்வீட்ஸ்:

சாருவின் எழுத்துகளைவிட ராமராஜனின் சட்டைகள் எனக்குப் பிடிக்கும்!

செய்தி :விஜயின் சுறாவுக்கு எந்தவெட்டும் இல்லாமல் கிளீன் யு சான்று வழங்கியுள்ளது சென்சார்போர்டு. # படத்தோட எடிட்டருக்கே எதை வெட்ட, எதை ஒட்டன்னு ஒரு எழவும் புரியலையாம்.

செல்பேசிக் கொண்டே வண்டி ஓட்டுபவர்களைக் கண்டால் கடுப்பாகிறது. # டிரைவிங்கில் செல்லடிக்கும் சலனம் – நடுரோட்டில் பெல்லடிக்கும் மரணம்.

வாழ்க்கையில் நிரந்தரமாக மறந்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது # செம்மொழி பாடல் சுருதிகாசன் குரலு ;(

வரவர விஜய் படங்களில் கிராபிக்ஸ் செலவு அதிகம்ஆகிறதாம். அவர் உதடுகூட அசைக்காமல் வசனம்பேசுவதால் மெனக்கிட்டு கிராபிக்ஸ் செய்யவேண்டியதுள்ளதாம் 😉

நேற்று கலைஞருக்காக அண்ணா சாலையில் வைக்கப்பட்ட ப்ளக்ஸில் தமிழ் மிளிர்ந்தது – ‘குறலோவியமே!’

நந்தலாலா பார்த்துவிட்டேன். உடனே Kikujiro பார்க்கவேண்டும் போலிருக்கிறது. டிவிடி வாங்க வேண்டும். மிஷ்கினிடம் கிடைக்குமா?

என் ஹெட்போனில் விருதகிரி பாடல்கள்தான் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் அதைக் காதில் மாட்டவில்லை.

அண்ணாசாலையில் தமிழர்களின் முகவரியே என்று கலைஞருக்கு பேனர் வைத்திருந்தார்கள். எனது பாஸ்புக் முதல் கேஸ் கனெக்‌ஷன்வரை அட்ரஸ் மாற்றவேண்டும்போல!

4வது முறை மதிமுக பொதுச் செயலரானார் வைகோ! – யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றிக் கொண்டிருக்கிறாரோ?

மங்காத்தாவும் ஊத்திக்கிட்டா அஜித்துக்கு பிரச்னையே இல்ல, ‘தல’ப்பாக்கட்டு பிரியாணி கடை ஆரம்பிச்சுடலாம்.

சிவப்புகருப்புசிவப்பு கொடிபார்த்து நீண்டநேரம் எந்த கட்சி என்று யோசித்தேன். பின்பே தானேஅழிந்த தானைத்தலைவரின் சிரித்தமுகம் நினைவில்வந்தது.

லிபியாவில்தவிக்கும் இந்தியர்களைமீட்க 4கப்பல் 2விமானம் -ஜி கே வாசன்- அப்டியே தமிழக காங்.தலைகளை அதுலஏத்தி லிபியால விட்டுட்டு வந்தா நிம்மதி.

டிவிடியில் 3இடியட்ஸ் பார்த்தேன். இதன் தமிழ் வெர்ஸனில் அமீர்கான் பாத்திரத்தில் நடித்தால் விஜய்க்கு நல்லது நடிக்காவிட்டால் படத்துக்கு நல்லது.

கலைஞர் (துரைமுருகனிடம்) : காங்கிரஸ்காரங்களை கேலி பண்ணுனியா? துரைமுருகன் : என்ன கேலி பண்ணுனியா?

கொகதிசொகதிஆயீஇ நெரமொரஇகமொர ஒகதிஒயயியீஇயீஇ ஒலிஸிஒலிஸி மொகதஒயபீபீயீஇ #listening harrisjayaraj’s Song Chorus

திடீரென உங்கள் வங்கிக் கணக்கில் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் உயர்ந்திருந்தால் குழம்பாதீர்கள்… ஜி ஜி வாக்காளர்ஜி டூஜி த்ரீஜி டெக்னாலஜி…

எனக்கு கண்ணாலம் ஆனப்புறம்தான் இந்தியா உலகக்கோப்பை ஜெயிக்கிறதைக் கண்ணால பார்க்க முடிஞ்சது. தெரிஞ்சிருந்தா, 2007லயே கண்ணாலம் கட்டிருப்பேன்.

உரம் விநியோகம் சம்பந்தமா திங்கக்கிழமை அழகிரிக்கு டெல்லில மீட்டிங்காம். பாவம் அந்தப்புள்ளை, ‘விநியோகத்துலயே’ வாழ்க்கை போயிரும்போல!

இன்றைக்கு தேதியில், கோல்டுபாலு உருவபொம்மை விற்கும் வியாபாரம் ஆரம்பித்தால், ஒரே பாட்டில் பெரிய பணக்காரனாகிவிடலாம்.

ஏதோ ஓரிடத்தைக் கடக்கும்போது, உணரும் ஏதோ ஒரு மணம், மனத்தை ஏதோ ஒரு நினைவுக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது. மனம்! மணம்!

பெத்தான் செத்தான் பாடல் FMல் கேட்ட, புதுசினிமா குறித்த அப்டேட் இல்லாத என் அம்மா சொன்னது: ‘இது என்ன கேவலமா இருக்குது. சிம்பு பாட்டா?’

2016ல் ஸ்டாலினின் நாற்காலிக் கனவு பலிக்க லேட்டஸ்ட்டாக செத்துப்போன சாய்பாபா அருள்புரிவார் என்ற நம்பிக்கையுடன்…

‘அ’வின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளம் போட்டவை இரண்டு ‘ஆ’க்கள். ஆராசா. ஆற்காட்டார்.

தும்மலை அடக்கிக் கொண்டிருக்கிறேன். அம்மா பதவியேற்கும் சமயம் வரும்போது சொல்லுங்கள் 😉

இனி டிராபிக் அதிகமுள்ள இடங்களில், டூவிலரை அணைத்து, உருட்டிச் செல்ல வேண்டியதுதான். நேரத்தைவிட, பெட்ரோலின் மதிப்பு அதிகம்!

புகை பிடித்தல் உடலுக்குத் தீங்கானது, நீங்கள் சூப்பர் ஸ்டாராகவே இருப்பினும்!

இப்போது அடிக்கடி கேட்கும் பாடல்கள் எங்கேயும் காதல். அடுத்து ஹாரிஸின் இசையில் வேறு ஜெராக்ஸ் பாடல்கள் வந்தபின், இதை நிச்சயம் கேட்கமாட்டேன்.

திமுகவின் விக்கெட்டுகளை ஒரேடியாக அள்ளிவிட்டதாக அதிமுக பவுலர்கள் கொண்டாட அவசியமில்லை. திமுக பேட்ஸ்மேன்கள் அவுட் எல்லாமே ஹிட் விக்கெட்.

இன்று எதுவுமே ட்வீட் செய்யத்தோன்றவில்லை என்பதை இங்கே ட்வீட் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கெளம்பிட்டாருயா சுப்புடு!

சமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தவை மட்டும் இங்கே :

அவன் இவன் (யுவன் ஷங்கர் ராஜா)

சுசித்ரா குரலில் டியா டியா டோலே என்ற தீம் இசைதான் கேட்டதிலிருந்தே மனத்துக்குள் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. உற்சாகத் துள்ளல் இசை. அதன் பின் பாதியில் வரும் கிராமிய இசை, அப்படியே நம்மை ஊர்ப்பக்கம் நடக்கும் ‘கோயில் கொடை’க்கு தூக்கிச் சென்று விடுகிறது.

ராசாத்தி போல – ஹிட் ஆவதற்குரிய இசைக்கலவை, ஏற்ற இறக்கங்கள், மாய வார்த்தைகள் கொண்ட பாடல். பிடித்திருக்கிறது. இருந்தாலும் காட்டுச் சிறுக்கியே என்ற வார்த்தை மட்டும் ராவணனால் தொந்தரவு கொடுக்கிறது.

ஒரு மலையோரம் – அருமையான மெலடி. எப்போதும் பச்சை (Ever green) ரக பாடல். ஏர்டெல் சூப்பர் ஜூனியர் சிங்கர்ஸ் ஸ்ரீநிஷா, பிரியங்கா, நித்யஸ்ரீயுடன் விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். இளையராஜாவின் பழைய சரக்குதான் என்றாலும் அவன் இவனில் எனக்கு மிகப் பிடித்த பாட்டாக இது உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.

முதல் முறை, அவனைப் பத்தி – இரண்டுமே காட்சிகளுடன் பார்க்கும்போது, பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். இரண்டு பாடல்களிலுமே மரணத்தின் வாசனை தூக்கலாக இருக்கின்றன. அவனைப் பத்தி பாடலில் – சாவு மோளத்தின் பின்னணியில் ஹீரோக்களின் ஆரம்பப் பாடல்போல இருக்கிறது. பாலாவின் டச்! டி.எல். மகாராஜன் குரல் – அதிர்வுகளை ஏற்படுத்துவது உண்மை.

அவன் இவன் – பாலாவின் காமெடி படமென்று கேள்விப்பட்டேன். இல்லையோ?

காதல் 2 கல்யாணம் (யுவன் சங்கர் ராஜா)

எனக்காக உனக்காக – யுவன் டெம்ப்ளேட் டூயட் – நரேஷ், ஆண்ட்ரியா குரல்களுக்காக, கேட்கக் கேட்க பிடிக்கும்.

குறிப்பு : இதே படத்தில், நான் வருவேன் உன்னைத் தேடி, தேடி உன்னை நான் வருவேன், வருவேன் தேடி நான் உன்னை, உன்னை வருவேன் தேடி நான், தேடி வருவேன் நான் உன்னை – இந்த வார்த்தைகள் கூட்டணியில் ஒரு பாடல் இருக்கிறது. கேட்காதீர்கள் 😉

180 (இசை : Sharreth – தமிழ்ல என்ன ஸ்பெல்லிங்?)

கார்க்கியின் வரிகளில் சிறுசிறு கண்ணில் – உத்வேகமூட்டும் வித்தியாசமான பாடல். பாடியிருக்கும் சிறுவர்களின் குரல்கள், பாடலைக் கவனம் பெற வைக்கின்றன.

AJ என்றொரு பாடல் – முழுவதும் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பாடலைப் புரிந்துகொள்ள தமிழோடு பிரெஞ்ச், ஜப்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட ஏகப்பட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்போல.

தெய்வத் திருமகன் (ஜி.வி. பிரகாஷ்)

விழிகளில் ஒரு வானவில் – இசையமைப்பாளரின் வருங்கால மனைவி பாடிய பாடல். கேட்க இதமாகத்தான் இருக்கிறது. பண்பலை வானொலிகள் மூலம் ஹிட் ஆக ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் இருபதோடு இருபத்தொன்றாகத்தான் இருக்கிறது.

இந்த ஆல்பத்தில் என்னைக் கவர்ந்த பாடல்கள் இரண்டு. இரண்டுமே விக்ரம் பாடியவை : பாப்பாப் பாட்டு, கதை சொல்லப் போறேன். இரண்டுமே குழந்தைத்தனமான பாடல்கள். அதனால்தான் எனக்குப் பிடித்திருக்கிறதுபோல.

ஆரிரோ ஆராரிரோ – நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் இது. நா. முத்துக்குமாருக்கும் பெயர் கொடுக்கும் இன்னொரு பாடல், பாடகர் ஹரிசரனுக்கும். இசையில் புதிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் மனதோடு ஒட்டிக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்ட பாடல்.

கோ – படம் சென்றிருந்தேன். இடைவேளையில் தெய்வத்திருமகன் டீஸர் காண்பித்தார்கள். விக்ரம், ஜன்னலைத் திறந்துகொண்டு வந்து, மழலையாகப் பேசும்போது… தியேட்டரே கேலியாகச் சிரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க நினைத்தால்கூட தியேட்டரில் பார்க்கவிட மாட்டார்கள்போல!

வைரமுத்துவின் கவிதைகள் சில வைரமுத்துவின் குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பல காலத்துக்கும் முன் வந்திருக்கிறது. அந்த அபூர்வ புதையல் இங்கே.

குதிக்குற குதிக்குற குதிரைக்குட்டி…

அழகர்சாமியின் குதிரை பாடல்கள் குறித்து இணையத்தில் முதலில் வந்து விழுந்த விமரிசனங்கள் எல்லாமே எதிர்மறையாக மட்டுமே இருந்தன. ‘எந்தப்பாடலுமே இளையராஜா தரத்தில் இல்லை’, ‘இளையராஜா ஏமாற்றிவிட்டார்’ – இப்படி. அதனால் பாடல்கள் கேட்கும் ஆர்வம் எனக்கு உடனே ஏற்படவில்லை. வார இறுதியில்தான் பாடல்களைக் கேட்டேன். ஏமாந்துபோனதை உணர்ந்தேன். பாடல்களால் அல்ல, பாடல்கள் குறித்த விமரிசனங்களால்.

நந்தலாலாவுக்குப் பிறகு இளையராஜாவின் மிக முக்கியமான ஆல்பம்.

அடியே இவளே ஊருக்குள்ள திருவிழாவாம்…

மிக மிக வித்தியாசமான பாடல். இந்தப் பாடலின் கட்டமைப்பை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எத்தனை விதமான குரல்கள். எத்தனை விதமான இசைக்கருவிகள். எல்லாம் கிராமிய இசைக்கருவிகள். தமிழர் பண்பாட்டு இசைக்கருவிகள் குறித்து குங்குமத்தில் தொடர் எழுதிவரும் நண்பர் நீலகண்டன், இந்தப் பாடல் குறித்து ஏதாவது கட்டுரை எழுதுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து வீடியோ எதுவும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது நிஜமாகவே கலைப் பொக்கிஷம். ஈசன் – ஜில்லாவிட்டு பாடல் புகழ் தஞ்சை செல்விக்கு அமைந்துள்ள மற்றுமொரு அழகான பாடல்.

பூவைக்கேளு காத்தைக்கேளு…

அசல் இளையராஜா பிராண்ட் மெலடி. மீண்டும் கார்த்திக், ஷ்ரேயா கோஷல். புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் கேட்கச் சலிக்காத மென்பாடல். பண்பலை வானொலிகளால் சற்றே கவனிக்கப்படும் பாடல் இதுதான். இரவு நேரத் தூக்கத்துக்கு முன் கேட்கும் பாடல் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்.

குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி…

இந்த ஆல்பத்தின் ஸ்டார் பாடல் இதுவே. குதிக்கிற குதிக்கிற என இளையராஜா அசட்டுக் குரலில் பாடும்போது எனக்குள் இனம்புரியாத துள்ளலை உணர்ந்தேன். எத்தனைவிதமான மாடுலேஷன். பாடலைக் கேட்கும்போது அந்தக் குரலில் படத்தில் கதாநாயகனான அப்புகுட்டியின் முகம் என் கண்முன் விரிந்தது. ரசித்துக் கொண்டே இருக்கலாம், காலத்துக்கும். இந்தப் பாடலுக்கான விஷுவல்ஸ் அவ்வளவு அருமையாக வந்திருக்கிறதென சினிமா துறை நண்பர் ஒருவர் சொன்னார். வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

நண்பர் பாஸ்கர் சக்திக்கு என் வாழ்த்துகள்.

படம் குறித்து இளையராஜா, குமுதத்தில் (23.03.2011) பகிர்ந்துகொண்ட கருத்து இது.

ஃபாரின் படங்களைப் பார்த்துட்டு அதுமாதிரி புதுசா சிந்தனை பண்ணி படம் எடுக்க ஆளில்லை. அந்தப் படத்தையே அப்படியே எடுக்க வேண்டியிருக்கு. சமீபத்துல அப்படி ஒரு படத்தை மீடியாக்கள் பாராட்டின அளவுக்கு மக்கள் ரசிக்கலையே. இந்த பாதிப்பு இனி வர்ற நல்ல படங்களுக்கு வந்திடக்கூடாதுங்கற அக்கறையாலதான் இப்ப நான் பேசுறேன். நான் இசையமைக்குற படம் என்பதால சொல்லலை. நான் வேலை செய்யாத நல்ல படங்களும் தோல்வி அடைஞ்சிருக்கு. இது வருத்தமா இருக்கு. உலகத் தரத்தில் படம் எடுக்க நம்ம ஊர்லயும் ஆள் இருக்காங்க என்பது மாதிரி ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தை எடுத்திருக்காங்க. இதுக்கு ஜனங்க சரியான முறையில் ஆதரவு கொடுத்தால்தான் சினிமாவில் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.

நாகேஷ்!

தீனதயாளு தெருவில் நான் தங்கியிருந்த அறையில், என்னுடைய உடைமைகள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக பெரிசாக ஏதும் கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் பெருமையோடு வைத்திருந்தேன்.

அந்தக் கோப்பையின் முகத்தில்தான் நான் தினமும் கண் விழிப்பேன் என்றாலும்கூட அது மிகையில்லை. அவ்வப்போது, அந்தக் கோப்பை என்னுடைய கற்பனைக் குதிரையைத் தட்டி விடத் தவறவில்லை.

எனக்குக் கோப்பையைக் கொடுத்தபின், என் நடிப்புத் திறமையால் பெரிதும் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். எங்கே போனாலும், தன்னுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போவது போலவும் பார்க்கிற ரசிகர்கள் எல்லாம், என்னைப் பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்வது போலவும், கும்பிடு போடுவது போலவும், அதைப் பார்த்து நான் முதலில் சந்தோஷப்பட்டாலும் உடனே, ‘அடேய்! இந்த வரவேற்பெல்லாம் எம்.ஜி.ஆருக்குத்தான்; உனக்கில்லை. புரிந்து கொள்!’ என்று என் மனச்சாட்சி என்னை இடிப்பது போலவும்கூட நான் கற்பனை செய்து கொள்ளுவேன்.

இதைப் படிக்கிறபோது, நான் ஒரு கோயில் முன் உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறபோது, கோயில் முன் நின்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டுப் போகிற பக்தர்கள் எனக்குக் கும்பிடு போடுவதாக நான் நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட, ஒரு பக்தர், என்னைப் பார்த்து, ‘யோவ்! பிச்சைக்காரா! சாமி பார்க்க விடாமல் குறுக்கே உட்கார்ந்து மறைக்கிறியே!’ என்று திட்டும்போது உண்மையை உணர்வது போலவும் நான் நடித்த சினிமாக் காட்சி உங்கள் நினைவுக்கு வருகிறதா?

எனக்கு ஒரு ராசி உண்டு. எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறபோது அதைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று என் மனசு நினைக்கும். ஆனால், ஒருவரும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர். கொடுத்த கோப்பையையே சொல்லலாம். நாடகத்தில் வயிற்று வலிக்காரராக நடித்து, எம்.ஜி.ஆரே பாராட்டி கோப்பையைக் கொடுத்து விட்டார். அதை எடுத்துக்கொண்டு, நாடகம் நடந்த டவுன் கோகலே ஹாலிலிருந்து நடந்தே புறப்பட்டேன். கோப்பையை ரோட்டில் போகிறவர்கள் கண்ணில் படும்படி பிடித்துக்கொண்டு மவுண்ட் ரோடு முழுக்க நடந்தே வந்தேன்.

‘அட! என்ன கோப்பை இது? யார் கொடுத்தாங்க? எதற்காகக் கொடுத்தாங்க’ என்ற யாராவது கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அப்படி யாராவது கேட்கும் பட்சத்தில், நாடகத்தில் ஒரே காட்சியில் நடித்து, எம்.ஜி.ஆர். கையால் கோப்பை வாங்கின விஷயத்தைச் சொல்லத் துடித்தேன். கேட்பவர் பொறுமையோடும், ஆர்வத்தோடும் இருந்தால் நடு ரோட்டிலேயே வயிற்று வலிக்காரராக நடித்துக் காட்டவும் தயாராக இருந்தேன். ஆனால், என் துரதிருஷ்டம்! ஒரு பயல் கோப்பையைப் பற்றி விசாரிக்கவில்லை.

வழியில் ஒரு போலீஸ்காரர் தலையைக் கண்டதும் பயம். இவர், ‘ஏது கோப்பை?’ என்று கேட்டு நான் ‘நடிப்புக்காக எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய பரிசு’ என்று சொன்னால், அவர் நம்பாமல் ‘டேய்! நல்லா நடிக்கிறியே! எங்கே திருடினே? சொல்லு!’ என்று இரண்டு தட்டுத் தட்டி விடுவாரோ என்று பயம் பிடித்துக்கொண்டது. கோப்பையைச் சட்டைக்குள் மறைத்துக்கொண்டேன்.

யாருமே கோப்பையைப் பற்றிக் கேட்கவில்லையே என்ற வருத்தத்துடன் அறைக்கு எடுத்துக்கொண்டு வந்து பரிசுக் கோப்பையை அலமாரியில் கம்பீரமாக நிறுத்தி வைத்தேன். தினமும் ரசித்தேன். கற்பனையில் மிதந்தேன்.

***

ஒருநாள் வாகினி ஸ்டூடியோவுக்குள் நடந்து போய்க்கொண்டு இருந்தேன். ஜகன்னாதன் என்கிற புரொடக்ஷன் மேனேஜர் என்னைப் பார்த்துவிட்டு ‘நாகேஷ்! வாகினியிலே தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப் போகிற காட்சியின் துவக்கத்தில், டேபிள்களை ஒரு சர்வர் துடைப்பது போல ஒரு ஷாட் இருக்கிறது. அந்த ஒரு சீனில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்? ஐந்நூறு ரூபாய் போதுமில்லையா?’ என்றார்.

நான் ‘சரி’ என்றேன். காத்திருக்கச் சொன்னார். அப்போது, நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவர் என் கவனத்தை ஈர்த்தார். வயதான மனிதர். அவர் வில் போல உடலை பின்னுக்கு வளைத்து, நடந்து போய்க்கொண்டு இருந்தார். அவரது கையில் ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும்தான் இருந்தது.

என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா? கிடுகிடுவென்று அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, ‘ரொம்பக் கஷ்டப்பட்டு சிகரெட் பெட்டியைத் தூக்கிட்டுப் போறாப்போல இருக்கு. என்கிட்ட வேணும்னா கொடுங்க. நான் எடுத்துக்கிட்டு வரேன்!’ என்றேன்.

அவர், ‘ஹ… ஹ…’ என்று சுருக்கமாகச் சிரித்து விட்டு, தன் பின்னோக்கிய வில் நடையைத் தொடர்ந்தார்.

சிறிது நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன். ஜகன்னாதன் ‘ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.

நான் ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டுக் கொண்டேன். தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக்கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு தம்ளரை மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளைச் சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வந்ததும் கீழே வந்த டம்ளரை லாகவமாகப் பக்கெட்டில் பிடித்துக்கொண்டேன்.
‘சபாஷ்! ரொம்ப நல்லா பண்ணறியேப்பா!’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் பேரதிர்ச்சி! நான் சற்று முன், செட்டுக்கு வெளியே நடையைக் கேலி பண்ணினேனே அதே மனிதர்! வாகினி ஸ்டூடியோவின் அதிபரான சக்ரபாணி!

‘சார்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீங்க நடந்து வந்துக்கிட்டிருந்தபோது யாருன்னு தெரியாம உங்களைக் கிண்டல் பண்ணிட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க’ என்று காலில் விழாத குறையாக அவரைக் கெஞ்சினேன்.

‘அதை நான் எப்பவோ மறந்தாச்சு! நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே!’ என்றவர், அடுத்தபடியாக, ‘உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?’ என்று கேட்டார்.

‘ஐந்நூறு ரூபாய்!’

‘தமிழ்ல நடிக்கத்தானே ஐந்நூறு பேசியிருக்கு? நீயே தெலுங்குலயும், இந்த சீனைப் பண்ணிடு. இரண்டுத்துக்குமா சேர்த்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கோ’ என்றார்.

எனக்கு நடப்பது எல்லாம் கனவா? நிஜமா என்ற சந்தேகமே வந்து விட்டது.

தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜகன்னாதனைக் கூப்பிட்டு, ஆயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிக்கொண்டு வரச் சொன்னார்.

நான், ‘சார்! சார்! செக்கெல்லாம் வேணாம்’ என்றேன்.

என்னைப் பார்த்துச் சிரித்தபடி, ‘வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது. பயப்படாதே!’ என்றார்.

‘அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால, கேஷா கொடுத்தீங்கன்னா ரொம்ப சௌகரியமா இருக்கும்’ என்றேன்.

‘அப்படியா! சரி!’ என்று சொல்லி விட்டு, ஜகன்னாதனிடம், ‘காரில் இவரை அழைச்சுக்கிட்டு நேரே பாங்குக்குப் போய், செக்கைப் பணமா மாத்தி இவரிடம் கொடுத்து விட்டு, இவரையும் அவரது இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விடு!’ என்றார்.

அந்த ஆயிரம் ரூபாயை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில்தான் ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பாண்ட் மூன்றும் வாங்கிக்கொண்டு நான் காதலித்த ரெஜினாவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டேன்.

***

நடிகர் நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள், கல்கியில் சிரித்து வாழ வேண்டும் என்ற பெயரில் தொடராக வெளிவந்தது. எழுதியவர் எஸ். சந்திரமௌலி. தற்போது ‘நான் நாகேஷ்’ என்ற பெயரில் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., வாசன், சிவாஜி, திருவிளையாடல், கமல்ஹாசன் (கமா, கமா போட்டு இன்னும் சேர்க்கலாம்) என்று தன் வாழ்வின் மறக்கமுடியாத மனிதர்களையும் சம்பவங்களையும் நாகேஷ் இதில் பிரத்யேகமாக நினைவுகூர்கிறார். இதுவரை நாம் சந்தித்திராத ஒரு புதிய நாகேஷ் இந்த அனுபவங்களின் வாயிலாக உருப்பெற்று நிற்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் புத்தகம், தமிழ் சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத பொக்கிஷம்.

பயணம்

* இயக்குநர் ராதாமோகனுக்கு வித்தியாசமான முயற்சி. தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சி என்றெல்லாம் சொல்ல முடியாது.

* டைட்டில் சாங் தவிர வேறு பாடல்கள் கிடையாது. ஓரிரண்டு காட்சிகள் தவிர அநாவசியக் காட்சிகள் இல்லை. நகைச்சுவைக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை. தேவையான அளவு செண்டிமெண்ட்.

* நாகர்ஜுனுக்கு ஏற்ற கதாபாத்திரம். தேவைக்கு ஏற்ப அழகாக நடித்திருக்கிறார். ஆனால் ‘இந்தப் படம் தெலுங்கு டப்பிங்கா?’ என்று இன்று மட்டுமே என்னிடம் மூன்று பேர் கேட்டுவிட்டார்கள்.

* இஸ்லாமிய தீவிரவாதம் சார்ந்த காட்சிகள் வழக்கம்போல உறுத்துகின்றன. அதுவும் சில வசனங்களுக்காகவும், சில காட்சிகளுக்காகவும் ராதாமோகன் கடும் விமரிசனங்களைச் சந்திக்கப் போவது உறுதி.

* ஒரு மதத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, ஒரு கதாபாத்திரம் மூலமாக இன்னொரு மதத்தைத் தூக்கிப் பிடிப்பது சரியல்ல என்று சுற்றி வளைத்து மறைமுகமாகச் சொல்லலாம். முந்தைய வரியைப் போலத்தான் இயக்குநரும் படத்தில் சில விஷயங்களை மென்று முழுங்கி விமரிசித்திருக்கிறார். இந்தப் பத்தியின் முதல் வரியை நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், இஸ்லாமிய மதத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, கிறித்துவத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.

* சினிமா சூப்பர் ஹீரோவைக் கடுமையாகத் தாக்கித் தாளிக்கும் இயக்குநர், கடைசியில் காம்ப்ரமைஸ் செய்துகொள்கிறார். டிஆர்பி ரேட்டிங்குக்காக மீடியாக்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் கடுமையாகத் தாக்கும்படியான காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இன்னென்ன சேனல்கள் என்று நேரடியாகச் சொல்லாமல் பூசி மெழுகியிருக்கிறார்.

* படத்தில் கவரும் பயணி கதாபாத்திரங்கள் டாக்டர் ரிஷி, ஏர்ஹோஸ்டஸ் பூனம் கவுர், ரசிகன் பாலாஜி. ஒரு கட்டத்துக்குமேல் எரிச்சலூட்டும் கதாபாத்திரம் பாதிரியார் எம்.எஸ். பாஸ்கர்.

* நகைச்சுவை வசனங்களைப் பளிச்சென வெளிப்படுத்தும் புது வசனகர்த்தா, சீரியஸ் வசனங்களில் கோட்டை விட்டிருக்கிறார். மொழி, அழகிய தீயே படங்களில் விஜியின் வசனங்களை ரசிக்காதவர்களே இருந்திருக்க முடியாது.

* பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப அளவாக நடித்திருக்கிறார்.

* அடுத்து இன்னென்ன திருப்பங்கள் வரும் என்று பாமரர்களும் யூகித்துவிடக்கூடிய காட்சிகள்தாம். இருந்தாலும் சலிப்பையோ, கொட்டாவியையோ தரவில்லை.

* பயணம் – நிச்சயம் ஆதரிக்கப்பட வேண்டிய படம். குடும்பத்துடன் பார்க்கலாம், சில விஷயங்களைச் சகித்துக் கொண்டு.