தமிழ் பதிப்புலக ‘வரலாற்றில்’ முதன்முறையாக…

‘அவ்வளவுதான். இனி நம்மிடம் இருப்பது இரண்டே கப்பல்கள்தான். சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் நிச்சயமாக சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றை நான் தொலைத்துவிட்டேன். இழந்துவிட்டேன்’ – மனத்தளவில் அந்த முடிவுக்கு வந்திருந்தார் மெகல்லன்.

இருக்கும் இரண்டு கப்பல்களையாவது காப்பாற்றியாக வேண்டிய சூழல். ஆனால் அதற்கும் சோதனை தொடங்கியது. அடுத்ததாக ஒரு சூறாவளி வீச ஆரம்பித்தது. டிரினாடாடையும் விக்டோரியாவையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதேதோ திசைகளில் எல்லாம் அவை கொண்டு செல்லப்பட்டன.

அந்தச் சூறாவளியும் ஓரளவுக்கு ஓய்ந்தது. டிரினிடாடில் இருந்தபடி கடலைப் பார்த்தார் மெகல்லன். கண்பார்வை தூரத்தில்தான் விக்டோரியா இருந்தது. மனத்துக்குள் மெல்லியதாக ஒரு நிம்மதி படர்ந்தது. ஆனால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியாதபடி விக்டோரியாவின் பாய்மரத் துணிகள் கிழிந்து தொங்கின. சூறாவளி கொடுத்துவிட்டுப் போன பரிசு.

சில மணி நேரங்கள்கூட மெகல்லனின் நிம்மதி நீடிக்கவில்லை. அடுத்த சூறாவளி தாக்க ஆரம்பித்தது. கப்பல்களைப் புரட்டிப் போடும் அளவுக்குப் பேரலைகல் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன.

கடல், பேரலைகளால் அந்த இரண்டு கப்பல்களையும் பந்துகள் போல எடுத்து, தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு பாறையில் மோதி கப்பல் துண்டு துண்டாகிப் போகலாம் என்ற நிலை.

கப்பல்களில் இருந்த எல்லோரும் இறுக்கமாக எதையாவது பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இருந்தாலும் அலைகளில் ருத்ர தாண்டவம், சிலரை கடலுக்குள் விழ வைத்தது. கடலுக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தவர்களும் தவறி விழுந்தார்கள். அவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகப் போய்விட்டது.

ஒவ்வொரு நொடியையும் மரண பயமின்றிக் கழிக்க முடியவில்லை. இந்த நிலை இரண்டு நாள்கள் தொடர்ந்தது.

அதுவரை ஆடிய ஆட்டத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்பதுபோல அமைதியாக இருந்தது கடல்.

‘இந்த நிமிடம் வரை உயிரோடு இருப்பதே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கிறது. எப்படியோ விக்டோரியாவும் தப்பித்து விட்டது. ஆனால் சான் அண்டோனியாவும்  கான்செப்ஷனும் இதற்கு மேலும் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவை நிச்சயமாக ஏதாவது ஒரு பாறையிலோ, குன்றிலோ மோதி சிதைந்து போயிருக்கும். யாராவது உயிர் பிழைத்திருப்பார்களா? சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.’

உடலெல்லாம் வலி. மனத்தில் அதைவிட. கடல் அமைதியடைந்திருந்தாலும் மெகல்லனால் அந்த இரவில் தூங்க முடியவில்லை.

இருளை தின்றபடியே மெள்ள மெள்ள ஒளி ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்த அதிகாலை நேரம். யாரோ தன்னைக் கூப்பிடுவது போல உணர்ந்த மெகல்லன் படாரென எழுந்து உட்கார்ந்தார்.

‘கேப்டன்.. கேப்டன்..’

வெளியே ஹென்றியின் குரல் கேட்டது. அவசர அவசரமாக எழுந்து நொண்டியபடியே வெளியே சென்றார். முகம் முழுக்க உற்சாகம் வழிய நின்று கொண்டிருந்தான் ஹென்றி. அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவன் கைகாட்டிய திசையில் மெகல்லனின் பார்வை சென்றது.

நம்பவே முடியாத ஆச்சரியம். தன் கண்களை மீண்டும் ஒருமுறை துடைத்துவிட்டு அதே திசையில் நோக்கினார். மெகல்லனின் முகத்தில் புன்னகை, சூரியன் போல உதயமானது. கைகள் கூப்பி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.

தூரத்தில் சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் வந்து கொண்டிருந்தன.

000

பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். பாய்மரக் கப்பல்கள்தான் இருந்தன. கடலில் சுழலோ, சூறாவளியோ, பெரும் பாறைகளோ, எதிரி நாட்டுப் படையோ – எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கப்பலைச் சீரழிக்கக் காத்திருக்கும். நிலப்பரப்பே இன்றி, பயணம் மாதக் கணக்கில் நீண்டு கொண்டே செல்லும். உணவோ , நீரோ கிடைக்காத அவலநிலையால் மரணம் சகஜம்.

இம்மாதிரியான சூழலில்தான் பயணி மெகல்லன், கடல் வழியாக உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். ஐந்து கப்பல்கள். 241 பேர். 69,800 கி.மீ. பயண தூரம். மூன்று வருடப் பயணம். எத்தனை பேர் பிழைத்து வந்தார்கள்? உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் மெகல்லன் என்பது உண்மைதானா?

புரியும்படியாக புவியியலையும் சொல்லி, கூடவே சுவாரசிய நடையில் வரலாற்றையும் கலந்து சொல்வதென்பது சவால்தான். இதற்கு முன்பாக அண்டார்டிகா குறித்து நான் எழுதிய ‘ஸ்…!’ என்ற புத்தகம் பூரண திருப்தி கொடுத்தது. இந்தவருடம் அதே திருப்தி எனக்கு மெகல்லனில் கிடைத்திருக்கிறது.

மெகல்லன் : ப்ராடிஜி வெளியீடு