டைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு!

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967).

நிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

ஒருமுறை வைஸ்ராய் லின்லித்கோ, ஒஸ்மானைச் சந்தித்தபோது அவரது வாக்கிங் ஸ்டிக்கைக் கவனித்தார். இரண்டாக உடைந்த அது, ஒட்டப்பட்டு நூலால் சுற்றப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டே எந்தவித கூச்சமும் இன்றி வெளியிடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார் ஒஸ்மான். தன்னுடன் பேச வரும் ஒரு சமஸ்தானத்தின் நிஜாம், இப்படி ஒடிந்த ஸ்டிக்குடன் வருகிறாரே என்று வைஸ்ராய்க்குத்தான் கூச்சமாகப் போய்விட்டது. அடுத்தமுறை ஒஸ்மானைச் சந்தித்தபோது ஒரு புதிய உயர்தரமான வாக்கிங் ஸ்டிக்கைப் பரிசளித்தார். வாய் நிறையப் புன்னகை வழிய, அதனை வாங்கி வைத்துக் கொண்டார் ஒஸ்மான்.

அப்போதைய இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக வி.பி. மேனன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை ஒஸ்மானைச் சந்திக்கச் சென்றார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒஸ்மான் தன் சார்மினார் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடம் நீட்டினார். அதுதான் அப்போதைய மலிவான சிகரெட். பாக்கெட் பன்னிரண்டு பைசாதான். பத்து சிகரெட் இருக்கும்.

மேனனுடைய பிராண்ட் வேறு. போயும் போயும் சார்மினாரைப் புகைத்து வாய் நாற்றத்துடனா அலைய முடியும் என்று யோசித்த அவர், ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ஒஸ்மான் வற்புறுத்தவெல்லாம் இல்லை. தம் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். மேனனுக்கும் வாய் நமநமத்தது. தன் சட்டைப் பையில் இருந்து விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து உடைத்தார்.

நாகரிகமாக ஒஸ்மானிடம் நீட்டினார். வாயில்தான் புகைந்துகொண்டிருக்கிறதே என்று மறுத்திருக்கலாம். ஆனால் ஒஸ்மான் அதிலிருந்து நான்கைந்தை எடுத்துத் தன் சார்மினார் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அறையிலிருந்து புகை கலைந்து முடிந்த சில நொடிகளில் அவர்களது சந்திப்பும் முடிந்தது.

சில நாள்களிலேயே இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். பேச்சின் இடையே, ஒஸ்மான் தன் சார்மினார் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடமிருந்து எடுத்த புதிய பிராண்ட் சிகரெட்டுகள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன.

அதிகாரிகளோ விருந்தினர்களோ ஒஸ்மானை சந்திக்கச் சென்றால் அவர் உபசரிக்கும் விதமே தனியானது. வருபவர்களை உட்காரச் சொல்லுவார். அவர்கள் தனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார். எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார். பேசத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அரண்மனைப் பணியாள் கையில் ஒரு தட்டுடன் வருவார். அதில் முக்கால்வாசி நிரம்பிய நிலையில் இரண்டு கோப்பைகளில் டீ, இரண்டு பிஸ்கட்டுகள் மட்டுமே இருக்கும். ஆளுக்கு ஒரு கோப்பை டீ, ஒரே ஒரு பிஸ்கட். அவ்வளவுதான். பெட்டி பெட்டியாக தங்க பிஸ்கட் வைத்திருந்தால் என்ன, சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டை வீணாக்கக்கூடாது என்பது ஒஸ்மானின் உயரிய எண்ணம்.

ரத்தத்தோடு கலந்துவிட்ட குணம் அது. வாழ்நாளில் எந்த நிலையிலும் ஒஸ்மான் தனது குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. அப்படிப்பட்ட நிஜாம் ஒஸ்மான் அலிகானைப் பற்றி, டைம் வாரப் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. அட்டையில் ஒஸ்மானின் ஓவியம் கம்பீரமாகக் காட்சியளித்தது. (1937, பிப்ரவரி 22)

கட்டுரை அவரது கஞ்சத்தனத்தைப் பற்றியல்ல.‘உலகின் மாபெரும் பணக்காரர்’ என்பதற்காக. HIS EXALTED HIGHNESS THE NIZAM OF HYDERABAD என்று தலைப்பிட்டிருந்தது.

இன்றைய தேதியில் முகேஷ் அம்பானிக்கு அந்த பாக்கியம் கிடைத்ததோ இல்லையோ, அன்றைய தேதியில் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு அந்தப் பேறு கிடைத்தது. டைம் பத்திரிகை மட்டுமல்ல, உலகில் பல பெரிய பத்திரிகைகள் அப்போது அந்தச் செய்தியை வெளியிட்டு நிஜாமின் சொத்துக் கணக்கை விதவிதமாகக் கூறின.

நிஜாமின் தினப்படி வருமானம் சுமார் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள். அவர் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மொத்த மதிப்பு குத்துமதிப்பாக பதினைந்து கோடி அமெரிக்க டாலர்கள். அவர் உப்புப் போட்டு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்துள்ள தங்கக் கட்டிகளின் மதிப்பு இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும். அதையும் சேர்த்து நிஜாமின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு தோராயமோ தோராயமாக நூற்று நாற்பது கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்று வியந்து எழுதியிருந்தது டைம் பத்திரிகை. இந்தக் கணக்கில் ஒஸ்மான் சேர்த்து வைத்திருக்கும் வைர, மரகதக் கற்களின் மதிப்பு சேர்க்கப்பட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.

சரி, முதலிடம் ஒஸ்மானுக்கு. இரண்டாவது இடம்?

வெற்றிகரமாக கார்களைத் தயாரித்து வந்த ஹென்றி ஃபோர்டுக்கு. ஆனால் என்ன, அவரது மொத்த சொத்து மதிப்பு, ஒஸ்மான் சேர்த்து வைத்திருந்த நகைகளின் மதிப்பில் பாதிகூட இல்லை என்பதே உண்மை.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் தொடரில் இருந்து ஒரு சிறு பகுதி. இன்னும் சில மாதங்களில் அகம் புறம் அந்தப்புரம் குண்டு புத்தகமாக வெளிவர இருக்கிறது.)

ஆடியது காங்கிரஸ் கூடாரம்!

(தேர்தல் செய்திதான். ஆனால் கொஞ்சம் பழசு.)

சுதந்தரம், சமஸ்தானங்கள் இணைப்பு இவையெல்லாம் நிகழ்ந்த பிறகும் பல மகாராஜாக்களுக்குப் பழைய நினைப்பும் மிதப்பும் குறையவில்லை. சொல்லப்போனால் அதுவரை மன்னர் ஆட்சிக்குப் பழகியிருந்த மக்கள் மனத்தில் மகாராஜாக்களின் மீதான மதிப்பு குறையாமல்தான் இருந்தது.

1952. ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் சட்டசபை, இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ‘எவனாவது தேர்தல்ல நின்னீங்க, மானியம் கிடையாது’ என்று நேரு, முன்னாள் மகாராஜாக்களை மிரட்டியதாக ஒரு தகவல் உண்டு.

ஜோத்பூரின் கடைசி மகாராஜா ஹன்வந்த் சிங்கும் தேர்தலைச் சந்திக்கத் தயாரானார். காங்கிரஸோடு கூட்டணி அமைத்து போட்டிபோட நினைத்தார். பாதி தொகுதிகள் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவில்லை. தனித்து நிற்க முடிவு செய்தார்.

ஹன்வந்த் சிங்

காங்கிரஸார் கைகொட்டிச் சிரித்தார்கள். ‘நான் நிக்கவைச்சா ஒரு கல்லுகூட தேர்தல்ல ஜெயிக்கும்’ என்று சவால்விட்டு களமிறங்கினார் ஹன்வந்த் சிங். தனது ரதோர் பரம்பரையைச் சேர்ந்த பிரமுகர்களையெல்லாம் சேர்த்தார். முப்பந்தைந்து சட்டசபை, நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் நிறுத்தினார். அவரு ஜோத்பூர் சட்டசபை, பாராளுமன்றம் இரண்டிலும் வேட்பாளராக நின்றார்.

‘போடுங்கம்மா ஓட்டு! ஒட்டகத்தைப் பார்த்து!’ – ஊர் ஊராகச் சுற்றினார். ‘நீங்கள் என் மக்கள். நீங்களே எனக்கான மானியம்!’ – ஹன்வந்த் சிங்குக்கு செல்லுமிடமெல்லாம் படுவரவேற்பு. காங்கிரஸ் கூடாரம் ஆடித்தான் போயிருந்தது. தேர்தல்கள் முடிந்தன. ஓட்டு எண்ணிக்கைகள் ஆரம்பமாயின (ஜனவரி 26). ஆரம்பத்திலிருந்தே ஒட்டகத்துக்கு நல்ல செய்திதான் வந்துகொண்டிருந்தது.

ஹன்வந்த் சிங்குக்கு குஷி தாங்கவில்லை. தனது மூன்றாவது மனைவியும் நடிகையுமான ஸுபைதாவை அழைத்துக்கொண்டார். இருவர் மட்டும் செல்லும் மினி விமானம் ஒன்றில் ஏறினார். மகிழ்ச்சியாக ஓட்ட ஆரம்பித்தார். விமானம் வானத்தில் சாகசம் செய்துகொண்டிருந்தது.

இரவு. நொறுங்கிக் கிடந்த விமானத்தில் இருந்து ஹன்வந்த் சிங்கின் உடலையும் ஸுபைதாவின் உடலையும் மீட்டெடுத்தார்கள். (ஹன்வந்த் சிங், ஸுபைதாவின் கதை, ‘ஸுபைதா’ என்ற ஹிந்தித் திரைப்படமாக வெளிவந்துள்ளது.) தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகின. ஹன்வந்த் சிங்கின் வேட்பாளர்கள் 31 சட்டசபைத்தொகுதிகளிலும், 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார்கள். அவரும் இரண்டிலும் வெற்றிபெற்றிருந்தார்.

காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளரான ஜெய் நாராயன் வியாஸுக்குப் படுதோல்வி. மகாராஜா இறந்த துக்கம், ஆத்திரம். வியாஸை ஜோத்பூர் மக்கள் நையப்புடைத்திருந்தார்கள். பின்பு இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றிபெற்றுதான் வியாஸால் முதலமைச்சர் ஆக முடிந்தது.

புலி புராணம்!

தேசிய விலங்கு என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த மிருகக் காட்சியில் எப்போது புலி குட்டி போடும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. வண்டலூரில் வெள்ளைப்புலி அனு, மூன்று குட்டிகள் போட்டதாக செய்தி. கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

சரி, நம் முன்னோர்கள் புலிகளை எப்படியெல்லாம் அழித்தார்கள்? வேட்டை என்று சொல்லிக்கொண்டு மகாராஜாக்களும் பிரிட்டிஷாரும் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன?

***

வேட்டையாடுதல் என்பது இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று. அதை ஒரு கௌரவமாகக் கருதினார்கள். ‘போன வருசம் மட்டும் நான் பதினேழு காட்டுப்பன்றி, ஒன்பது சிறுத்தை, நாலு புலி கொன்னுருக்கேன்’ என்று சக சமஸ்தான மகாராஜாக்களிடம் பட்டியலிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அத்தோடு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பாடம் செய்துவைத்து ஓர் அறை முழுவதையும் நிரப்பியிருப்பார்கள்.

குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா
குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா

சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும். அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்.. டுமீல்! இன்றும் குவாலியரில் மாதவ் தேசியப் பூங்காவில், சிவ்புரி என்ற வேட்டை அரண்மனை அப்படியே இருக்கிறது. அது மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா கட்டியது.

பொதுவாக வைஸ்ராய், ஒரு சமஸ்தானத்துக்கு வருடத்துக்கு ஒருமுறைதான் செல்லுவார். செல்லும் நேரத்தில் பலே விருந்து உண்டு. அது காட்டை ஒட்டிய சமஸ்தானமாக இருந்தால் வேட்டையும் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால் விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்ததில்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால் யானை வேட்டை சாத்தியம். இவைபோக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன.

பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

கர்ஸன், லேடி கர்ஸன், புலி
கர்ஸன், லேடி கர்ஸன், புலி

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால் ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

மிரள வைக்கும் வேட்டை புள்ளி விவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வரும் அகம் புறம் அந்தப்புரம் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி.)

ரோல்ஸ்-ராய்ஸ் நினைவுகள்!

ரோல்ஸ் ராய்ஸ். பெயரை உச்சரிக்கும்போதே புருவம் உயர வைக்கும் ராயல் வாகனம். கௌரவத்தின் அடையாளம். அழகும் கம்பீரமும் சரிவிகிதத்தில் கலந்த கட்டமைப்பு. வேகத்திலும் சளைக்காதது. RR என்று சுருக்கமாவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளா உடல்.

இப்படிப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ்களை வைத்துக் கொண்டு நம் இந்திய மகாராஜாக்கள் செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

Pearl of India என்று பெயரிடப்பட்ட ஒரு ரோல்ஸ்-ராய்ஸை குவாலியர் மகாராஜா இரண்டாம் மாதவ்ராவ் சிந்தியா வாங்கினார். அதுவே முதல் போணி. பெருமை பொங்க அதனைத் தன் சமஸ்தானமெங்கும் ஓட்டி பவுசு காட்டினார். பிற சமஸ்தான மகாராஜாக்களுக்கும் இந்தச் செய்தி பரவியது.

அது என்ன கார், எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ‘அதென்ன அவரால மட்டும்தான் வாங்க முடியுமா என்ன? நாங்களும் வாங்குவோம்ல!’ என்று தேடித் தேடி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப்பட்டவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர, பணக்காரர்களும் அந்தக் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதனால் மகாராஜாக்களைத் தவிரவும் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. என்ன செய்யலாம் என்று யோசித்த மகாராஜாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

விருப்படியென்றால்? பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அலுமினியத்தால் செய்யப்பட்டன. அலுமினியமா சேச்சே, எனக்கு வெள்ளியால் செஞ்ச கார் வேணும். அந்த மகாராஜா வெள்ளிக் கார் வைச்சிருக்கானா, அப்படின்னா எனக்கு தங்க முலாம் பூசிய கார் வேணும். இப்படி டிசைன் டிசைனாக யோசித்து படு ஆடம்பரமாக, டாம்பீகமாக, தங்கள் விருப்பப்படி, வசதிப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து, ஃபிலிம் காட்டினார்கள்.

ஒருமுறை லண்டனிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலதுகால் செருப்பு. கூடவே ஒரு கடிதமும்.

‘இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்?’

அனுப்பியிருந்தவர் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

அல்வார் மகாராஜா ஜெய்சிங், ஒருமுறை லண்டன் சென்றிருந்தபோது அங்கிருந்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்குச் சென்றார். புதிதாக கார் வாங்குவதுதான் அவரது எண்ணம். ஆனால் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை. ‘இந்த ஆளெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்’ என்ற எண்ணம். ஜெய்சிங்கின் கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொன்னான்.

ஜெய்சிங் கடும்கோபக்காரர். விற்பனைப் பிரதிநிதி கூனிக் குறுகி மரியாதை கொடுக்கும்படியாக அந்த இடத்திலேயே ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ஆர்டர் கொடுத்தார். அவரது சமஸ்தானத்துக்கு ஏழு கார்களும் அனுப்பப்பட்டன. அவற்றை உபயோகப்படுத்த ஜெய்சிங்கின் ஈகோ ஒப்புக்கொள்ளவில்லை. விலை உயர்ந்த அந்த ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் வண்டிகளாக உபயோகிக்கச் சொல்லி கட்டளையிட்டார். அவை குப்பை அள்ளின.

நந்தகான் சமஸ்தான மகாராஜா சர்வேஸ்வர தாஸ் புலி வேட்டைப் பிரியர். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருக்கும் புலிகளைத் தேடுவதற்கேற்ற சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காரின் வெளியே அம்மாவின் காருக்கு வெளியே அமைச்சர்கள் தொற்றிக் கொண்டு போவார்களே, அதுபோல பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு செல்வதற்கென வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், அதி ஆடம்பரமானவை. தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காருக்குமென்றே தனித்தனியாக ஏராளமான நகைகள் இருந்தன. அந்தக் கார்களை சர்வீஸுக்கு விடும்போது, அதைச் சுற்றி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள்.

பவல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் ‘மகாராஜா வருகிறார்’ என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையிலிருக்கும் மக்களெல்லாம் முதுகைக் காட்டியபடி திரும்பிவிடுவார்கள். மகாராஜா பவுசாகக் கடந்து சென்றபின் தங்கள் வேலைகளைத் தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

சைக்கிளின் கேரியரில் பிராய்லர் கோழிகளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுச் செல்வார்களே, அதேபோல தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கோழி, ஆடு, மான்களையெல்லாம் இறைச்சிக்காகக் கொண்டு செல்லும் பழக்கம் பம்பாயைச் சேர்ந்த அப்துல் அலி என்ற பெரும் பணக்காரருக்கு இருந்தது.

மைசூர் மகாராஜா வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ்களின் எண்ணிக்கை முப்பத்தைந்து. பாட்டியாலா மகாராஜாவிடமிருந்த கார்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு. முதலிடம்? ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு. அவரிடமிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது.

ஹைதராபாத்துக்குள் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் வாசம் வீசியது 1912ல். ஒஸ்மானின் தந்தை, நிஜாம் மெஹ்பூப் அலிகான் 1911ல் ஒரு காரை ஆர்டர் செய்தார். மெஹ்பூபின் விருப்பப்படி கார் பயணத்துக்குத் தயாராகி வந்தது. ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்திருந்தது. அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ், மகன் ஒஸ்மானிடம் வந்து சேர்ந்தது.

கௌரவமாக அதனை வைத்துக் கொண்டார் ஒஸ்மான். எந்தவிதக் கஷ்டமும் அதற்குக் கொடுக்கவில்லை. அது பாட்டுக்கு அரண்மனை கார் ஷெட்டில் சிலை போல நின்றது. எடுத்து ஓட்டினால் டயர் தேய்ந்து விடுமே. 1947ல் அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஸ்பீடோமீட்டர் காட்டிய மைல்கள் எவ்வளவு தெரியுமா?

வெறும் 347.

அடால்ஃப், ராஜபக்‌ஷே!


1933, ஜனவரி 30, அதாவது இரண்டாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு, ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சியைப் பிடித்தார். 1935-ல் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாம் ஹிட்லரால் நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) என்ற பெயரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. ஜெர்மனி வாழ் யூதர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்களே. இரண்டாம் தரக் குடிமக்களே. எத்தனை தலைமுறைகள் அங்கு வாழ்ந்துவருபவர்களாக இருந்தாலும், இனி அவர்களுக்கு எந்தவித உரிமையும் துளி கூடக் கிடையாது. இவைதான் அந்தச் சட்டங்களின் சுருக்கம்.

இந்தச் சட்டவரைவுகளில் ஹிட்லரே கையெழுத்திட்டார். காவல் துறையினருக்கு முழு அதிகாரத்தை வழங்கினார். ‘யூதர்களைக் கைது செய்யுங்கள். சிறையில் அடையுங்கள். விசாரணை நடத்துங்கள். அதில் விருப்பமில்லையா, கொன்று விடுங்கள். யோசிக்கவெல்லாம் வேண்டாம். யூதர்களைக் கொல்வதே நம் கடமை’ – ஹிட்லரின் குட்டி மீசைக்குக் கிழீருந்த குரூர உதடுகள் இது போன்ற வார்த்தைகளைத்தான் வெளிப்படுத்தின.

ஹிட்லிஸ்ட் தயார் செய்து யூதர்களை அழிப்பதற்கென்றே, ஹிட்லர் இரண்டு படைகளை உருவாக்கினார். Gestapo – என்ற ரகசிய காவல்படை. SS – என்ற கருப்பு யூனிஃபார்ம் அணிந்த பாதுகாப்புப் படை.

இந்த இரண்டு படையினரும் ஒரு யூத எறும்பைக் கூட கைது செய்யலாம். வாரண்ட் எதுவும் தேவையில்லை. அவர்கள் வாழ்க்கைக்கு ‘வாரண்டி’யும் கொடுக்க வேண்டாம். கொன்று விடலாம். ஒரே ஒரு கண்டிஷன். தப்பித் தவறிகூட எந்த  ஜெர்மானியரையும் கைது செய்துவிடக் கூடாது.

அந்தப் படையினர் கண்ணில்பட்ட யூதர்களையெல்லாம் கைது செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் துப்பாக்கிகளுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தனர்.

உஷாரான யூதர்கள் பலர், கையில் கிடைத்த பொருள்களுடன் எங்கெங்கோ தப்பித்து ஓட ஆரம்பித்தார்கள். எங்கு சென்று அகதியாகவோ, இல்லை கைதியாகவோ வாழ்ந்தால் கூட தப்பில்லை, ஆனால் ஜெர்மனியில் செத்துவிடக்கூடாது என்று ஐந்து லட்சம் யூதர்கள் தப்பித்து விட்டனர்.

மற்றவர்கள்?

‘என்னப்பா நீங்கள்.. வேகம் பத்தாது போலிருக்கிறதே. இவ்வளவு தான் கொன்றீர்களா?’ என்று ஹிட்லர் பார்வையாலேயே கேட்டார். அவ்வளவுதான். ஒவ்வொருத்தரும் ஒரு நாளைக்கு ஒரு யூதரையாவது கொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கொல்ல ஆரம்பித்தார்கள். நாளடைவில் ‘நீ வெறும் பத்துதானா, நான் இருபது யூதர்களைக் கொன்றேன்’ என்று பெருமையாக ஸ்கோர் சொல்லிக் கொண்டார்கள்.

யூதர்களைப் பிடித்து அடைத்துக் கொடுமைப்படுத்துவதற்காகவும் கொல்வதற்காகவும் பிரத்யேக ‘வசதி’களுடன் கூடிய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. அவை Concentration camps என்று அழைக்கப்பட்டன.

அவற்றை, சிறைச்சாலைகள் என்று சொல்வதை விட கொலைச்சாலைகள் என்றே சொல்ல வேண்டும். இம்மியளவும் வெளிச்சம் புகமுடியாத கான்கீரிட் கல்லறைகள் அவை. காற்றால் நிரம்பிய பூமியில் காற்றேயில்லாத இடங்களாக அந்தச் சிறைச்சாலைகள் விளங்கின. தண்ணீர் கிடையாது. உணவின் வாசனைகூட அந்தச் சிறைச் சாலையினுள் புகுந்தது கிடையாது. மற்றபடி தேள், பாம்பு, பல்லி, பூரான், இன்னபிற விஷ ஜந்துக்கள் பரிபூரண சுதந்தரத்துடன் வாழ்ந்த இடம் அது.

கைதிகளை விசாரிக்கும் முறையை நினைத்தாலே நெஞ்சை அடைக்கும். கைதிகளை பெரும்பாலும் நிர்வாணமாக நிற்க வைத்து தோலை கொஞ்சம் கொஞ்சமாக உறிப்பது, அடித்துக் காயப்படுத்தி அதன் மேல் வெந்நீர் ஊற்றுவது, உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக நறுக்கிப் போடுவது, தீயில் இட்டு வாட்டுவது, பிறப்புகளைத் தாக்குவது, வன்புணர்ச்சி, இன்னும் சொல்ல முடியாத பல கொடுமைகள். நரகத்தில் இருப்பதைவிட குரூர அவஸ்தைகளை யூதர்கள் அனுபவித்தனர். விட்டால் போதும் என்று உயிர் விட்டனர்.

ஹிட்லரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில், இந்த சித்திரவதைக் கூடங்களில் சுமார் எண்ணூறு யூதர்களும் ஆயிரத்து நானூறு கம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

***

முல்லைத்தீவு, பிப்.13 –

தாங்கள் கைப்பற்றும் பகுதிகளில் உள்ள தமிழர்களின் பண்பாட்டு சின்னங்களை சிங்களப் படைகள் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழர்களின் இடங்களை சிங்களர் குடியிருப்புகளாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.

வீடுகளை இழந்து அடிமைகள்போல விரட்டப்படும் தமிழர்களை 3 ஆண்டுகள் முகாம்களில் வைத்திருக்க சிங்கள அரசு முடிவு செய்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் தமிழர்களின் வாழ்வாதாரம் அனைத்தும் சிங்களர் கைக்கு பறிபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செய்தி : மாலைமலர்