நாகேஷ்!

தீனதயாளு தெருவில் நான் தங்கியிருந்த அறையில், என்னுடைய உடைமைகள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக பெரிசாக ஏதும் கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் பெருமையோடு வைத்திருந்தேன்.

அந்தக் கோப்பையின் முகத்தில்தான் நான் தினமும் கண் விழிப்பேன் என்றாலும்கூட அது மிகையில்லை. அவ்வப்போது, அந்தக் கோப்பை என்னுடைய கற்பனைக் குதிரையைத் தட்டி விடத் தவறவில்லை.

எனக்குக் கோப்பையைக் கொடுத்தபின், என் நடிப்புத் திறமையால் பெரிதும் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். எங்கே போனாலும், தன்னுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போவது போலவும் பார்க்கிற ரசிகர்கள் எல்லாம், என்னைப் பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்வது போலவும், கும்பிடு போடுவது போலவும், அதைப் பார்த்து நான் முதலில் சந்தோஷப்பட்டாலும் உடனே, ‘அடேய்! இந்த வரவேற்பெல்லாம் எம்.ஜி.ஆருக்குத்தான்; உனக்கில்லை. புரிந்து கொள்!’ என்று என் மனச்சாட்சி என்னை இடிப்பது போலவும்கூட நான் கற்பனை செய்து கொள்ளுவேன்.

இதைப் படிக்கிறபோது, நான் ஒரு கோயில் முன் உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறபோது, கோயில் முன் நின்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டுப் போகிற பக்தர்கள் எனக்குக் கும்பிடு போடுவதாக நான் நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட, ஒரு பக்தர், என்னைப் பார்த்து, ‘யோவ்! பிச்சைக்காரா! சாமி பார்க்க விடாமல் குறுக்கே உட்கார்ந்து மறைக்கிறியே!’ என்று திட்டும்போது உண்மையை உணர்வது போலவும் நான் நடித்த சினிமாக் காட்சி உங்கள் நினைவுக்கு வருகிறதா?

எனக்கு ஒரு ராசி உண்டு. எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறபோது அதைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று என் மனசு நினைக்கும். ஆனால், ஒருவரும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர். கொடுத்த கோப்பையையே சொல்லலாம். நாடகத்தில் வயிற்று வலிக்காரராக நடித்து, எம்.ஜி.ஆரே பாராட்டி கோப்பையைக் கொடுத்து விட்டார். அதை எடுத்துக்கொண்டு, நாடகம் நடந்த டவுன் கோகலே ஹாலிலிருந்து நடந்தே புறப்பட்டேன். கோப்பையை ரோட்டில் போகிறவர்கள் கண்ணில் படும்படி பிடித்துக்கொண்டு மவுண்ட் ரோடு முழுக்க நடந்தே வந்தேன்.

‘அட! என்ன கோப்பை இது? யார் கொடுத்தாங்க? எதற்காகக் கொடுத்தாங்க’ என்ற யாராவது கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அப்படி யாராவது கேட்கும் பட்சத்தில், நாடகத்தில் ஒரே காட்சியில் நடித்து, எம்.ஜி.ஆர். கையால் கோப்பை வாங்கின விஷயத்தைச் சொல்லத் துடித்தேன். கேட்பவர் பொறுமையோடும், ஆர்வத்தோடும் இருந்தால் நடு ரோட்டிலேயே வயிற்று வலிக்காரராக நடித்துக் காட்டவும் தயாராக இருந்தேன். ஆனால், என் துரதிருஷ்டம்! ஒரு பயல் கோப்பையைப் பற்றி விசாரிக்கவில்லை.

வழியில் ஒரு போலீஸ்காரர் தலையைக் கண்டதும் பயம். இவர், ‘ஏது கோப்பை?’ என்று கேட்டு நான் ‘நடிப்புக்காக எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய பரிசு’ என்று சொன்னால், அவர் நம்பாமல் ‘டேய்! நல்லா நடிக்கிறியே! எங்கே திருடினே? சொல்லு!’ என்று இரண்டு தட்டுத் தட்டி விடுவாரோ என்று பயம் பிடித்துக்கொண்டது. கோப்பையைச் சட்டைக்குள் மறைத்துக்கொண்டேன்.

யாருமே கோப்பையைப் பற்றிக் கேட்கவில்லையே என்ற வருத்தத்துடன் அறைக்கு எடுத்துக்கொண்டு வந்து பரிசுக் கோப்பையை அலமாரியில் கம்பீரமாக நிறுத்தி வைத்தேன். தினமும் ரசித்தேன். கற்பனையில் மிதந்தேன்.

***

ஒருநாள் வாகினி ஸ்டூடியோவுக்குள் நடந்து போய்க்கொண்டு இருந்தேன். ஜகன்னாதன் என்கிற புரொடக்ஷன் மேனேஜர் என்னைப் பார்த்துவிட்டு ‘நாகேஷ்! வாகினியிலே தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப் போகிற காட்சியின் துவக்கத்தில், டேபிள்களை ஒரு சர்வர் துடைப்பது போல ஒரு ஷாட் இருக்கிறது. அந்த ஒரு சீனில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்? ஐந்நூறு ரூபாய் போதுமில்லையா?’ என்றார்.

நான் ‘சரி’ என்றேன். காத்திருக்கச் சொன்னார். அப்போது, நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவர் என் கவனத்தை ஈர்த்தார். வயதான மனிதர். அவர் வில் போல உடலை பின்னுக்கு வளைத்து, நடந்து போய்க்கொண்டு இருந்தார். அவரது கையில் ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும்தான் இருந்தது.

என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா? கிடுகிடுவென்று அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, ‘ரொம்பக் கஷ்டப்பட்டு சிகரெட் பெட்டியைத் தூக்கிட்டுப் போறாப்போல இருக்கு. என்கிட்ட வேணும்னா கொடுங்க. நான் எடுத்துக்கிட்டு வரேன்!’ என்றேன்.

அவர், ‘ஹ… ஹ…’ என்று சுருக்கமாகச் சிரித்து விட்டு, தன் பின்னோக்கிய வில் நடையைத் தொடர்ந்தார்.

சிறிது நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன். ஜகன்னாதன் ‘ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.

நான் ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டுக் கொண்டேன். தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக்கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு தம்ளரை மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளைச் சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வந்ததும் கீழே வந்த டம்ளரை லாகவமாகப் பக்கெட்டில் பிடித்துக்கொண்டேன்.
‘சபாஷ்! ரொம்ப நல்லா பண்ணறியேப்பா!’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் பேரதிர்ச்சி! நான் சற்று முன், செட்டுக்கு வெளியே நடையைக் கேலி பண்ணினேனே அதே மனிதர்! வாகினி ஸ்டூடியோவின் அதிபரான சக்ரபாணி!

‘சார்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீங்க நடந்து வந்துக்கிட்டிருந்தபோது யாருன்னு தெரியாம உங்களைக் கிண்டல் பண்ணிட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க’ என்று காலில் விழாத குறையாக அவரைக் கெஞ்சினேன்.

‘அதை நான் எப்பவோ மறந்தாச்சு! நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே!’ என்றவர், அடுத்தபடியாக, ‘உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?’ என்று கேட்டார்.

‘ஐந்நூறு ரூபாய்!’

‘தமிழ்ல நடிக்கத்தானே ஐந்நூறு பேசியிருக்கு? நீயே தெலுங்குலயும், இந்த சீனைப் பண்ணிடு. இரண்டுத்துக்குமா சேர்த்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கோ’ என்றார்.

எனக்கு நடப்பது எல்லாம் கனவா? நிஜமா என்ற சந்தேகமே வந்து விட்டது.

தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜகன்னாதனைக் கூப்பிட்டு, ஆயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிக்கொண்டு வரச் சொன்னார்.

நான், ‘சார்! சார்! செக்கெல்லாம் வேணாம்’ என்றேன்.

என்னைப் பார்த்துச் சிரித்தபடி, ‘வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது. பயப்படாதே!’ என்றார்.

‘அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால, கேஷா கொடுத்தீங்கன்னா ரொம்ப சௌகரியமா இருக்கும்’ என்றேன்.

‘அப்படியா! சரி!’ என்று சொல்லி விட்டு, ஜகன்னாதனிடம், ‘காரில் இவரை அழைச்சுக்கிட்டு நேரே பாங்குக்குப் போய், செக்கைப் பணமா மாத்தி இவரிடம் கொடுத்து விட்டு, இவரையும் அவரது இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விடு!’ என்றார்.

அந்த ஆயிரம் ரூபாயை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில்தான் ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பாண்ட் மூன்றும் வாங்கிக்கொண்டு நான் காதலித்த ரெஜினாவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டேன்.

***

நடிகர் நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள், கல்கியில் சிரித்து வாழ வேண்டும் என்ற பெயரில் தொடராக வெளிவந்தது. எழுதியவர் எஸ். சந்திரமௌலி. தற்போது ‘நான் நாகேஷ்’ என்ற பெயரில் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., வாசன், சிவாஜி, திருவிளையாடல், கமல்ஹாசன் (கமா, கமா போட்டு இன்னும் சேர்க்கலாம்) என்று தன் வாழ்வின் மறக்கமுடியாத மனிதர்களையும் சம்பவங்களையும் நாகேஷ் இதில் பிரத்யேகமாக நினைவுகூர்கிறார். இதுவரை நாம் சந்தித்திராத ஒரு புதிய நாகேஷ் இந்த அனுபவங்களின் வாயிலாக உருப்பெற்று நிற்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் புத்தகம், தமிழ் சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத பொக்கிஷம்.

கழுதைப்பால் கட்டழகி!

மொத்தம் எழுநூறு கழுதைகள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி ‘தொழுவம்’ இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.

காலம் காலமாக கிளியோபட்ரா குறித்து சொல்லப்பட்டு வரும் சம்பவம் இது.  சமீபத்தில் ஹலோ எஃப்.எம்மில் புத்தகக் கண்காட்சி புதுவரவுகள் குறித்து பேட்டி கொடுத்த பாரா, ‘கிளியோபாட்ரா புத்தகம்’ வெளிவருவதாகச் சொன்னார். உடனே ஆர்ஜே (மிஸ்டர்) பாலாஜி கேட்ட கேள்வி, ‘கிளியோபாட்ரா கழுதைப்பால்ல குளிப்பாங்கன்னு சொல்றது நிஜமா?’

கிளியோபாட்ரா என்றாலே பலரது மனத்தில் தோன்றும் அடுத்த வார்த்தை ‘கழுதைப்பால்.’ அப்படி என்னதான் இருக்கிறது கழுதைப்பாலில்?

கிட்டத்தட்ட மனிதனின் தாய்ப்பாலுக்குச் சமமானது கழுதைப்பால். லாக்டோஸ் அதிகமுண்டு, பசும்பாலைவிட கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துக்கும் பல்வேறு விதங்களில் உபயோகிப்படுத்தி இருக்கிறார்கள். அழகுக் குறிப்புகளும் கொடுக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வரவே வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். வெண்மை நிறம் மிளிரும். ஒரு நாளில் ஏழுமுறை கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் என்றென்றைக்கும் புத்துணர்வுடன் இருக்கும்.

கி.பி. 30 முதல் 65 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி), கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காகக் கையுடனேயே அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. இருக்கட்டும், கிளியோபட்ரா? அந்த விஷயத்துக்கு அப்புறமாக வருவோம்.

எகிப்தியர்களுக்குக் காலை எழுந்தவுடன் குளிக்கும் வழக்கம் இருந்ததில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு, வெயில் விடைபெறும் வேளையில் மாலைக் குளியல் போட்டிருக்கிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனையில் இளவரசியாக சகல வசதிகளுடன் வளர்ந்துவந்த கிளியோபட்ராவும் அந்த வழக்கத்தைத்தான் கடைபிடித்திருக்கிறாள்.

அரண்மனைக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளியல் தொட்டிகள் இருந்தன. வெந்நீர்க் குளியலுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கிளியோபாட்ரா ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்தாள். உடல் தேய்த்துக் குளிக்க, வளைவான தகடு (Strigil) ஒன்றை உபயோகப்படுத்தினாள். குளியலை முடிக்க குறைந்தது இரு மணி நேரம் பிடிக்கும்.

கிளியோபாட்ரா உபயோகப்படுத்திய இன்னொரு முக்கியமான அழகுப் பொருள் மருதாணி. கூந்தலில், கைவிரல்களில், பாதங்களில் மருதாணி உபயோகப்படுத்தினாள். தவிர முகத்துக்கான இயற்கை கிரீம்கள், கண்ணுக்கான மை, உதட்டுக்கான சாயம், முகப் பொலிவுக்கான பூச்சுகள், வாசனைக்கான திரவியங்கள் – எல்லாமே உபயோகப்படுத்தியிருக்கிறாள்.

படுத்திக் கொள்ளட்டும். அவள் பொன்வண்டு சோப்பு வேண்டுமானாலும் தேய்த்துக் குளித்திருக்கட்டும். அதெல்லாம் விஷயமே இல்லை. கழுதைப்பாலில் குளித்தாளா?

சான்றுகள் எதுவும் இல்லை. எகிப்தில், கிரீஸில், ரோமில் வாழ்ந்த உயர்குடிப் பெண்கள் எல்லோருமே பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அந்த விதத்தில் கிளியோபாட்ராவும் பாலிலோ, கழுதைப் பாலிலோ (ஆரோக்யா நாலரை பாலிலோ) குளித்திருக்கலாம். இதில் கவனிக்கப்பட (சந்தோஷப்பட) வேண்டிய விஷயம் எகிப்தியர்களுக்குத் தினமும் குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதுதான்.

கழுதைப்பாலைத் தாண்டியும் கிளியோபாட்ரா பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவளது பிறப்பு முதல், அவள் பேரழகியா, நல்லவளா, இனவெறி பிடித்தவளா, தற்கொலை செய்துகொண்டாளா என்பதுவரை ஏகப்பட்ட சர்ச்சைகள் நிறைந்து கிடக்கின்றன. கிளியோபாட்ரா குறித்து ஏற்கெனவே பலவிதமான தகவல்கள் சேகரித்து வைத்திருந்தேன். 2010ல் அவள் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். எழுதி முடித்தேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்பாகவே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிவிக்கக் ‘கடாமைப்பட்டிருக்கிறேன்.’ (ஆதாரம் : பாரா – http://www.writerpara.com/paper/?p=1786 பத்ரி – http://thoughtsintamil.blogspot.com/2011/01/3.html)

கிளியோபாட்ரா, சென்னை புத்தகக் கண்காட்சி கிழக்கு ஸ்டாலில் (F13, F14, F15) கிடைக்கும். ஆன்லைனில் வாங்க.

எம்.ஆர். ராதாவின் ராவணன்

காமவல்லி (சூர்ப்பநகை) : யாரையா நீர்?
ராமன் : நான்.. நான்.. பெரிய வீரன்
கா.வ.: (சிரித்துக்கொண்டே) அதுதான் தெரியுதே நீ வில் பிடித்திருக்கிற லட்சணத்திலிருந்தே! (ராமன் வில்லைச் சரியாகப் பிடித்துக் கொள்கிறான்.)
ராம : நான் பெரிய அரசகுமாரன். எனக்கு இன்னும் (கழுத்தைக் காட்டி) அது… ஆகலே, அதுக்காக…
கா.வ.: ஏய் மரியாதையாகப் பேசு, நான் இந்த மண்டலத்து அரசப் பிரதிநிதி காமவல்லி. இப்பவாவது இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு. உம்…
ராம : நான் யார் தெரியுமா? ராமன்! தசரத மைந்தன். அயோத்திக்கே அரசனாக வேண்டியவன். நமது விவாகம் முடிந்ததும் பட்டம் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
கா.வ.: (திகைத்து) ராமனா? நீ மணமானவன். மரியாதையாகப் போய்விடு. உனது ஆரிய அடாத வழக்கம் தமிழகத்தில் செல்லாது.
ராம : ஆரியர் வழக்கம்தான் ஆசைப்பட்டால் ஐந்து தாரங்களை மணக்கலாமே. அரசீ! அடியேனை உன் அன்பனாக ஏற்றுக்கொள்; அடிமையாக வாழ்கிறேன். கண்ணே உன்னைக் கண்டதுமே காதல்…
கா.வ.: காதல்! காமத்துக்கும் காதலுக்கும் வேறுபாடு தெரியாத கயவனே, என் நாட்டில் புகுந்ததுமல்லாது தகாத வார்த்தைகள் வேறு பேசுகிறாயா?
ராம : பொறுமைக்கும் அளவுண்டு… பொன்மானே!
கா.வ.: நீ எருமை
ராம : நான் ஆண்.. ஆரியன்!
கா.வ.: அசல் கோழை!
ராம : நீ தனிமையில் இருக்கிறாய்.
கா.வ.: நான் தமிழச்சி! தற்காக்கும் திறன் எனக்குண்டு.
ராம : உன்னை அடையாது விடமாட்டேன். (தாவிப் பிடிக்கிறான்)
கா.வ.: உதை வாங்காது போகமாட்டாய் போலிருக்கிறது. (எட்டி உதைக்கிறாள். ராமன் கத்துகிறான்.)
ராம : தம்பி லட்சுமணா ஓடிவாயேன். அந்த அசுரச் சிறுக்கி என்னை அடிச்சுட்டுப் போராளே, அவளை உருக்குலைத்து விடேன்; அவள் செருக்கு குலையட்டுமே; தம்பி.. தம்பி… (லட்சுமணன் ஓடிவந்து காமவல்லியைத் தடுக்கிறான்.)
லட்சுமணன் : ஏய் தடிச்சிறுக்கி! எனது தமையனைத் தள்ளிவிட்டா போகிறாய், நில்லடி…
கா.வ.: மானத்தை விட்டவனே, மரியாதையாகப் பேசு.
(இருவருக்கும் ஏற்பட்ட வாள் சண்டையில் லட்சுமணன் அவளது மூக்கையும் காதையும் வெட்டிவிடுகிறான்.)
கா.வ.: அய்யோ, அண்ணா! போய்விட்டதே தமிழன் பெருமை! ஆரியன் என்னை அவமானப்படுத்தி விட்டானே!
(காமவல்லி அங்கிருந்து அலறி ஓடுகிறாள். தான் சந்திக்கும் கரன், தூஷ்ணனிடம் ராமனும் லட்சுமணும் தனக்கு செய்த அவமானங்களைச் சொல்லிக் கதறுகிறாள்.
கா.வ.: என் அண்ணன் தென்னிலங்கை இறைவனிடம் இதைக் கூறுங்கள், பழிக்குப் பழி வாங்காது விடாதீர்கள். அய்யோ அண்ணா! (சாகிறாள்.)

**
மானைப் பிடிக்கச் சென்றிருக்கிறான் ராமன். சீதைக்குக் காவலிருக்கிறான் லட்சுமணன். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, லட்சுமணன் அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது அங்கு வரும் ராவணனை சீதை வரவேற்கிறாள்.)

ராவணன் : பாழ் வெளியிலே பளிங்கு மண்டபம்.
சீதை : ஆமாம்… எங்கள் பர்ணகசாலை.
ராவ : இல்லை உன் உருவம். பேரழகி, நீ யாரோ?
சீதை : ஆரிய குலம்… ஜானகி என்பது நாமம்.
ராவ : ஜானகி… ராமனின் மனைவி.
சீதை : ஆமாம்.
ராவ : அழகின் அவதாரம்; உன் அங்கங்கள் அவற்றின் அமைப்புக்கே எடுத்துக்காட்டு!
சீதை : பெரியவரே! உங்கள் பிரியமொழிகள் என் செவியில் இன்ப கீதமாய் ஒலிக்கின்றன. உங்கள் மொழிதான் எவ்வளவு இனிமையானது!
ராவ : வேதனையோடு வந்திருக்கிறேன்… வேல்விழி…
சீதை : அதிதிக்கு உபசாரம் செய்ய அடியாள் காத்திருக்கிறேன் ஸ்வாமி; அன்போது உரையாடும் தாங்கள் யாரோ?
ராவ : நான் இலங்கையின் வேந்தன்… ராவணன்.
சீதை : (திடுக்கிட்டு) ராவணன்! ராட்சதன்!
ராவ : என்று மூடர்கள் சொல்லுவார்கள், நான் மனிதன்… மறத்தமிழர் மன்னன்.
சீதை : (நடுங்கிக்கொண்டே) காமவல்லியின் அண்ணன்.
ராவ : ஆமாம்.
சீதை : அய்யோ, மோசம் வந்துவிட்டதே, நாதா! லட்சுமணா! மாபெரும் பழியைத் தேடிக் கொண்டேனே!
ராவ : பிதற்றாதே பெண்ணே! உன்னைச் சேர்ந்தவர்களைப் போன்ற நிர்மூடன் அல்ல நானும் உன் அங்கங்களைச் சிதைக்க.
சீதை : ஏன் இங்கு வந்தாய் நான் தனிமையாக இருக்கும்போது?
ராவ : தகாத வேலை செய்த உன் கணவனுக்கு புத்தி கற்பிக்க.
சீதை : அதற்கு அவரிடம் போ.
ராவ : இல்லை, அவன் வரவேண்டும் என்னிடம்.
சீதை : அதற்காக.
ராவ : உன்னைச் சிறை செய்யப் போகிறேன்.
சீதை : அது அநீதி! (கத்துகிறாள்)
ராவ : இல்லை; அரச மரபு.
சீதை : நான் ஒரு பாவமும் அறியாதவள்.
ராவ : நீ பாவிகளின் மனைவி. என் தங்கையின் அங்கங்கள் சிதைக்கப்படுவது கண்டும்; நீ ஒரு பெண்ணாக இருந்தும் வாளாவிருந்தாய். அந்த ஒரு குற்றத்துக்காகவே உன்னைச் சித்திரவதைகூடச் செய்யலாம். ஆனால், நான் தண்டிக்க விரும்புவது உன்னை அல்ல; உன் கணவனை.
சீதை : அதற்கு?
ராவ : நீ ஒரு கருவி. வா, வந்துவிடு என்னோடு. (நெருங்கிப் பிடிக்கிறான். சீதை அலறுகிறாள்.)
சீதை : வேண்டாம்! என்னை விட்டுவிடு.
ராவ : விட்டுவிடலாம். அதனால் அந்த மட்ட ரகங்களுக்குப் புத்தி வந்துவிடாது. உம் வந்துவிடு.
(அவளது கூந்தலை ஒரு கையிலும் துடைகளை மற்றொரு கையாலும் பிடித்துத் தூக்கித் தன் மடியிலே வைத்துக்கொண்டு தேரிலே ஏறிப்போகிறான்.)

***

தன் படத்தில் ராவணனை நல்லவனாகக் காட்டுகிறார் மணிரத்னம் என்ற பேச்சு பரவலாக இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு முன்பே ஆர். எஸ். மனோகர் தனது லங்கேஸ்வரன் நாடகத்தில் அசல் ராவணனைக் காட்டியிருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் பெரியார், எம்.ஆர். ராதா. எழுத்தின் மூலம் பெரியார், தமிழர்களுக்கான ஒரிஜினல் ராமாயணத்தை உலகத்துக்குக் கொடுத்திருக்கிறார். எம்.ஆர். ராதா, தனது ராமாயணம் நாடகம் மூலம் செய்த பகுத்தறிவுப் புரட்சி மிரட்டலானது. எம்.ஆர்.ராதா, ராமன் கதாபாத்திரத்தில் நடித்த ராமாயணம் நாடகத்தில் இடம்பெற்ற இரண்டு காட்சிகளுக்கான வசனங்களைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.

நாடகத்தில் ராமனாக எம்.ஆர். ராதா (குனிந்திருப்பவர்)

நாடகத்தின் முழு வசனமும் என்னிடம் உள்ளது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக தகவல் திரட்டும்போது பெரியார் திடல் நூலகத்தில் எனக்கு இந்த நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடித்த, எம்.ஆர். ராதாவின் நாடகக்குழுவில் இருந்த சிலரோடு பேசியிருக்கிறேன். அவர்களது அனுபவங்களையும் என் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். ராதா நடித்து அந்த நாடகத்தைப் பார்க்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. ராதாவின் நாடகம் You Tubeல் கிடைத்தால் எப்படி இருக்கும்!

***

நாடகம் குறித்து அண்ணாதுரை

நடிகவேள் இராதா நடத்தும் ‘இராமாயணம்’ நாட்டிலே இன்று ஏற்பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை மெருகளிப்பதாகக் கூறிக்கொண்டு, கம்பன் தமிழகத்தாருக்கு கரைபடிந்த காவியத்தை தந்து சென்றான். அதன் பயனாக இராமாயணம் தேவகதை ஆக்கப்பட்டது. இன்று நடைபெற்று வரும் ‘கலாச்சாரப் போரின்’ விளைவாக, ஆரிய காவியங்களின் உண்மைகளும் தன்மைகளும் விளக்கப்பட்டு வருகின்றன.

குத்தூசி எஸ். குருசாமி

வடநாட்டில் இராவணனைப் போன்ற உருவத்தைச் செய்து தீயிட்டுக் கொழுத்துகின்றனர். அதுபோல தென்னாட்டில் தமிழகத்தில் ஆரிய இராமனைப் போன்ற உருவஞ்செய்து கொழுத்தப்படும் நிலையை உண்டாக்க வேண்டும். தமிழன் வீட்டில் இராமன் படம் இருத்தல் கூடாது. இராமன் தமிழ் இனத்தின் எதிரி என்பதை உணர வேண்டும். இதுவே இந்நாடகத்தின் இலட்சியம்.

பெரியார்

நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிகையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது இராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக் கருத்துக்களையே தழுவி நாடக ரூபமாக்கி நடிக்க முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வி. எஸ். சந்தானம் அய்யங்கார்

நண்பர் இராதா அவர்கள் நடத்தும் இராமாயணத்தைப் பார்க்கா ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன். பலர் சாஸ்திரத்துக்கு முரண்பாடாய் இருப்பதாக என் நண்பர்கள் சிலர் சொல்ல கேள்வியுற்றேன். அப்படி நினைப்பவர்கள் சாஸ்திர ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்களென்பது திண்ணம். தற்காலம் இராதா அவர்கள் விபரமாக உண்மையை (இராமாயணம்) எடுத்துக் காட்டுகிறார்கள். இதை எவ்விதத்திலும் முறை தவறுதல் என்று பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் கூற ஞாயமில்லை.

தேசிய விருது

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளிக்கிறது.

இதில் இந்த ஆண்டு, புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது என்ற பிரிவின்கீழ் எழுத்தாளர் என். ராமதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக இந்தத் துறையில் அனைத்து மொழிகளும் சேர்த்து ஒருவருக்கு மட்டும்தான் இந்த விருது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

கிழக்கு, பிராடிஜி என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக இந்த தேசிய விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி. கடினமான விஷயங்களை எளிய தமிழில் எழுதுவது எப்படி என்று ராமதுரையிடம்தான் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிக்காக ‘அணு – அதிசயம், அற்புதம், அபாயம்’ புத்தகம் குறித்து ராமதுரை பேசினார். 50 நிமிடங்கள் அணு குறித்து இத்தனை சுவாரசியமான பேச்சை கேட்டிருக்கவே முடியாது. ராமதுரை போன்ற ஒருவர் எனக்கு பள்ளி, கல்லூரியில் அறிவியல் சொல்லிக் கொடுத்திருந்தால் அது இனித்திருக்கலாம்.

ராமதுரை பேசிய நிகழ்ச்சியைக் கேட்க & டௌன்லோட் செய்ய.

ராமதுரையின் புத்தகங்கள் வாங்க.

சலூனில் கலைஞர்!

வார நாள்களில் கூட்டம் அதிகம் இருக்காது அல்லது கூட்டமே இருக்காது என்ற நினைப்பில் நேற்று காலை (வியாழன்) சலூனுக்குச் சென்றேன். நினைப்பில் முடி விழவில்லை.

எனக்கு வழக்கமாக முடி வெட்டி விடும் அண்ணன் ஒருவருக்கு முடிவெட்டிக் கொண்டு இருந்தார். வேறு யாரும் இல்லை. குமுதத்தைப் புரட்ட ஆரம்பித்தேன். விமரிசனத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையை டர்…

அண்ணனைப் பார்த்தேன். அந்த நபருக்கு அப்போதுதான் வெட்ட ஆரம்பித்திருப்பார் போல. அண்ணன் அசையாமல் நிற்பார். வேலை செய்வதுபோலவே தெரியாது. ஆனால் அவரது விரல்களின் வேகம் அலாதியாக இருக்கும். மின்சாரக் கனவு பிரபுதேவா போல சினிமாத்தனமாகவெல்லாம் இருக்காது. கட்டிங் என்றால் எந்தத் ‘தல’க்கும் பத்தே நிமிடங்கள்தான்.

டீவி ஓடிக் கொண்டிருந்தது. இந்தியா தென் ஆப்ரிக்கா இரண்டாவது டெஸ்ட் மேட்ச் ஐந்தாவது நாள். அம்லாவின் அஸ்திவாரத்தைத் தகர்க்க, நாக்கு தள்ள ஓடிவந்து முயற்சி செய்து கொண்டிருந்தார் இஷாந்த் சர்மா. இருவரையுமே சலூனுக்கு அழைக்கலாம் என்று தோன்றியது.

சலூனுக்குள் ஒருவர் நுழைந்தார். கையில் டிஃபன் பார்சல். உள்ளே கொண்டுபோய் வைத்தார். ‘பொங்கல் வாங்கியிருக்கேன்’ என்றார் அண்ணனிடம். ‘நீங்க வாங்க உக்காருங்க’ என்றார் என்னிடம். தொடர்ந்து ‘ஏவ்வ்வ்’ என்று அடிவயிற்றில் இருந்து அசுர ஏப்பம் வேறு.

கடைக்குப் புதியவர் போல. அதென்னவோ, சில விஷயங்களில் மாற்றத்தைச் சட்டென்று மனம் ஏற்றுக் கொள்ளாதல்லவா. யோசித்தேன். பின் (பாரா ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால்) ‘கேச’வ பெருமாளை மனமார வேண்டிக் கொண்டு, தலையைக் கொடுத்தேன். அவர் என் சட்டை மேல் பட்டனைக் கழற்றி, துணி சுற்றவே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். சுற்றிய துணியை உருவி மேலும் சிலமுறை சுற்றிப் பார்த்துக் கொண்டார்.  ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ எனக்குள்ளே ஈனஸ்வரத்தில் யாரோ பாடினார்கள்.

செடிக்கு பூச்சி மருந்து அடிப்பதுபோல தண்ணீரை ஸ்பிரே செய்தார். அதுவும் சில நிமிடங்களுக்கு. ஷாம்பு வாங்கிக் கொடுத்தால் குளிப்பாட்டி விட்டிருப்பார். டிராயரை நிதானமாகத் திறந்து கத்திரிக்கோலுக்கு வலிக்காமல் எடுத்தார். நான்கைந்து சீப்புகளையும் எடுத்துவைத்தார். ஒவ்வொன்றாகப் பார்த்தார். மனத்துக்குள் இங்கி பிங்கி பாங்கி சொல்லியிருப்பார்போல. கடைசியாக ஒரு சீப்பைத் தேர்ந்தெடுத்து கத்திரிக்கோலையும் கையில் எடுத்துக் கொண்டார். சிலமுறை 360 டிகிரி என்னைச் சுற்றி வந்தார். எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம்போல. பின் மண்டையிலிருந்தே ஆரம்பித்தார். சோதனைச் சாலை எலிகள் என் தலையில் ஊர்வதுபோல தெரிந்தது.

மயிரே போச்சு என்று விட்டுவிட முடியாதே, எல்லை மீறினால் காப்பாற்ற அண்ணன் வருவாரா என்று ஓரக்கண்ணால் நோக்கினேன். அண்ணன் கஸ்டமரை அனுப்பிவிட்டு, பொங்கலைக் கவனிக்கப் போயிருந்தார்.

என்னவர், பக்கத்து தெரு கடையில் சென்று பொங்கல் வாங்கி வந்த உப்புச் சப்பற்ற கதையை பேச ஆரம்பித்தார். மேட்சில் விக்கெட்டும் விழவில்லை. நானே விக்கெட் ஆகிவிடுவேனோ என்ற பயம் எனக்கு.

‘நேத்து ஒரு கண்ணால வூட்டுக்குப் போயிருந்தேன். பெர்சா பந்தியெல்லாம் போட்டு சாப்பாடு போட்டானுக. ஒரு சோறு ஒரு சாம்பாரு ஒரு வத்தக்குழம்பு ஒரு ரசம்னு துன்னாத்தானே நமக்கு திருப்தியா இருக்கும். ஊத்தப்பம் வைக்கிறானுக, சுண்டு விரலு சைஸுல ஸ்வீட்டு வைக்கிறானுக. என்னென்னமோ வைக்கிறானுக. துன்ன மாதிரியே இல்ல. சப்ளைக்கு எல்லாம் பொண்ணுங்க. ஒரு ஆம்பிள கெடயாது. பாதி பேரு துன்னவே மாட்டேங்கிறான். ஜொள்ளு வுட்டுக்கினு கெடக்கிறான்.’

அண்ணன் பொங்கல் வாயோடு செய்தி சொன்னார். என்னவர் பின்பக்கம் இருந்தபடியே முன்பக்க முடியை பிடித்து இழுத்து (ஸ்கேல் இருந்தால் அளந்து அளந்து வெட்டுவார்போல) ஒரு தினுசாக கத்தரிக்க ஆரம்பித்தார். அசம்பாவிதம் ஏதும் நேர்ந்துவிட்டால் எப்படி வெளியில் ‘தலை காட்டுவது’ என்று எனக்குள் ஏக பயம்.

கட்டிங்கே கால்வாசிகூட முடியாத நிலையில் ‘ஸார் ஷேவிங் பண்ணனுமா?’ என்றார் என்னவர். வேண்டாம் என்றேன் வேகமாக. ‘நீங்களே செஞ்சுக்குவீங்களா?’ என்றார். ஆமாம் என்றேன். ‘இன்னைக்கே பண்ணுவீங்களா?’ என்றார். பொறுமையாக ‘ம்’ என்றேன். கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் ஓடியிருந்தன.

பாதிவேலை முடிந்த நிலையில் என்மேல் போர்த்திருந்த துணியை உருவினார். ‘இன்னும் முடியலையே’ என்று பதறினேன். ‘இருங்க சார்’ என்று விலகிச் சென்றவர், துணியை உதறிவிட்டு மீண்டும் வந்து போர்த்திவிட்டு வேலையைத் தொடர்ந்தார். இண்டர்வெல்போல.

‘நீங்க இந்த ஏரியாவா?’ கேட்டார் என்னவர்.

‘ம்’

‘எங்க?’

‘பக்கத்துல லெவன்த் அவென்யூ’

‘கலைஞர் டீவி கொடுக்கறார். வாங்கலையா?’

‘கலைஞரே வந்து கொடுக்குறாரா?’

‘ஹிஹி.. இந்த ஏரியாவுல ரேஷன் கார்டு இருக்கறவங்களுக்கெல்லாம் இன்னிக்கு கொடுக்கறாங்க.’

‘என்கிட்ட இல்ல.’

கட்டிங்கை முடிக்கும் நிலைக்கு வந்தார் என்னவர். கோடை வருகிறதல்லவா. இன்னும் கொஞ்சம் வெட்டச் சொல்லலாம் என்று நினைத்தேன். பயமாகவும் இருந்தது. இதுவரை விபத்து இல்லை. இனி நேர்ந்துவிட்டால்?

‘இன்னும் கொஞ்சம் வெட்டாலாம்பா’ – அண்ணனின் குரல் கொடுத்தார். மீண்டும் கத்திரிக்கோல் சோம்பல் முறித்தது. 45 நிமிடங்கள் நகர்ந்திருந்தன.

கத்தி போட ஆரம்பித்தார். கழுத்தருகே வரும்போது இதுவரை உயில் எழுதவில்லையே என்ற கவலை தோன்றியது. அதிலும் தப்பித்துவிட்டேன்.

எழுந்துகொள்ளலாம் என்ற நிலையில் அண்ணன் விடவில்லை. ‘மீசையை டிரிம் பண்ணி விடுப்பா?’

தில்லு முல்லு தில்லு முல்லு பாடல் எனக்குள் ஒலித்தது. வேண்டாம் என்று அவசரமாகச் சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன். என்னவர் விடவில்லை. நான் நகர நகர ‘நில்லுங்க சார்’ என்று என் மேல் ஒட்டியிருந்த ‘ரோம சாம்ராஜ்யத்தை’ தட்டிவிட்டுக் கொண்டே வந்தார்.

அப்பார்ட்மெண்ட் வாசலுக்குள் நுழைந்தேன். இரண்டு ஆட்டோக்களும் நுழைந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டுரண்டு கலர் டீவி பெட்டிகள்.

மூன்று பெண்மணிகள் கிளம்பித் தயாராக நின்றார்கள். ‘என்ன ஆன்ட்டி நீங்க டீவி வாங்கப் போகலியா?’

‘கால் டாக்ஸி சொல்லிருக்கோம். வெயிட்டிங்!’