கலியுகம் பாடல்கள் – சிறு அறிமுகம்

மூன்று இசையமைப்பாளர்கள், ஐந்து பாடல்கள், கலியுகம் திரைப்படத்தின் பாடல்கள் புதனன்று வெளியாகின. விழாவில் மூன்று பாடல்கள், இரண்டு டிரைலர்கள் திரையிடப்பட்டன. பாடல்கள் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பாடல்கள் குறித்த அறிமுகம் இங்கே.

# ஏடாகூடா ஆசை…

குத்துப் பாடல்கள் மட்டுமல்ல, தன்னால் இளமை பொங்கும் பாடல்களையும் எழுத முடியும் என்று நிரூபிக்க, (ஈசன் ஜில்லாவிட்டு புகழ்) மோகன்ராஜனுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு இந்தப் பாடல். இசை சித்தார்த் விபின். துள்ளலான பாடல். பண்பலை வானொலிகள் அடிக்கடி ஒலிபரப்பினால் இளைஞர்களைக் கவரும் வாய்ப்புள்ளது.

# அஜல உஜல

சென்னை மண்ணின் இலக்கியமான ‘கானா’வை இதுவரை சினிமா பயன்படுத்தியிருக்கும் விதம் வேறு. அதாவது சினிமா பாடல்களைத்தான் ‘கானா’ பாடல்களாக மற்ற ஊர்க்காரர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல், ‘மரண கானா விஜி’யின் புகழ்பெற்ற கானா பாடலான ‘அஜல உஜல’வையும், அவரது மற்ற சில கானா பாடல்களையும் கலந்து கானாவின் வடிவம் சிதையாமல் சினிமா ட்யூன் ஆக்கியிருக்கிறார்கள். இசை அருணகிரி. மரண கானா விஜியின் குரலில் இந்தப் பாடல் நிச்சயம் ஒரு ரவுண்ட் வரும் என எதிர்பார்க்கிறேன்.

# சிரபுஞ்சி சாலையிலே…

படத்தில் வரும் ஒரே காதல் பாடல் இதுதான். வரிகள் தாமரை. இசை தாஜ்நூர். குரல் ஹரிச்சரண். ஆந்திராவின் கடப்பாவில் கண்டிக்கோட்டாவில் படமாக்கியிருக்கிறார்கள். கேமராமேன் S.R. கதிர் புகுந்து விளையாடி இருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலைத் திரையிட்ட போது ‘விஷுவல்ஸ் பிரமாதம்’ என்று கமெண்ட்டுகள் குவிந்தன. மெலடி பாடலான இது, நிச்சயம் மியுஸிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று நம்புகிறேன்.

# ஏனோ ஏனோ

உன்னைப் போல் ஒருவனில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு பாடல் எழுதியிருந்ததாக செய்தி படித்த ஞாபகம். அதன்பின் கலியுகத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘மனுஷ்யபுத்திரன், தனிமையை அதன் வலியைத் தனது கவிதைகளில் பிரமாதமாக வெளிப்படுத்துவார். இந்தப் பாடலும் அப்படிப்பட்ட வலியை வெளிப்படுத்துவதுதான். அதனால் அவரை எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்’ – இது இயக்குநர் யுவராஜ், இசை வெளியீட்டு விழாவில் சொன்ன தகவல். பாடலைப் பாடியிருப்பவர் ராகுல் நம்பியார். இசை தாஜ்நூர்.

# வெண்ணையில…

படத்தில் இது மிகவும் ஸ்பெஷலான பாடல். இந்த பூமியே ஏங்கி, ரசித்துக் காதலித்த ஒரு பெண்ணின், பேரழகியின், நல்ல மனுஷியின் புகழ்பாடும் விதமாக இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண் சில்க் ஸ்மிதா. நாற்பது வயதுக்காரன் ஒருவனுக்கு இன்னமும் சில்க் தன்னுடன் வாழ்ந்து வருவதாகதே நினைப்பு. அவன் தான் ரசிக்கும் சில்க்கை, அவள் அழகை, அவள் வாழ்ந்த வாழ்க்கையைப் பாடும் பாடல் இது. வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலைத் திரையிட்டு முடித்தபின் ஏகப்பட்ட கைதட்டல். எல்லாம் சில்க்குக்குக் கிடைத்த மரியாதை. அந்த மனுஷிக்கு கலியுகம் டீம் செய்யும் மரியாதை. கடந்த இரு தினங்களில் தொலைபேசியில் பேசிய நண்பர்கள் எல்லாம் இந்தப் பாடலைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இசை சித்தார்த் விபின். பாடியவர் முகேஷ். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் மோகன்ராஜன்.

பூமியே காதலிச்ச பொம்பளை மேல

நான் ஆசை வெச்சேனே ராமனைப் போல

சாமியே சைட் அடிச்ச கண்களினாலே

நான் தொலைஞ்சு போனேனடா…

இந்தப் பாடலில் சில்க்கின் கிளிப்பிங்ஸை பயன்படுத்தவில்லை. பதிலாக ஓவியர் இளையராஜா வரைந்த சில்க் ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். நிச்சயம் ரசிகர்கள் மனத்தில் நீங்காத பாடலாக இது நிலைத்திருக்கும்.

வழக்கம்போல இணையத்திலும் பாடல்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. பாடல்கள் குறித்த தங்கள் கருத்துகளுக்குக் காத்திருக்கிறேன்.

குறிப்பு : ‘கலியுகம் படத்தில் பாடல் எதுவும் எழுதியிருக்கிறாயா?’ என்று பலரும் விசாரிக்கிறீர்கள். நான் இந்தப் படத்தில் வசனம் மட்டுமே எழுதியிருக்கிறேன். ‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற படத்தில் மட்டுமே ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். அதன் பிறகு எந்தப் படத்திலும் பாடல் எழுதவில்லை. அடுத்தடுத்து வசனம், திரைக்கதை என கவனம் செலுத்தவே விருப்பம்.

 

கலியுகம்

கலியுகம்

கலியுகம் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படம். புதிய இயக்குநர், புதிய தயாரிப்பாளர், சில புதிய நடிகர்களுடன் நானும் புதிய வசனகர்த்தாவாக இதன் மூலம் அறிமுகம் ஆகிறேன்.

பதின்வயதில் ‘தவறான பாதைகள்’ மேல் ஒருவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை, அதனால் ஏற்படும் தடுமாற்றங்களை, இந்தச் சமூகம் எந்தவிதத்தில்லெல்லாம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை ஆழமாகச் சொல்லும் திரைப்படம். மிக எளிமையான, நேர்த்தியான திரைக்கதை. கதையோடு ஒட்டாத உபரிக் காட்சிகளோ, மிகைப்படுத்தப்பட்ட மசாலாத்தனங்களோ இல்லாத, கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு நகரும் சினிமா இது. அதற்காக, ‘இதுவரை நீங்கள் பார்த்திராத படம்’, ‘முற்றிலும் மாறுபட்ட சினிமா’, ‘உதாரண உலக மூவி’ என்றெல்லாம் ஜிகினா சேர்க்க விரும்பவில்லை.

அறிமுக இயக்குநர் யுவராஜ். திரைக்கதையைச் செதுக்குவதில் எழுத்தாளர்களின் பங்கும் அவசியம் என்று நம்புபவர். உருப்படியான கதைகள் கொண்ட சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர். இந்த சினிமாவில் பங்கெடுத்ததன் மூலம் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர். யுவராஜின் தந்தை வி. அழகப்பனை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’, ‘பூ மழை பொழியுது’ உள்பட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர். நடிகர் ராமராஜனை, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ திரைப்படம் மூலமாக திரையில் அறிமுகப்படுத்தியவர்.

வசனம் எழுதுவதைத் தாண்டியும், படத்தின் பல்வேறு நிலைகளில், பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுவும் அனுபவம் நிறைந்த முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு அமைந்ததை முக்கியமான விஷயமாகக் கருதுகிறேன். கலியுகத்தின் கேமராமேனான S.R. கதிர், சில முக்கியமான ஆலோசனைகள் சொல்லி எனக்கு உதவினார். ஒளிப்பதிவாளராக தனது அனுபவங்களுடன், படத்தின் தரத்தை மேம்படுத்தியிருப்பதில் கதிருக்கு முக்கியப் பங்குண்டு.

எடிட்டிங் கிஷோர், நடனம் தினேஷ் மாஸ்டர் என படத்துக்கு பலம் சேர்ப்பவர்கள் பட்டியல் நீளும். இசை மூன்று பேர். தாஜ்நூர், சித்தார்த் விபின், அருண். தாமரை, மனுஷ்யபுத்திரன், மோகன்ராஜ் – பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் குறித்து தனியே எழுதுகிறேன்.

படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் வினோத், ‘நந்தா’ சிறுவயது சூர்யாவாகவும், ‘நான் மகான் அல்ல’ – நான்கு இளைய வில்லன்களில் ஒருவராகவும் கவனம் ஈர்த்தவர். தவிர அஜய், சங்கர் என இரண்டு இளைஞர்கள் அறிமுகம் ஆகிறார்கள். கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் நீத்தி. தவிர, ‘ஆடுகளம்’ நரேன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘ஆரண்ய காண்டம்’ சோமு, மீனாள் என நடிப்பில் தனித்துவம் பெற்ற கலைஞர்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

A.V. விக்ரம் தயாரித்திருக்கும் கலியுகம் படத்தின் பாடல்கள் வரும் ஜூன் 20 (புதன்கிழமை), சென்னை பிரசாத் லேபில் காலை 10.30 மணி அளவில் வெளியிடப்படவிருக்கின்றன.

கலியுகம் மூலம் நான் சினிமாவுக்குள் இருந்து சினிமாவைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்த நண்பர் வாசுதேவனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

படம் குறித்த மேலும் தகவல்களுக்கு http://www.facebook.com/KaliyugamTheMovie

மாலை மலர் ஸ்பெஷல் எடிஸன்…

ப்ளஸ் டூ ரிசல்ட்… டென்த் ரிசல்ட்…

ஒன்பது மணிக்கே பொட்டிக்கடை வாசல்ல காத்திருப்போம். ஏஜெண்ட் அண்ணாச்சி சைக்கிள்ல வேகமா வந்து, கேரியர்ல இருந்துஅம்பது அறுபது பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு அடுத்த கடைக்கு ஓடுவாரு. மாலை மலர் ஸ்பெஷல் எடிஷன். பொட்டிக்கடைக்காரர் கையில காசைத் திணிச்சிட்டு, பேப்பரை வாங்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பொரட்டுவோம்.

அவ்ளோ நேரம் மனப்பாடமா இருந்த ரெஜிஸ்டர் நம்பரு, அப்பத்தான் மறந்துபோன மாதிரி இருக்கும். ‘தூத்துக்குடில பாருலே… நீ என்ன கோவில்பட்டிய வெச்சுக்கிட்டிருக்க…’ – நண்பன் பதறுவான். கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ‘தூத்துக்குடி’, அப்போது நம் கண்ணில் படாது.

ஒருவழியாக பேப்பரின் சகல பரிமாணங்களையும் ஆராய்ந்த பிறகு, தூத்துக்குடி கண்ணில் படும். ‘ஏலேய்… நானூத்து பத்தொம்பது சீரியலை மட்டும் காணல’ – பதட்டம் மேலும் தொடரும்.

சில நொடிகள் நெஞ்சு அடைப்பதுபோல தோன்றும் உணர்வுக்குப் பிறகு, ‘419’ல் தொடங்கும் சீரியல் எண் அகப்படும். ‘இந்தாருக்கு என் நம்பரு… நான் பாஸூ’ என்று குதூகலிப்பான் ஒரு நண்பன்.

‘எங்கிட்டுலே?’ – பதட்டம் அதிகமாகும்.

‘அந்தா.. கீழ பாருலே…’

419344…. கண்கள் தேடும். முந்நூறில் தேடும்போது, 42, 43க்குப் பிறகு 44 மட்டும் காணாமல் போனதாக ஒரு தோற்ற மயக்கம் சட்டென வந்து காணாமல் போகும். ‘நாப்பத்து நாலு… நானும் பாஸு’ – முகத்தில் சங்கமித்திருந்த பதட்டம், பரவசமாக உருமாறிக் கொண்டிருக்கும் தருணம் அது. இருந்தாலும் அது தூத்துக்குடிதானா, சீரியல் நம்பரை ஒழுங்காகப் பார்த்திருக்கிறோமா என்ற பயம் ஒருமுறை வந்துபோக, மீண்டும் ரிசல்டைச் சரி பார்ப்போம். நம் எண்ணைச் சுற்றி பேனாவால் வட்டமிடுவோம்.

‘நம்பர் நாப்பத்தேழு இல்லேல… நம்ம கிளாஸுல யாருலே அது… சுதர்ஸனா, சுடலையா?’

‘எனக்கு அடுத்து சுடலை, அப்புறம் சுதர்ஸன்… நாப்பத்தேழு சுரேஷ்ல… பாவம்… சைன்ஸ் அன்னிக்கு அவனுக்கு காய்ச்சல் வந்துருச்சுல்ல….’

கடையில் மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வீடுகளுக்குக் கிளம்புவோம். அப்பா, அம்மாக்களின் முகத்திலும் நம் முக பரவசம் பரவும். பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கெல்லாம் மிட்டாய் சப்ளை.

பாஸ் ஆயாச்சு. மார்க் என்ன வரும்? கொஞ்ச நேரத்திலேயே அடுத்தகட்ட டென்ஷன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும். அன்றிரவு தூக்கம் வராது. காலை எழுந்தவுடன், பரபரவெனக் கிளம்பி பள்ளிக்கு ஓடுவோம்.

ஒரு ஹால். ஹாலுக்கு வெளியிலிருந்து ஜன்னல் வழியாக மார்க்குகளைப் பார்க்கலாம். ஜன்னல் எப்போது திறக்கும் என காத்திருக்க வேண்டும். இதில் என்ன கொடுமை என்றால், மாணவர்களின் தலையைவிட ஜன்னல் உயரமானது. அது திறக்கப்பட்டவுடன், ஜன்னல் கம்பியைப் பிடித்து குரங்கு போல ஏறி, நெரிசலில் கீழே விழாமல்தான் மார்க்குகளைத் தேடிப் பிடித்துப் பார்க்க வேண்டும். அது தேர்வு எழுதுவதைவிட கஷ்டமான வேலை. ஒருவேளை இதன் மூலம் ‘வாழ்க்கைப் பாடம்’ எதையாவது உணர்த்துவதற்காக, பள்ளி நிர்வாகம் அந்த ஜன்னலைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்போல.

ஜன்னல் எப்போது திறக்கும்? நேரம் ஆக ஆக காதுக்குள் சம்பந்தமில்லாமல் ‘நிலை மாறும் உலகில்…’ பாடல் எல்லாம் கேட்கும். ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ என்று செந்தில் வந்து தைரியம் கொடுத்துச் செல்வார். ஜன்னல் வெளிப்பக்கமாகத் திறக்கப்பட்ட நொடியில் பலமானவர்கள் தாவி ஜன்னல் கம்பிகளை ஆக்கிரமிப்பார்கள்.

பல நிமிட தள்ளு முள்ளு போராட்டங்களுக்குப் பிறகு, மார்க்கை அறிந்து கொண்ட நிமிடத்தில் குறைந்தபட்சம் சட்டைப் பையாவது கிழிந்திருக்கும். அடுத்தவன் மார்க் என்ன என்ற விசாரிப்புகளில் அன்றைய பொழுது போகும். ஸ்டேட் பர்ஸ்ட் எவனாக இருந்தால் என்ன? ஸ்கூல் பர்ஸ்ட் பற்றியும் கவலையில்லை. கிளாஸ் பர்ஸ்ட் யார், வகுப்பில் என்னென்ன சப்ஜெட்டில் யார் யார் பர்ஸ்ட் என்ற விதமான புள்ளிவிவர ஆராய்ச்சியில் பொழுது கழியும்.

வேறென்ன சொல்ல… ‘அந்தக் காலத்துல நாங்கள்ளாம்…’னு நானும் பேச ஆரம்பிச்சுட்டேன். வயசாயிருச்சு போல!

கம்யூனிஸத்துக்குத் தடை!

‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற திரைப்படத்தில் நான் எழுதிய முதல் திரைப்படப் பாடலான ‘போகாமல் ஒருநாளும்’  என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. சென்ற வாரம் படத்தின் பாடல்கள் வெளியாயின. எனது பாடல் வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

படத்தின் இசையமைப்பாளர் கணேஷ் குமாருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். முதல் படம், ‘துள்ளித் திரிந்த காலம்.’ அதில் ‘ஜெயந்த்’ என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார். கணேஷ் குறித்த எனது பழைய பதிவு ஒன்று இங்கே.

ஏதோ செய்தாய் என்னை – படத்துக்காக ஜாலியான காலேஜ் பாடல் ஒன்று தேவைப்பட்டபோது கணேஷ் என்னை அழைத்தார். சற்றே சவாலான விஷயங்கள் எழுத வேண்டியிருந்தால் என்னை கணேஷ் அழைப்பது வழக்கம். ‘வழக்கமான பல்லவி, சரணம் பாணியில் பாடல் அமைய வேண்டாம். இந்தப் பாடலை நான் Reggae வடிவத்தில் கொடுக்கப் போகிறேன். நீங்கள் எழுதுங்கள். எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. மெட்டை பிறகு யோசித்துக் கொள்ளலாம்’ – கணேஷ் எனக்கு கட்டற்ற சுதந்தரம் வழங்கினார்.

அவர் சொன்ன Reggae பாடல் வடிவம் குறித்து அப்போதுதான் கேள்விப்பட்டேன். அது ஜமைக்காவைச் சேர்ந்த ஓர் இசை வடிவம் என்று தெரிந்துகொண்டேன். சில Reggae பாடல்களைக் கேட்கச் சொல்லி கணேஷ் பரிந்துரைத்தார். கேட்டேன். சில ஐடியாக்கள் தோன்றின. டைரக்டர் எல்வின், கணேஷ், நான் மூவரும் கலந்துரையாடினோம். ‘ஒரு கல்லூரியின் பல்வேறு இடங்களை, கல்லூரி வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை கேலியாக இரண்டிரண்டு வரிகளில் சொல்வதாகப் பாடலை அமைக்கலாம்’ என்று முடிவு செய்தோம்.

திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரைத் துணைக்கழைத்துக் கொண்டு, பழமொழிகள், பழைய பாடல்கள் உதவியுடன் வரிகளை எழுதினேன். மெட்டுக்குள் உட்கார வேண்டும், மீட்டர் இடிக்கக்கூடாது போன்ற சங்கடங்கள் இல்லாததால் எளிதாகவே பாடல் வரிகள் வந்து விழுந்தன. ஒரு சில திருத்தங்களுக்குப் பிறகு பாடல் என் தரப்பில் முழுமை பெற்றது. அதன்பின் கணேஷ்தான் அதனை இசையமைக்க மிகவும் மெனக்கிட்டிருக்க வேண்டும். பாடலின் Chorus-ஆக வரும் ஆங்கில வரிகளை, ஜார்ஜியனா எழுதினார்கள். இவர்கள், பாடகி ஷாலினியின் அம்மா என்பது தகவலுக்காக. படத்தில் வரும் ஒரு ஆங்கிலப் பாடலும் இவர்களது கைவண்ணமே.

கல்லூரி ஜாலி பாடலுக்கு நாங்கள் 2010ன் ஆரம்பத்தில் வைத்த பெயர் College Anthem. (அதாவது லவ் அன்தேம், சச்சின் அன்தேம் எல்லாம் வருவதற்கு முன்பாகவே தோன்றிய யோசனை இது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் மை லார்ட்! 😉 )

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கல்லூரிகளின் பெயரை எல்லாம் ராப் பாணியில் வேகமாக அடுக்கி, This is an anthem for every college என்று சொல்லிவிட்டு பாடலுக்குள் செல்லலாம் என்பது என் யோசனை. ஏனோ அது நிறைவேற்றப்படவில்லை. பாடல் ஏற்கெனவே நீளமாக இருப்பதே காரணமாக இருக்கலாம்.

சரி, நான் எழுதிய பாடல் வரிகள், பாடலின் முறையான வடிவம் இதுதான். பாடலை இங்கே கேட்டுக் கொண்டே, வரிகளைப் படித்துக் கொள்ளுங்கள். கீழே வாருங்கள்… இன்னும் சில விஷயங்களை வைத்திருக்கிறேன்.

படம் : ஏதோ செய்தாய் என்னை

பாடல் : முகில்

Chorus வரிகள் : ஜார்ஜியானா

Opening

ராத்திரி நேரம் தூக்கம் எதுக்கு?

போதும் உறக்கம் – போர்வை விலக்கு.

இளமை இருக்கு! இரவைச் செதுக்கு!

Verse 1

Canteen

போகாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

போண்டாவில் வாய் வைக்க வேண்டாம்

டீ என்னும் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டாம்

டிரீட்டுன்னா கேன்டீனா? வேண்டவே வேண்டாம்

Verse 2

Hostel

தீராது விளையாட்டு தினமும்தான் இங்கே – திருட்டு

தம்முக்கும் பியருக்கும் என்றென்றும் பங்கே

எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் – கம்யூனிஸம்!

எல்லோரும் நம்ம சொந்தம் – ஹாஸ்டலிஸம்!

Verse 3

Exam

காக்க காக்க – காக்க காக்க – கைபிட்டு காக்க

நோக்க நோக்க – நோக்க நோக்க – Next Bench நோக்க!

Distinction வாங்கத்தான் அலையுது ஒரு குரூப்பு

Just Pass போதுமடா – சொல்லுறான் நம்ம மாப்பு!

Verse 4

Arrears

அரியர்ஸ் வெச்சா தப்பில்ல

அதை வைக்காத வாழ்க்கையிலே கிக் எதுவும் இல்லை

அரியர்ஸ் இல்லா ஸ்டூடண்ட் அரை ஸ்டூடண்ட்

அதை முடிக்காத ஸ்டூடண்ட் Ever ஸ்டூடண்ட்

Pre Chorus

Library புத்தகத்தில் Love Letter விதைப்போம்

Physics Labக்குள் Chemistry வளர்ப்போம்

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

Verse 5

Class Room

Class Room என்பது சட்டசபை போல!

வெளிநடப்பு செய்வதே தினம் எங்கள் வேலை!

போர்டில் உள்ள பாடத்தை நோட்டில் எழுத மாட்டோம்

நெஞ்சில் உள்ள காதலை Bench-ல் எழுதி வைப்போம்

Verse 6

Boys & Girls

Boys

எந்த ஃபிகருமே நல்ல ஃபிகருதான் லவ்வரா நினைக்கையிலே

அவ நல்லவளாவதும் கெட்டவளாவதும் Love Propose செய்கையிலே

Girls

எந்தப் பையனுமே ரொம்ப உத்தமன்தான் லவ் சொல்லும் போதினிலே – நாங்க

Yes சொன்ன பின்னாலே ஜொள்விட்டுப் போறானே இன்னொருத்தி பின்னாலே!

Pre Chorus

Collage Culturals – சைட் அடிக்கும் Carnival

Collage Election – Politics Practical

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

Interlude

Bridge

கட் அடிப்போம் சைட் அடிப்போம்

பிட் அடிப்போம் பியர் அடிப்போம்

ஆனாலும் படிப்போம் காலேஜை முடிப்போம்

மம்மி டாடி கனவை மறக்காம மதிப்போம்

Pre Chorus

ஆயிரந்தான் வந்தாலும் விலகாது நட்பு

ஆயுளுக்கும் நம்ம கைவிடாது நட்பு

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

***

சிடிக்களிலும் சரி, இணையத்தில் கிடைக்கும் பாடலிலும் சரி, சன் மியூஸிக்கில் ஒளிபரப்பப்பட்டதிலும் சரி, பாடலில் எந்தவித பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் இந்தப் பாடல் சென்சாரில் சிக்கித் தவித்ததாகக் கேள்விப்பட்டேன். தியேட்டருக்கு வரும்போது சில இடங்களில் மௌனமான வாயசைப்புடன்தான் பாடல் ஒலிக்குமாம்.

சட்டசபை குறித்த வரிக்கு ஆட்சேபணை தெரிவித்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அது பொய்த்தது.

அதில்லாமல் மூன்று இடங்களில் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்களாம்.

1. ராகிங் என்ற வார்த்தை பாடலில் வரக்கூடாதாம்.

2. திருட்டு தம், பியர் என்ற வார்த்தைகள் இருக்கக்கூடாதாம்.

3. கம்யூனிஸம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக்கூடாதாம்.

ராகிங் என்ற வார்த்தையின்றி கல்லூரி குறித்த பாடல் முழுமை பெறாது என்பதால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். தவிர, இந்தப் பாடல் மூலமாகத்தான் ராகிங், நம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. நேரடியாகவோ, இலைமறை காயாகவோ ராகிங் இன்றுவரை கல்லூரிகளில் ஓர் அங்கமாகத்தான் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது.

பாடலில் அடுத்து தம், பியருக்கு தடை போட்டிருக்கிறார்கள். அது இந்தச் சமூகத்துடனும் சினிமா காட்சிகளுடனும் பின்னிப் பிணைந்ததல்லவா. எனில், தற்போது வெளிவரும் படங்களில் பாதி காட்சிகள் வெட்டியெறியப்பட வேண்டுமே. திரையில் தோன்றி சிகரெட் பிடிக்கலாம், மது அருந்தலாம். அதற்கு ‘மது, புகை கேடு’ என்ற ரீதியான அறிவிப்பைப் போட்டுக் கொண்டால் போதுமானது. ஆனால் அவற்றை பாடலில் உபயோகித்தால் தெய்வ குற்றம் என்பதைப் புரிந்துகொண்டேன். நாட்டில்தான் புகை, மதுவை முற்றிலுமாகத் தடை செய்ய முடியவில்லை. டாஸ்மாக்கை வைத்துதான் அரசாங்கமே மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலாவது மது, புகை, ராகிங் உள்ளிட்டவை இன்றி புனிதப் பாடலாக வெளிவருவதில் எனக்கு சந்தோஷமே.

ஆனால் அடுத்த விஷயம்தான் எனக்குப் புரியவில்லை. இந்த ‘கம்யூனிஸம்’ என்ன பாவம் செய்தது? ‘எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் கம்யூனிஸம்’ என்பது பொதுவாகச் சொல்வதுதானே. அதில் என்ன பிரச்னை? கம்யூனிஸம் என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்வதன் பின்னணியில் உள்ள அரசியல் சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

தோழர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒருவேளை, யாருக்குமே புரியாத வகையில் டைலோமோ, டயோரியா, ங்கொக்கமக்கா, ங்கொய்யால வகையறா வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் கொண்டு பாடல் எழுதப்பட்டிருந்தால் ஆரத்தழுவி வரவேற்றிருப்பார்கள்போல.

பின்குறிப்பு :

1. இப்படியெல்லாம் சென்சார் கட் கிடைத்தால் அதை வைத்து ஏதோ சர்ச்சை கிளப்புவதும், படத்துக்கான பப்ளிசிட்டி தேடுவதும் சினிமாக்காரர்களின் இயல்பு. ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் விஷயத்தை என்னிடம் எளிமையாக எடுத்துச் சொன்ன நண்பர் கணேஷுக்கு என் நன்றிகள்.

2. திவாகர் என்ற நண்பரும் இந்தப் படம் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். அவர் எழுதிய ‘காதில் மட்டும் இன்பமா’ – ஏற்கெனவே பலரது காதுகளிலும் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்துவிட்டது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

 

சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள் (2)

11 ஜனவரி, புதன்கிழமை

* இன்றைக்கு பிளாட்பார வியாபாரிகள் மட்டுமல்ல; புத்தகக் காட்சி வியாபாரிகளுமே மழையைச் சபித்துக் கொண்டிருந்தார்கள். மாலை ஆறு மணிபோல ஆரம்பித்த மழை அடுத்த 45 நிமிடங்களுக்கு தாண்டவமாடியது. கண்காட்சிக் கூரையில் பல இடங்களில் ஒழுக ஆரம்பிக்க, புத்தகங்கள் நனைய ஆரம்பிக்க, வியாபாரிகளெல்லாம் புத்தகங்களைக் காப்பாற்ற அங்குமிங்கும் ஓட… பபாசி அடுத்த முறையாவது ஒழுகாத வண்ணம் கூரைகள் அமைக்கப் பாடம் கற்றுக் கொண்டால் சரி.

* பிளாட்பாரத்தில் இந்தமுறை இதுவரை எனக்கு எந்தப் பொக்கிஷமும் கிட்டவில்லை. இன்னும் ஓரிரு முறை சென்று மேய வேண்டும். காவ்யாவின் பல புத்தகங்கள் ரூ 20க்கும் ரூ 30க்கும் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

* இந்தியாவுக்கு முதல் தேவை என்ன? விவசாயத்தில் வளர்ச்சிதான் என்று எடுத்துச் சொல்வதுபோல கண்காட்சியின் முதல் ஸ்டாலாக ‘நவீன வேளாண்மை’ அமைந்திருப்பது சிறப்பு. அந்த ஸ்டாலுக்குள் சென்று புத்தகங்களைப் புரட்டும்போது, எங்கிட்டாவது குக்கிராமத்துல துண்டு நெலம் வாங்கி, சோளம் கம்புன்னு பயிறு செஞ்சு… அப்படியே கயித்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு காத்து வாங்கிட்டு… கூழு குடிச்சிட்டு…  நடந்தா நல்லாயிருக்கும்!

* நற்றிணை பதிப்பகத்தில் சட்டெனக் கவரும் அழகான அட்டைகளுடன் இந்த முறை பல புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். பிரபஞ்சனின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ’மயிலிறகு குட்டி போட்டது’ புத்தகமும், ‘துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்’ என்ற புத்தகமும் கவனம் கவருகின்றன.

* கோலிவுட்டில் அதிகப் பாடல்களை எழுதும் ரேஸில் சமீப வருடங்களில் முன்னணியில் இருக்கும் நா. முத்துக்குமாரின் புத்தகங்கள், அவரது ‘பட்டாம்பூச்சி’ பதிப்பகத்தில் கிடைக்கின்றன. அவருடைய பழைய கவிதைப் புத்தகங்களும் புதிய அட்டைகளுடன் ஈர்க்கின்றன.

* பொன்னியின் செல்வன் – கல்கி – இளைஞர் பதிப்பு – என்ற அந்த நூலைப் பார்த்ததும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அட்டையில் விஜயும் சூர்யாவும் ராஜா கெட்-அப்பில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லா விழாக்களிலும் பரிசளித்து மகிழ மலிவு விலையில் மகத்தான காவியம் – என்று வேறு அட்டையில் போட்டிருந்தார்கள். (விலை ரூ. 100 என நினைவு.) அதாவது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களைச் சுருக்கி, இளைஞர்கள் சட்டென படித்து முடித்து வகையில் ஒரே பாகமாக வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே. சுப்பிரமணியன் என்பவர். ஓய்வுபெற்ற ஆசிரியராம். இன்றைய தலைமுறை இளைஞர்களிடமும் பொன்னியின் செல்வனைக் கொண்டு செல்ல இந்த முயற்சியாம்! லாப நோக்கின்றி சேவை நோக்கில் செய்யப்பட்டதாம்! அவரை வாழ்த்துவதா, திட்டுவதா?

* இன்றும் வாழும் சோழ மன்னர்கள், இன்றும் வாழும் பல்லவ மன்னர்கள் – என சோழ, பல்லவ வாரிசுகள் குறித்த ஆவணப் படங்கள் ரூ. 50 விலையில் இரண்டு சிடிக்களாக தென்பட்டன.

 

 

 

 

 

 

 

* எல்லா புத்தகக் காட்சியிலும் ஹீரோவாக வலம் வரும் சே குவாரா, இந்த முறை படக்கதை வடிவில் (மொழி பெயர்ப்பு புத்தகம்) நல்ல ஓவியங்களுடன் கிடைக்கிறார். கவனம் கவர்ந்த இன்னொரு படப் புத்தகம் – கார்டூனாயணம். அண்ணா குறித்து வெளிவந்துள்ள கார்ட்டூன்களின் தொகுப்பு. தொகுப்பாளர்களில் ஒருவர் டிராஸ்கி மருது.

* மதி நிலையத்தில் பாராவின் குற்றியலுலகம் முதல் 1000 பிரதிகளைக் கடந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிந்துகொண்டேன். சொக்கன் எழுதிய விண்டோஸ் 7 கையேடு – பலரது கவனத்தையும் ஈர்க்கும் புத்தகமாக அமைந்துள்ளது.

* விகடனில் டாப்பில் இருப்பது பொன்னியின் செல்வன். அடுத்தடுத்த இடங்களை சுகாவின் மூங்கில் மூச்சு, நா. முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில், விகடன் பொக்கிஷம், காலப்பெட்டகம் போன்றவை பிடித்த்துள்ளன. கிழக்கிலும் சுகாவின் தாயார் சந்நிதி வேகமாக விற்று வருகிறது. நல்ல எழுத்தாளர்களின் ஊர் சார்ந்த அனுபவங்களை வாசகர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

* சென்ற முறை கிழக்கில் 80 பிரதிகளுக்கும் மேல் விற்ற அகம் புறம் அந்தப்புரம் (ரூ. 950), இந்தமுறை விற்பனைக்கு இல்லை. ஸ்டாக்கில் இருந்த ஐந்து புத்தகங்களும் ஓரிரு நாள்களிலேயே விற்றுவிட்டன.

* தென்னிந்தியப் பதிப்பகத்தில் – காமிக்ஸ் பிரியர்களின் ஆதரவால் எப்போதும் கூட்டம்தான். கிங் விஸ்வா மொத்தமாக அள்ளிச் செல்வோர் அனைவரையும் போட்டோ எடுத்துக் கொள்கிறார். நானும் ஒரு செட் வாங்கிவிட்டேன். உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள். லயன் ComeBack எடிசனும் வந்துவிட்டது.

* இந்தப் புத்தகக் காட்சியில் நான் கவனித்த ஒரு பொதுவான விஷயம் : வாசகர் கூட்டம் குறையவில்லை. அவர்கள் வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம். அதாவது கடந்த ஆண்டுகளில் ஒரு வாசகரால் 500 ரூபாய்க்கு 5 புத்தகங்கள் வாங்க முடிந்ததென்றால், இந்த ஆண்டு அதே 500 ரூபாய்க்கு 3 புத்தகங்கள்தான் வாங்க முடிகிறது. புத்தகங்களின் விலையேற்றம்தான் காரணம். புத்தகங்களின் விலையேற்றத்துக்குப் பல காரணங்கள்.

* ஒரு ஸ்டாலில் நடந்த உரையாடல் :
‘ஆர்னிகா நாசரோட விஞ்ஞான நாவல்லாம் உங்ககிட்ட இருக்கா?’
‘ஆர்னிகா நாசர், எங்ககிட்டதான் எல்லா கதையும் கொடுத்து வைச்சிருக்காரு. விஞ்ஞான கதைகள் நாங்க போடல. யோசிக்கணும்.’
‘எப்போ கொண்டு வருவீங்க?’
‘யாரு வாங்குவா? அவரென்ன சுஜாதாவா? அந்தளவு மார்க்கெட் இல்லியே.’
‘ஓ… சரி, எந்திரன் கதை தன்னோடதுன்னு கேஸ் போட்டாரே. என்னாச்சு?’
‘சங்கரு தாத்தாவாகுற வரை அந்தக் கேஸு நடக்கும்.’