லீலை!

எதிர்பாராமல் பெய்த மழையில் நனைந்த சந்தோஷம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரசனையான பாடல்களின் வரத்து மிகவும் குறைந்துபோன இந்த நாள்களில், லீலை – குளுமையாக வந்திருக்கிறது.

சதீஷ் சக்கரவர்த்தியின் (அறிமுக இசையமைப்பாளர்?) இசையில் எந்தப் பாடலுமே காதுகளைப் பதம் பார்க்காமல், இதமாக இருப்பது சிறப்பு.

ஜில்லென்று ஒரு கலவரம் – பாடலை இசையமைப்பாளர்தான் பாடியிருக்கிறார். எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தாலும் இரண்டாவது பல்லவியில் வித்தியாசப்படுத்தி பாடலுக்கு புது நிறம் கொடுத்துவிடுகிறார்.

ஒரு கிளி ஒரு கிளி – இசையமைப்பாளருடன் ஷ்ரேயா கோஷலின் காந்தர்வக் குரல் (அப்படின்னா என்னான்னு கேட்கக்கூடாது!) இதமான டூயட். மெலடி. நிலைத்திருக்கும்.

பொன்மாலைப் பொழுது – பாடல் பென்னி தயாளின் குரலில் அழகு. Summer, Winter, Autumn என்ற வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் அப்படியே பொருத்தமாக உபயோகித்திருக்கிறார்கள். உறுத்தவில்லை.

உன்னைப் பார்த்த பின்பு – காதல் சோகப்பாடல் ஸ்பெஷலிஸ்ட் ஹரிசரணின் குரலில். நிச்சயமாக வரவேற்பைப் பெறும். இந்தப் படத்தின் நம்பர் 1 பாடல் இதுவே.

படத்தில் வரும் இளமை, காதல் தளும்பும் மூன்று பாடல்களுக்குச் சொந்தக்காரர் வாலி. இவருக்கு மட்டுமே நரைகூடிய பின்னும் வாலிபப் பருவம் திரும்பும் வரம் வாய்த்திருக்கிறது.

பபுள் கம் என்றொரு பாடல். பா. விஜய் வரிகளில். திருஷ்டி.

மழை பெய்து முடித்தபின் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரியும் புல்வெளி போல படத்தில் புகைப்படங்களும் டிரைலரும் ப்ரெஷ்ஷாக இருக்கின்றன. காத்திருப்போம்.

அல்கா – குட்டி சித்ரா!

நடந்து கொண்டிருக்கும் விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 – தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் பாடுவதால் ரசிப்பதற்குரிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. பயம், வெட்கம் ஏதுமின்றி அசால்ட்டாக வந்து பாடிவிட்டுப் போகும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் சிறுவயதில் எவ்வளவு தத்தியாக இருந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஏங்குவதை ஏனோ தடுக்க முடியவில்லை.

ஆனாலும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பொண்ணு எல்லாம் எப்படி தைரியமா பாடுது.. நீயும் இருக்கியே? எப்பப்பார்த்தாலும் கேம்ஸ் மட்டும்தானா? பாட்டுக் கத்துக்கச் சொன்னா கத்துக்கறியா?’ என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தாமல் இருந்தால் சரி.

இந்த ஸீஸனில் என்னைக் கவர்ந்த குழந்தைகள் மூவர். மூன்றாவது குழந்தை நித்யஸ்ரீ. தைரியமாகப் பாடும் குணமே இந்தக் குழந்தையின் பெரிய ப்ளஸ். குத்துப் பாட்டு ரகங்களுக்குப் பொருத்தமான கணீர்க் குரல். துறுதுறுவென ஆடிக் கொண்டே பாடுவது தனி அழகு. மேலும் சில சுற்றுகள் வரை நித்யஸ்ரீ தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு.

நித்யஸ்ரீயை ரசிக்க.

இரண்டாவது – ஒரு சிறுவன். ஸ்ரீகாந்த். இந்த ஸீஸனில் எல்லாருக்குமே செல்லம் இந்தச் சிறுவன்தான். போட்டியாளர்களிலேயே ஜூனியர். கடினமான பாடல்களையும் அசால்ட்டாகப் பாடும் ஸ்ரீகாந்தை சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவன் பாடும்போது பிசிறுகள் தெரிந்தால்கூட அது கேட்பவர்களுக்கு உறுத்துவதில்லை. தங்கள் மகன் பாடும்போதும் சுட்டியாகப் பேசும்போது அந்தப் பெற்றோர்கள் பெருமிதத்தில் வெளிப்படுத்தும் முக பாவனைகள் அழகு. இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை மிகவும் ஜூனியரான ஸ்ரீகாந்த் வருவான் என்று சொல்ல முடியாது. ஆனால் வருங்காலத்தில் ஸ்ரீகாந்த் நிச்சயமாக ஒரு நட்சத்திரம்தான். (ஸ்ரீகாந்த் பாடிய பாடல் ஒன்று)

இந்த ஸீஸனில் நான் அதிகம் ரசிக்கும் பெண் குழந்தை அல்கா அஜீத். இன்னொரு அனகா என்றுதான் சொல்வேன். வாராவாரம் அல்கா எப்போது பாடுவாள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். எனது மொபைலை இப்போது அல்கா பாடிய வீடியோ க்ளிப்பிங்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. கண்டிப்பாக இறுதிச் சுற்றுவரை வரக்கூடிய திறமை கொண்ட பெண். மேற்கொண்டு நான் சொல்வதைவிட, அல்கா பாடுவதை நீங்களே கேளுங்கள்.

பாடல் 1

பாடல் 2

மேலும் இரண்டு வீடியோ – டௌன்லோட் செய்ய.

நிகழ்ச்சியின் நடுவர்கள் மனோ, சித்ரா, மால்குடி சுபா. குழந்தைகளை முதலில் பாராட்டிவிட்டு, அவர்களைக் காயப்படுத்தாதபடி விமரிசனங்களை முன் வைக்கிறார்கள். குறைகள் சொல்லுவதைவிட, குழந்தைகள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக யோசனைகள் சொல்கிறார்கள். குறிப்பாக மனோ, நிகழ்ச்சியைக் கலகலப்பாக கொண்டு செல்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதுவரை வந்தவர்களிலேயே சூப்பர் ஜட்ஜ் மனோதான்.

கமலஹாசனின் குடும்பப் பாடல்!

லக் – முதல் ஹிந்தித் திரைப்படத்தில் ஷ்ருதிஹாசனுக்கு பேட் லக். அடுத்த அவதாரம், தந்தையின் படத்தில் இசையமைப்பாளராக. பாடல்கள் எப்படி இருக்கின்றன?

ஷ்ருதிஹாசன், அக்சரா, சுப்புலட்சுமி, கமலஹாசன் என்று எல்லோருடைய குரல்களும் உன்னைப் போல் ஒருவன் பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதுதான் குடும்பப்பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கௌதமியின் குரல் மட்டும்தான் கேட்கவில்லை. அதுகூட எந்தப் பாடலிலாவது கோரஸாக ஒலித்திருக்கிறதா என்று பிரித்துணர முடியவில்லை.

அல்லா ஜானே… கமலஹாசனின் குரல். பல்லவி நன்றாக இருக்கிறது. முதல் சரணத்தில் கமல் பாடும்போது ஏதோ வேண்டுமென்றே குரல் மாற்றி பாடுவதுபோலத் தெரிகிறது. மொத்தத்தில் இந்தப் பாடல் இந்த ஆல்பத்தின் நெம்பர் ஒன் பாடல்.

அல்லா ஜானே ரீமிக்ஸ்… ஷ்ருதிஹாசனின் குரலில். சிக்னலில் ஆரஞ்சிலிருந்து ரெட்டுக்கு மாறுவதற்குமுன் வேகமாக வண்டியில் கடந்துபோவதுபோல உச்சரிப்புகளில் வேகம். ரசிப்புக்குரியதாகப் படவில்லை. ஆல்பத்தில் எண்ணிக்கைக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

நிலை வருமா? – அடுத்த பாடல். பாம்பே ஜெயஸ்ரீ, கமலின் குரல்கள். கேட்கக் கேட்க ஒருவேளை பிடிக்கலாம். நின்றே கொல்லும் தெய்வங்களும் – இன்றே கொல்லும் மதப்பூசல்களும் – ஒன்றே செய்யும் என உணரும் – நன்றே செய்யும் நிலைவருமா? – யாருடைய வரிகள்? ஏதோ ஒரு பிரபல எழுத்தாளர் தான் ஷ்ருதிஹாசனின் இசையமைப்பில் பாடல் எழுதுவதாக குமுதத்தில் மகிழ்ச்சி பிதுங்க பேட்டி கொடுத்ததாக ஞாபகம். அது ‘அல்லா ஜானே’ என்று சக நண்பர்கள் சொல்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் – தீம் மியூஸிக். சம்பவானி யுகே யுகே என அடிக்கடி ஒலிக்கிறது. ‘ஐ ஆம் தி நியூ ஃபேஸ் ஆஃப் டெரர்!’ என்று பல குரல்கள் வசனம் பேசுகின்றன. இது இந்து தீவிரவாதத்தைக் குறிக்கும் பாடல் என்று யாராவது களமிறங்கி பாடலுக்கு பாப்புலாரிட்டி கொடுக்காமலிருந்தால் சரி.

வானம் எல்லை – ப்ளாஸேவின் கரடுமுரடு RAP-ல் ஷ்ருதிஹாசனுக்கு அறிமுகம் கொடுத்து ஆரம்பமாகிறது பாடல். ஷ்ருதியின் குரல் ஸ்டைலிஷாக வெளிப்பட்டிருக்கிறது. மற்றபடி பாடல் பத்தோடு பதினொன்று.

கமலஹாசன் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்கிறார் என்றால் முதலிலேயே அதன் மூலப்படத்தை பார்த்துவிடுவேன். வசூல்ராஜாவின் அறிவிப்பு வந்த உடனேயே முன்னா பாய் பார்த்து விட்டேன். வசூல்ராஜா எத்தனை முறை பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படுத்தாத படம். காரணம் கிரேஸி மோகன். ஆனால் முன்னா பாய் அளவுக்கு வசூல் ராஜாவில் சில காட்சிகளில் அழுத்தம் இல்லை என்பதே என் கருத்து.

உன்னைப் போல் ஒருவனின் மூலப்படமான தி வெட்நெஸ்டே பார்த்துவிட்டேன். அது மிகவும் பிடித்தது. பார்க்கலாம். அது அதுவாகவே வருகிறதா அல்லது கமலின் வாசனையோடு புதிதாக வருகிறதா என்று.

குருதிப்புனல்போல இந்தப் படத்துக்கும் பாடல்கள் தேவையில்லை. ஆல்பத்தில் தீம் மியூஸிக், ரீமிக்ஸ் தவிர மூன்று பாடல்கள் இருக்கின்றன. A Shruthi hassan Musical என்று போடுவதற்காக இருக்கலாம். ரீரெகார்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பாடல்களில் ஷ்ருதிஹாசன் ஈஸியாகப் பாஸ் செய்துவிட்டார். ஆனால் எந்தப் பாடலுமே உருக்கவும் இல்லை, அதே சமயம் உறுத்தவும் இல்லை.

குஹாவும் ரஹ்மானும்

ஞாயித்துக்கிழமை (ஆகஸ்ட் 2) ரெண்டு முக்கியமான விஷயம் நடக்க இருக்குது.

இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 (India After Gandhi) – ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகத்தின் அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பு – நாளை வெளியீட்டு விழா.

நேரம் : காலை 11 மணி, ஆகஸ்ட் 2, 2009

இடம் : நுங்கம்பாக்கம் அபெக்ஸ் பிளாஸா லேண்ட் மார்க்.

சிறப்பு விருந்தினர் : ராமச்சந்திர குஹா மற்றும் நீங்கள்.

மறக்காம வந்துருங்க நண்பர்களே.

அடுத்த விஷயம், ஞாயிறு பகல் 12 – 1 ஒளிபரப்பாகிற கிழக்கு பாட்காஸ்ட் சம்பந்தப்பட்டது.

ஆஹா FM 91.9ல இந்த வார டாபிக் ஏ.ஆர். ரஹ்மான்.

என். சொக்கன் எழுதி தமிழ்ல முதல் முறையா ஏ.ஆர். ரஹ்மானோட வாழ்க்கை புத்தகம் வெளியாகி இருக்கிறது. ரஹ்மான் குறித்து நிகழ்ச்சில நம்மகூட பேசப்போறது சொக்கனும், தமிழ் சினிமா ஆய்வாளருமான பா. தீனதயாளனும்.

அன்னிக்கு நிகழ்ச்சி ரஹ்மான் பற்றி இருந்தாலும், பேசுனதுல பாதிக்குமேல் ராஜா Vs ரஹ்மான் – ஒப்பீடாகவும் சர்ச்சைகளாகவும்தான் போச்சுது. அதுவும் நிகழ்ச்சிக்கு இடையில ‘இளையராஜாவின் முரட்டு பக்தர்’ ஐகாரஸ் பிரகாஷ் போன் பண்ணி, வெறித்தனமா ஒரு கேள்வி கேட்டு சொக்கனை மிரட்டினார். அப்புறம் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துல பாடுன பாடகி ஸ்ரீமதுமிதாவும் போன் வழியா நிறைய பேசினாங்க, பாடுனாங்க.

மொத்தத்துல ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அந்த கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ரொம்ப சுவாரசியமாகவே அமைஞ்சுது. நாளைக்கு பகல் 12-1, ஆஹா 91.9, கேட்க மறந்துடாதீங்க.

அப்பன் மவனே! அருமை யுவனே!

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில்.

சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.

யுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும்  மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி  ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்!)

மூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம்  படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.

அடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம்  பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால்  மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே! அருமை யுவனே! ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா?

ஓவர் டூ அப்பன்! வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச  காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா  பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான  இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக  ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று  சொல்லலாம்.

இந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு  மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி  ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.

ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே!
லிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,
தத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே!
…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி
– இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.

நாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின்  இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக்  காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும்  சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல  முடியும்போல.

கார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

மோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத்  தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் –  என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு  பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் – சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.

ஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது?

தனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.

பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா? இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.

தாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில்  அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே  வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் –  கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.

அங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ  காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – பாடல்.  கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று  தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச்  சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.

(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?)